2021 மே 08, சனிக்கிழமை

கிழக்கு பட்ஜெட் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றம்

Gavitha   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்


இரண்டு மாதங்களாக இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு - செலவுத்திட்டம், சபையில் இடம்பெற்ற பெரும் அமளியை அடுத்து, சகல கட்சிகளின் ஆதரவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.


இந்த  வரவு - செலவுத்திட்டத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் சமர்ப்பித்தார். வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 34 வாக்குகள் அளிக்கப்பட்டன. இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்காத நிலையில், இந்த வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.


கிழக்கு மாகாண சபை அமர்வு சபையின் தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமர்வின்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கும் சபையில் உரையாற்ற சுமார் 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி தனது உரையில், 'உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் 3 மில்லியன் ரூபாவை, 4 மில்லியன் ரூபாயாக  வழங்கிவைக்க வேண்டும்' என்ற கோரிக்கையினை புதிய முதலமைச்சரிடம் முன்வைத்தார்.


அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சியின் குழுத் தலைவர் தயா கமகே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் கட்சியையும் பற்றி பேசியபோது, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், தவம், லாஹீர், மன்சூர், அன்வர் ஆகியோர்களுடன் முதலமைச்சரும் இணைந்து அவரின் உரைக்கு கண்டனம் வெளியிட்டனர்.


இதன்போது சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து சபையின் நடவடிக்கைகள் யாவும் தவிசாளரினால் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபையின் வரவு - செலவுத்திட்டம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X