2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மொஹான் பீரிஸை நான் அச்சுறுத்தவில்லை: அசாத்

Gavitha   / 2015 ஜனவரி 28 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கவிதா சுப்ரமணியம்

44ஆவது பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸின் வீட்டுக்குச் சென்று, அவரை அச்சுறுத்தியதாக, எனக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடானது உண்மைக்கு புறம்பானது என்று  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார்.

ஜப்பானிலுள்ள எனது நண்பரொருவர் மொஹான பீரிஸை சென்று பார்த்து வரச்சொன்னார். அதன் பின்னரே நான் அவரது வீட்டுக்குச் சென்றேன். நான் அவரை அச்சுறுத்தவில்லை என்பதை நிரூபிக்க அனைத்து சாட்சியங்களும் என்னிடம் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை (28) கொழும்பில் நடைபெற்றது.

அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை எனக்கு 20 வருடகாலமாக நன்றாக தெரியும். அவருடைய வீடு ஜனாதிபதி மைத்திரிபாலவின் வீட்டுக்கு அருகில் உள்ளது என்பதை நான் சமீபத்தில்தான் அறிவேன்.

என்னை அவருடைய வீட்டுக்கு வருமாறு இரு முறை என்னை  அழைத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று செவ்வாய்க்கிழமை (27) மாலை அவரது வீட்டுக்கு நான் சென்றேன். அவரது பாதுகாவலர்கள்தான் என்னை அவரது வீட்டின் உள்ளே அழைத்துச்சென்றார்கள்.

அவர், பிறிதொரு கூட்டத்தை நடத்தி கொண்டிருந்தமையால்  அவருக்காக சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தேன்.

பின்னர், நான் அவருடன் கலந்துரையாடினேன். தற்போதைக்கு தன்னால் இராஜினாமா செய்ய முடியாது, ஓய்வூதியத்தை சரி செய்துகொள்ள வேண்டும். எனக்கென வீடொன்று இல்லை. எனவே, ஆகஸ்ட் மாதம் வரை நான் பதவியில் இருக்கின்றேன். இது குறித்து ஜனாதிபதியுடம் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கித்தாருங்கள் என்று கேட்டார்.

இன்று (நேற்று) செவ்வாய்க்கிழமை (27) இரவு 9.30 மணிக்கு ஜனாதிபதியுடன் பேச்சுவாரத்தை நடத்துவதற்கு நேரமும் ஒதுக்கியிருந்தேன்.

ஆனால், இப்படி என்மீது அவர் பழி சுமத்துவார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அப்படி நான் அச்சுறுத்தியிருந்தால், அவரது பாதுகாவலர்கள் 119 அவசர இலக்கத்துக்கு அழைத்திருக்க முடியும் இல்லையேல் அவர்கள் என்னை கைது செய்திருக்கவும் முடியும். ஏன் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்தே அது பொய்யென்பது தெரியவருகின்றது' என்று தெரிவித்தார்.'


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X