2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இழுபறியிலுள்ள ஹக்கீம் - ஹசன் அலி சமரசம்

Thipaan   / 2016 மே 24 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகம்மது தம்பி மரைக்கார்

விட்டுக் கொடுப்பு என்பது பக்குவப்பட்ட மனிதர்களிடம் உள்ள நற்குணமாகும். புத்திசாலிகளும் விட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. அரசியலில் விட்டுக் கொடுத்தலை இராஜதந்திரம் என்றும் சொல்வார்கள். எதிர்த்தரப்பிடம் தோற்றுப் போகும் நிலைவரமொன்று உருவாகப் போவதை அனுமானித்துக் கொண்டு, தோற்றுப் போவதற்கு முன்பாகவே, விட்டுக் கொடுப்பதாகக் கூறி - எதிராளியிடம் சமரசம் செய்து கொள்வது கெட்டித்தனத்தின் உச்சமாகும். ஆனாலும், சில இடங்களில் விட்டுக் கொடுக்கின்றவர்களை, இயலாதவர்களாகவும் சமூகம் பார்ப்பதுண்டு.

மு.காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும், செயலாளர் ஹசன் அலிக்கும் இடையில் சில காலமாக இருந்துவந்த சண்டை - முடிவுக்கு வரும் நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் அச்சி முகம்மது இஷாக்கின் வீட்டில், அவரின் மத்தியஸ்தத்துடன் ஹக்கீமும் ஹசன் அலியும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஹக்கீம் - ஹசன் அலிக்கு இடையிலான முரண்பாடு தொடர்பில் வாசகர்கள் அறிவீர்கள்.

மு.காங்கிரஸின் யாப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டு, ஹசன் அலி வகிக்கும் செயலாளர் பதவியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. கட்சியின் பேராளர் மாநாட்டில் யாப்புத் திருத்தத்துக்கான அங்கிகாரம் பெறப்பட்டது.

பேராளர் மாட்டுக்கு முன்னதாக நடைபெறும், கட்சியின் ஆணை வழங்கும் உயர்பீடக் கூட்டத்தில்தான், பேராளர் மாநாட்டில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் இறுதி செய்யப்படும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள்தான் பேராளர் மாநாட்டில் வாசிக்கப்படும்.

இவ்வாறானதொரு நிலையில், ' செயலாளர் பதவியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டுமென, ஆணை வழங்கும் உயர்பீடக் கூட்டத்தில், எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. மேலும், செயலாளர் பதவியின் அதிகாரங்களைக் குறைக்கும் பொருட்டு, யாப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமெனவும் அந்த உயர்பீடக் கூட்டத்தில்  பேசப்படவில்லை. இருந்த போதும், செயலாளரின் அதிகாரங்களைப் பறித்தெடுக்கும் வகையில், யாப்பில் சில மாற்றங்களைச் செய்து, அதற்கான அங்கிகாரத்தினை பேராளர் மாநாட்டில் பெற்றுக் கொண்டனர்' என்கின்றார்கள் ஹசன் அலி தரப்பினர்.

அவ்வதிகாரங்களை, செயலாளருக்கு மீளவும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துத் தொடங்கிய ஹசன் அலி தரப்பின் போராட்டத்தினை, ஆரம்பத்தில் ஹக்கீம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கட்சிக்குள் ஹசன் அலியின் பெயரை சேதாரப்படுத்தி, அவரை ஓரங்கட்டும் ஒரு நடவடிக்கையினை ஹக்கீம் மிக மூர்க்கமாக மேற்கொண்டு வந்தார். இதற்காக, சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற - கட்சியின் தேசிய மாநாட்டினையும், அது தொடர்பான நிகழ்வுகளையும் ஹக்கீம் மிகச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

மறுபுறம், ஹசன் அலி தரப்பும் ஹக்கீமோடு பொருதுவதற்கான ஆயத்தங்களில் இறங்கியது. ஹசன் அலி தரப்பின் மூளையாக மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் பின்னாலிருந்து செயற்படத் தொடங்கினார். ஹசன் அலியின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டமை தொடர்பில், ஹசன் அலி தரப்பினர் நீதிமன்றம் செல்லக் கூடும் என்கிற அச்சம் ஹக்கீம் தரப்புக்கு இருந்தது - இன்னும் இருக்கிறது. ஆயினும், தான் ஒருபோதும் கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதில்லை என்று ஹசன் அலி, ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஹசன் அலியுடன் சமரசம் செய்து கொள்வதற்கு, தான் தயாராக உள்ளதாக ஹக்கீம் தெரிவித்தார். அத்தோடு, ஹக்கீம் - ஹசன் அலி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கட்சிக்குள் மூன்றுபேரைக் கொண்ட ஒரு குழுவையும் ஹக்கீம் நியமித்தார். இதன் மூலம் ஹசன் அலி விவகாரத்தில், விட்டுக் கொடுப்புக்கு ஹக்கீம் தயாராகி விட்டாரோ என்கிற எண்ணம், பல மட்டங்களிலும் உருவானது.

ஹக்கீம் - ஹசன் அலி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவினர், பிரச்சினைக்குரிய இருவரையும் ஆறு தடவை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புகளின் போது, ஹசன் அலி - தனது சார்பில் 05 நிபந்தனைகளை முன்வைத்ததாக அறிய முடிகிறது. அவை

01) கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகளான கலீல் மற்றும் இல்லியாஸ் ஆகியோரை, மீளவும் உயர்பீடத்தில் இணைத்துக் கொள்தல் வேண்டும். (இவர்கள் இருவரும், ஹசன் அலிக்கு சார்பாக செயற்பட்டார்கள் என்பதற்காகவே, இவ்வாறு இடைநிறுத்தப்பட்டார்கள் என்று ஹசன் அலி தரப்பு கூறுகிறது)

02) செயலாளரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டமையைக் கண்டித்தும், செயலாளர் பதவியின் முழுமையான அதிகாரங்கள் ஹசன் அலிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து எழுதப்பட்ட கடிதத்தில், செயலாளருக்கு ஆதரவாகக் கையெழுத்திட்ட உயர்பீட உறுப்பினர்கள் எவரையும் தலைவர் பழிவாங்கக் கூடாது.

03) செயலாளர் பதவியின் குறைக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும், மீளவும் வழங்கப்பட வேண்டும்.

04) யாப்பில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் இல்லாமலாக்கப்பட்டு, பழைய யாப்பு - நடைமுறைக்கு கொண்டுவரப்படுதல் வேண்டும்.

05) இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளை இழுத்தடிக்காமல் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

'ஹசன் அலியின் நிபந்தனைகள் குறித்து ஹக்கீமிடம் பேசப்பட்டபோது, அவர் எதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஹசன் அலியின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாகஅவர்; உறுதியளித்தார்' என்று, ஹக்கீம் - ஹசன் அலி விவகாரத்துக்கு தீர்வுகாணும் மூவர்கொண்ட குழுவின் உறுப்பினர் ஒருவர் நம்மிடம் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் அச்சி முகம்மது இஷாக்கின் வீட்டில், அவரின் மத்தியஸ்தத்துடன் ஹக்கீமும் ஹசன் அலியும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதன்போது, தன்னிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட செயலாளர் பதவியின் அதிகாரங்கள் அனைத்தும் மீள வழங்கப்பட வேண்டும் என்று, ஹசன் அலி வலியுறுத்தியிருக்கின்றார்.

யாப்புத் திருத்தமொன்றின் மூலம் குறைக்கப்பட்ட செயலாளரின் அதிகாரங்களை மீளவும் வழங்குவதென்றால், அதற்கேற்றால் போல் யாப்புத் திருத்தம் ஒன்றினை மீளவும் மேற்கொண்டு, அதற்கு பேராளர் மாநாட்டில் அங்கிகாரத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஹக்கீம் விளக்கமளித்துள்ளார்.

அப்படியென்றால், இதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் வரை, ஹசன் அலி காத்திருக்க வேண்டி வரும். எனவே, அதுவரையில், உயர்பீட செயலாளர் பதவியினை வகிக்கின்ற நபரை இராஜிநாமாச் செய்ய வைத்து விட்டு, உயர்பீட செயலாளருக்கான பொறுப்பினையும் தனக்கு வழங்க வேண்டுமென்று, ஹக்கீமிடம் ஹசன் அலி கோரிக்கை விடுத்ததாக அறிய முடிகிறது.

ஆனால், ஹசன் அலியின் இந்தக் கோரிக்கைக்கு ஹக்கீம் உடன்பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கோரிக்கை தொடர்பில் விட்டுக்கொடுப்பு ஒன்றுக்கு ஹக்கீம் செல்வாராயின், அது அவருடைய இராஜதந்திரமாகவா அல்லது இயலாமையாகவா பார்க்கப்படும் என்கிற கேள்வியும் இங்கு உள்ளது.

சிலவேளை, ஹசன் அலியின் கோரிக்கைக்கு மாற்றீடாக, ஹக்கீம் வேறொரு இடைக்காலத் தீர்வினை முன்வைக்கலாம் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. அதாவது, அடுத்த பேராளர் மாநாட்டில் செயலாளரின் அனைத்து அதிகாரங்களையும் வழங்குவது என்றும், அதுவரையில் - செயலாளர் ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை பெற்றுக்கொடுப்பதும் என்றும் ஹக்கீம் கூறலாம்.

ஹசன் அலி இதை ஏற்றுக் கொள்வாரா, இல்லையா என்பதில்தான் அவரின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலமும் தங்கியுள்ளது.

தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்காகத்தான் ஹசன் அலி சண்டை பிடித்தார். இப்போதும் அவரின் குறி - அதுதான். எம்.பி பதவியைக் கொடுத்தால், அடுத்த நிமிடமே ஹக்கீமுடன், ஹசன் அலி ஐக்கியமாகி விடுவார் என்கிற விமர்சனமொன்று உள்ளது.

ஆனால், 'கட்சிக்குள், எனக்குக் குழிதோண்டும் வேலையை ஹக்கீம் செய்து வருகிறார். அதில் ஒரு செயற்பாடுதான் தேசியப்பட்டியல் பதவியை எனக்குத் தராமல் ஏமாற்றியமையாகும். இன்னொரு செயற்பாடு, எனக்குள்ள அதிகாரங்களைப் பறித்தெறித்தமையாகும். தேசியப்பட்டியல் பதவி எனக்குத் தேவையில்லை. இனி, அதைக் கோரவும் மாட்டேன். மோசடியாகப் பறித்தெடுக்கப்பட்ட செயலாளர் பதவியின் அதிகாரங்களை மீளவும் வழங்க வேண்டும்' என்கிறார் ஹசன் அலி. 

அதிகாரங்களை, அடுத்த பேராளர் மாநாட்டின்போது மீளவும் வழங்குவது என்பதும், அதுவரையில், தேசியப்பட்டியல் எம்.பி பதவியொன்றினைப் பெற்றுக் கொடுப்பது என்பதும் ஹசன் அலி தரப்பினருக்கு, ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் போல், சந்தோசமான விடயமாகவும் தெரியக் கூடும். ஆனால், ஹக்கீம் பெற்றுக் கொடுக்கும் எம்.பி

பதவியினை ஹசன் அலி ஏற்றுக் கொள்வாராயின், அக்கணமே, ஹசன் அலி தனது அரசியலில் தோற்று விடுவார்.

அதனூடாக, ஹக்கீம் வென்று விடுவார்.

இந்தக் கணக்கு வழக்குகளெல்லாம் ஹசன் அலிக்குத் தெரியாத விடயமல்ல. எனவே, எம்.பி  பதவியை, ஹசன் அலி ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. தனது செயலாளர் பதவியின் குறைக்கப்பட்ட அதிகாரங்களைப் பெற்றெடுப்பதிலேயே ஹசன் அலி குறியாக இருப்பார். ஹக்கீமிடம் அதைப் பெற்றெடுப்பதனூடாக, 'ஹசன் அலி விவகாரத்தில் ஹக்கீம் தவறு செய்துள்ளார்' என்பதை மறுதலையாக நிரூபிக்க, ஹசன் அலி தரப்புக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆக, ஹக்கீம் - ஹசன் அலி விவகாரம், இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்று நம்ப முடியவில்லை.

கண்ணுக்குத் தெரியாத கத்திகளை, முதுகுகளுக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு பேசப்படும் சமரசங்கள் வெற்றிபெற்றதாக, வரலாற்றில் எங்காவது நீங்கள் படித்திருக்கிறீர்களா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .