2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நெடியவன் உள்ளிட்ட 96 பேருக்கு அபாய அறிவிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் உட்பட 96 இலங்கையர்களை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 96பேரில் 40பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொணடவர்கள் என்றும் ஏனைய 56பேரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதி முதல் இன்றுவரை கைது செய்யப்பட்ட 100பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் என்பவர் தற்போது நோர்வேயில் மறைந்திருப்பதாக இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலை அடுத்தே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நெடியவன் முயற்சித்து வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுங்கேணியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூவரும் நெடியவனின் ஆலோசனைக்கமையவே செயற்பட்டு வந்துள்ளனர் என்றும் இலங்கை புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 
தாக்குதல் அல்லது குண்டுத் தாக்குதல் ஒன்றின் மூலம், இலங்கையில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பவை வெளி உலகுக்கு காட்டுவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுள்ளனர் என்றும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தை உயிர்ப்பித்து செயற்படுத்துவதற்கான நிதி திரட்டல் நடவடிக்கையின் பின்னால் நெடியவனே உள்ளார் என்றும் இவ்வாறு திரட்டப்படும் நிதியின் மூலம் புலிகள் இயக்கத்தினர் மறைந்திருப்பதற்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு மேலும் கூறியுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--