2021 மே 06, வியாழக்கிழமை

ஆரம்பமானது அக்கினிப் பரீட்சை

Thipaan   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. தெய்வீகன்

இலங்கைக்கு எதிராக கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த சர்வதேச அழுத்தங்களுக்கு கடந்த வாரம் ஜெனீவாவில் வைத்து முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெற்காசிய பிராந்தியத்தில் இடம்பெற்ற கொடிய மீலேச்ச யுத்தம் ஒன்றில் மிகப்பயங்கரமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதியை, அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இலங்கை அரசிடமிருந்துதான் பெற்றுக்கொள்ளவேண்டிய விடயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம், குற்றச்செயல்களுக்கு நேரடியாகவும் உடனடியாகவும் பொறுப்புக்கூறவேண்டிய இலங்கை அரசாங்கம் அது இழைத்த போர்க்குற்றங்களிலிருந்தும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களிலிருந்தும் சர்வதேச சமூகத்தினால் பிணையெடுக்கப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவேண்டிய பொறுப்புடைய உயர்சபையான ஐ.நா., தனது சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு நீதியை எட்டவேண்டிய தீர்க்கமான வழியை தனது விதந்துரைகளாக முன்வைத்தபோதும், தங்களது நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலின் ஊடாக மட்டும் இதனை நோக்கியதன் மூலம் அந்த விதந்துரைகளுக்கு முற்றிலும் மாறான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிக் கண்துடைப்பை செய்துமுடித்திருக்கிறது மேற்குலகம்.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் கோரிய அதேயளவு நீதியை வழங்காவிட்டாலும்  மனித உரிமைகள் சார்ந்து பார்க்கும்போது இதில் மேற்குலகம் தவறிழைத்திருந்தாலும் அமெரிக்கா உட்பட அதன் உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மானத்தினை நிறைவேற்றியிருக்கும் அரசியல் - இராஜதந்திர வழியின் ஊடாகச் சென்று இந்த விவகாரத்தை ஆராய்வோமானால், இது விடயத்தில் கணிசமான சாதகங்களும் அடங்கியிருப்பதை மறுக்கமுடியாது.

இதனை மேலும் விளக்கமாகக் கூறுவதானால், பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமை விவகாரத்தை அரசியல் தராசில் வைத்து எடைபோட்டு நீதிவழங்குவது என்று சர்வதேச சமூகம் முடிவெடுத்தபின்னர், வேறு மார்க்கமில்லாத ஒரு பலமற்ற சமூகம், அதே அரசியல்வழியில் சென்றுதான் இந்த நீதியை வென்றெடுக்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், நீதியை வழங்குவதற்கு கட்டளையிடப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் நிலை என்ன என்பதை ஆழமாக நோக்குவது இங்கு அவசியமாகிறது.

போரின் இறுதிக்கட்டத்தின் இலங்கை அரசாங்கப் படைகள் மேற்கொண்ட மிருகத்தனமான படுகொலைகளையும் இரத்தவெறியாட்டங்களையும் ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவந்தபோது, அவற்றை மஹிந்த தலைமையிலான இலங்கை அரசு அடியோடு மறுத்தது. சோடிக்கப்பட்ட காணொளிகள் என்றும் தமக்கு எதிராகச் செய்திவெளியிடும் சர்வதேச ஊடகவியலாளர்கள் அனைவரும் பொய்யர்கள் என்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களைத் துரோகிகள் என்று முத்திரைகுத்தியது.

ஆனால், அவற்றின் உண்மைத்தன்மைகள் அனைத்தையும் உறுதிசெய்து, தம்மை விசாரணைக்குச் செல்லவிடாமல் கதவடைத்தாலும் தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு கணிசமான உண்மைகளை கண்டறிந்து, கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி, சகல ஆதாரங்களுடனும் தனது விசாரணை அறிக்கையை முன்வைத்தது ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு.

முன்னர், மஹிந்த அரசு மறுத்த அனைத்துக் குற்றங்களையும் தற்போது ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு. ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள இந்த அறிக்கைதான் தமிழர்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கான படிக்கல்லாக அமையப்போகிறது. இந்த அறிக்கையையும் இந்த அறிக்கையின் பின்னர் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினையும் தமிழர் தரப்பு முழுமையாக ஏற்றுக்கொண்டு ஓரளவுக்கு திருப்தி வெளியிடாவிட்டாலும்கூட, இலங்கையின் தீவிர சிங்கள தரப்புக்கள் இந்த அறிக்கையையும் தீர்மானத்தினையும் இன்னொரு கோணத்திலிருந்து முற்றாக நிராகரித்திருக்கின்றன.

போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றியவரும் மஹிந்த அரசாங்கத்தின் தீவிர விசுவாசியும் இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக அரசியல் பத்திகளை எழுதி வருபவரும், ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆதரவாளராக இருந்தவருமான தயான் ஜெயதிலக்க, ஜெனீவாவில் நடைபெற்றுமுடிந்த சம்பவங்கள் தொடர்பாக தனது கடுமையான கோபத்தை வெளியிட்டிருக்கிறார்.  மைத்திரி - ரணில் கூட்டு அரசு, சர்வதேச சமூகத்திடம் இலங்கைவை விற்றுவிட்டது. மிகப்பெரிய தேசத்துரோகத்தைச் செய்துவிட்டது என்று சீறியிருக்கிறார்.

'உலகத்திலேயே மிகப்பெரிய பயங்கரவாத அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான போர் நடவடிக்கை, இன்று சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. எமது போர்வீரர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் தனது அறிக்கையில் எமது போர்வெற்றியைப் போர்க்குற்றமாக வர்ணித்து போட்டுத்தாக்கியிருக்கிறார். அவர் விதந்துரைத்துள்ள விடயங்கள் அனைத்தும் எமது நாட்டுக்கு பயங்கர ஆபத்துநிறைந்தவை. அந்த அறிக்கை ஒரு நச்சுப்பழம்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்கூட, மிக மிக ஆபத்துநிறைந்தது. இவ்வாறான ஒரு வெளிநாட்டு- உள்நாட்டு நீதிப்பொறிமுறைதான், ஈராக்கைக் கைப்பற்றிய பின்னர் அங்கு அமெரிக்கா ஏற்படுத்தியது. தாங்கள் கைப்பற்றிய நாடுகளிலும் தங்களது கட்டுப்பாட்டில் இயங்கும் நாடுகளிலும் அமெரிக்கா நடைமுறைப்படுத்தும் மிகவும் ஆபத்தான பொறிமுறைதான் இந்தக் கலப்பு நீதிக்கட்டமைப்பு நாடகம்.

இந்தக் கட்டமைப்பின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமல்ல போரில் ஈடுபட்ட இராணுவத்தினரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். இலங்கையிலும் அதுதான் நடைபெறப்போகிறது. தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய கரும்புலிகளின் மனித உரிமைகள் குறித்தும் இவர்கள் கரிசனையுடன் விசாரணை நடத்தப்போகிறார்கள். அதனை இலங்கை அரசாங்கம் வரவேற்று மனம்மகிழ்ந்திருக்கிறது.

தமிழர் தரப்புக் கொடுத்த அழுத்தத்துக்கு மாறாக தமக்கு மேற்குலகம் நன்மை செய்துவிட்டதாக மகிழ்ச்சியடையும் இலங்கை அரசு, தனது கழுத்தில் விழுந்திருப்பது மாலை அல்ல தூக்குக்கயிறு என்பதை உணராமலிருப்பது வேதனைக்குரியது.

ஐ.நாவின் இந்த அறிக்கையிலிருந்து எத்தனையோ வழிகளிலிருந்து தப்பியிருக்கலாம். இந்த அறிக்கையை முற்றாகப் படித்து தமது தரப்புப் பதிலைக் கூறுவதற்கு இலங்கை அரசு கால அவகாசத்தைக் கோரியிருக்கலாம். அந்தக் காலப்பகுதியில், சமாந்தரமான உறுதியான உள்நாட்டு விசாரணை ஒன்றை மேற்கொள்வதன் மூலம் மேலதிக சர்வதேச அழுத்தங்களைத் தவிர்த்திருக்கலாம். தற்போது, உலகத்தையே ஆட்டிப்படைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டி அதுபோன்ற ஒரு பயங்கரவாதத்தை வெற்றியீட்டியதைச் சர்வதேச அளவில் தண்டிப்பது, பிழையான உதாரணம் என்பதை எடுத்துக் கூறியிருக்கலாம்.

ஆனால், இவை எதனையும் செய்வதற்கு அரசாங்கம் சிந்திக்கக்கூடவில்லை. எடுத்த மாத்திரத்திலேயே மேற்குலகத்துக்கு 'ஆமா' போடுவதற்கு முடிவெடுத்துவிட்ட ரணில் அரசு, முன்னர் புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலமும் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை வழங்குவதன் ஊடாகவும் செய்த துரோகத்தை மீண்டும் செய்துமுடித்திருக்கிறது.

எமது நாடு, சர்வதேச சமூகத்தின் முன்னால் இவ்வளவுதூரம் மண்டியிட்டதை எனது வாழ்நாளில் பார்க்கவில்லை. சுருக்கமான சொன்னால், சுவிஸிலும் ஜேர்மனியிலும் புலிக்கொடியுடன் போராட்டம் செய்யும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஜெனீவாவில் பெருவெற்றியீட்டியிருக்கிறார்கள்' என்று கன்னா பின்னா என்று தனது கருத்துக்களை பொரிந்துதள்ளியிருக்கும் தயான் ஜெயதிலக்க, தீவிர பொளத்த தேசியவாதிகளின் உணர்ச்சிகளை உசுப்பேற்றிவிடுவதற்கு உடுக்கு அடித்துவிட்டிருக்கிறார்.

தென்னிலங்கையில் மஹிந்த ஆதரவு தரப்புக்களும் இதுவிடயத்தில் தமது தரப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. தீர்மானத்துக்கு எதிராக தாம் இன்னொரு தீர்மானத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கிறது ஒரு கோஷ்டி. இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறது இன்னொரு கோஷ்டி. இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது மற்றொரு கோஷ்டி.

இந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில்தான் தனது அக்கினிப் பரீட்சையை நிறைவேற்றவேண்டிய கடப்பாட்டுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. தமிழர் தரப்புக்கான தீர்வினை வழங்குவதில் தென்னிலங்கையில் உள்ள தீவிர பௌத்த தேசியவாத தரப்பினருக்கும் என்றைக்குமே ஒத்த கருத்து இருந்ததில்லை. ஆட்சியிலிருந்த தரப்புக்கள் அனைத்தும் கடந்த காலங்களில் இதனைத்தான் காரணம் காட்டிக் காட்டி தமது அரசியலை ஓட்டி வந்திருக்கிறார்கள். ஆகவே, தற்போது எழுந்திருக்கும் எதிர்ப்பு ஒன்றும் புதியதல்ல.

ஆகவே, மைத்திரிபால சிறிசேன இது விவகாரத்தில் தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்வதற்கு முனைப்படைந்தால் அது இலங்கைவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக அமையும். இதுவரைகாலமும், சிங்கள ஆட்சிப்பீடத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டவர்கள் எல்லோரும் தமது நிறைவேற்று அதிகாரம்கொண்ட பதவிகளை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதன் ஊடாகத்தான் நாட்டுநலன்களை நோக்கினார்கள்.

ஆனால், பதவியேற்ற முதல்நாளே தனக்கு இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக நீடிக்கும் எண்ணமில்லை என்று அறிவித்தவர் மைத்திரி. அந்த அடிப்படையில், ஜனாதிபதியாகப் பதவிவகிக்கும் அவரது ஆட்சிக்காலத்தில், அவர்கூறும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவல்ல உறுதியான இறுதியான தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அவர் முன்வரவேண்டும்.

ஆட்சிக்கு வந்தபோது அறிவித்த நூறு நாட்கள் திட்டத்தினுள் அவர்நினைத்தது போலவும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ஆதரவாகவும் அடுத்தடுத்து திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மைத்திரியால் முடியுமென்றால், அவரை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு பெரும்பங்கு வகித்த தமிழர் தரப்பினது மனவடுக்களுக்கு மருந்தளிக்கவும் நீதியான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அவருக்குப் பாரிய பொறுப்புள்ளது என்பதை அவர் உணரவேண்டும். உணர்வாரா? உணர ரணில் விடுவார? தமிழ் மக்கள் இன்னமும் பொறுமையுடன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .