2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

தவறாக வழிநடத்தியதா கூட்டமைப்பு?

கே. சஞ்சயன்   / 2019 நவம்பர் 29 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தவறாக வழிநடத்தி விட்டது என்றொரு குற்றச்சாட்டு, இப்போது சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.   

சஜித் பிரேமதாஸ தோல்வியடைவார் என்பதை அறிந்திருந்தும், கூட்டமைப்பு அவரை ஆதரித்தது தவறு என்பது போன்ற கருத்துகள் வெளியிடப்படுவதுடன், இப்போது நிர்க்கதியான நிலைக்குள், கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கிறது போன்ற விம்பத்தைத் தோற்றுவிக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.  

ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவின் தோல்வியை எதிர்பார்த்திருந்த போதும், அவருக்குத் தமிழ் மக்கள் திரண்டு போய் வாக்களித்தது, பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. கூட்டமைப்பின் சொல்லுக்குத் தமிழ் மக்கள் கட்டுப்பட்டு, வாக்களித்திருக்கிறார்கள் என்ற நிலை வந்து விட்டதைப் பலராலும் சகித்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.  

இந்தநிலையில் தான், சஜித்தை ஆதரித்து, கூட்டமைப்பு தவறு செய்து விட்டது என்ற பிரசாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  

இரா.சம்பந்தனும் சுமந்திரனும் பிரசாரக் கூட்டங்களில், “கோட்டாபயவே வெற்றி பெறுவார் என்று, தென்னிலங்கையில் நம்புகிறார்கள்; அந்தநிலையை மாற்றியமைக்கும் வகையில் சஜித்துக்கு ஆதரவளியுங்கள்” என்றே கோரியிருந்தனர்.  

அவர்கள் உண்மையை மறைத்து, சஜித்தின் பக்கம், தமிழ் மக்களைக் கொண்டு சென்றிருக்கவில்லை என்பது முதல் விடயம்.  

அடுத்தது, தமிழ் மக்களின் மனோநிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தவர்களால் தான், ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாதிருந்தது.  

பொதுஜன பெரமுனவின் கூட்டங்களில் பங்கேற்றவர்கள், பிரசாரங்களில் ஈடுபட்டவர்களே கோட்டாபயவுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கவில்லை என்பது, தேர்தலுக்கு முன்னரே தெரிந்திருந்தது. கோட்டாபய தொடர்பாக வெறுப்படைந்திருந்த போதும், 1,000 ரூபாவும் சாப்பாட்டுப் பொதியும் கிடைப்பதால், கூட்டங்களுக்குச் செல்வதாகப் பலரும் கூறியிருந்தார்கள்.   
அதேவேளை, தமிழ் மக்களில் பலரும், சஜித்துக்கு வாக்களிக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். அதனை உருவாக்கியது, கூட்டமைப்பு அல்ல; கோட்டாபய தான்!  
கோட்டாபய ராஜபக்‌ஷவின் கடந்த காலம், தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து, நிகழ்காலத்தில் உத்தரவாதம் அளிக்க முடியாதவராக இருந்தமையானது, அவர் பற்றிய அச்சம், தீவிரம் பெறுவதற்குக் காரணமாக இருந்தது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கை காட்டியதால் தான், தமிழ் மக்கள் சஜித்துக்கு ஆதரவளித்தனர் என்பது அப்பட்டமான பொய். தமிழ் மக்கள் எடுத்த முடிவுக்கு அமையவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதே முடிவை எடுத்தது. 

தபால் மூல வாக்களிப்புப் பெரும்பாலும் நடந்து முடிந்த பின்னர் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தது. தபால் மூல வாக்களிப்பில், சஜித்துக்குக்குத் தான் தமிழ் மக்கள் ஆதரவளித்திருந்தனர்.  

எனவே, கூட்டமைப்பு முடிவெடுக்க முன்னரே, தமிழ் வாக்காளர்களின் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்தி விட்டது என்பது தவறு. 

அதையும் மீறி, கூட்டமைப்பின் மீது அந்தக் குற்றச்சாட்டை சுமத்துவதாயின், இன்னொன்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கும் தமிழ் மக்கள், கூட்டமைப்பின் சொல்லைக் கேட்டு நடக்கிறார்கள்; கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே அது.  

ஆனால், மாற்று அணி, மாற்றுச் சக்தி பற்றிச் சிந்திப்பவர்கள், அதற்கான முனைப்புகளில் ஈடுபட்டிருப்பவர்கள், கூட்டமைப்பே மக்களைத் தவறாக வழிநடத்தி விட்டதாகக் குற்றம்சாட்டுகிறார்களே தவிர, கூட்டமைப்பின் தலைமையை, மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை, ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கமாட்டார்கள்.  

ஏனென்றால், அவ்வாறு ஏற்றுக்கொண்டால் அது, அவர்களின் அரசியலுக்குப் பாதகமாக அமைந்து விடும்.  
ஜனாதிபதித் தேர்தலில், சஜித் தோல்வி அடைந்திருந்தாலும், அவரை ஆதரித்த தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை; தோற்கடிக்கப்படவும் இல்லை.  

இந்தத் தேர்தலின் ஊடாக, தமிழ் மக்கள் தெளிவான ஒரு செய்தியைக் கூறியிருந்தார்கள். கோட்டாபய ராஜபக்சவைத் தமிழ் மக்கள்,  ஆதரிக்கவில்லை என்பதை, சர்வதேச சமூகம் தனியானதொரு கண்ணோட்டத்திலேயே பார்க்கின்ற நிலை இன்றைக்கும் உள்ளது.  

அதனால் தான், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூட, ஜனாதிபதி கோட்டாபயவிடம், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய, தீர்வு ஒன்றைப் பெறுவதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.  

இந்தத் தேர்தலில், தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகள் தோல்வி கண்ட பின்னர், சிவாஜிலிங்கத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், தமிழ் மக்கள் அந்த யோசனையை ஆதரிக்கவில்லை.  

அவ்வாறு அவருக்கு வாக்களித்திருந்தால், கோட்டாபயவை ஆதரித்த பெருவாரியான சிங்கள மக்கள், எவ்வாறு இனவாதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனரோ, அதுபோன்றே, தமிழ் மக்களும் இனவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு இருப்பார்கள்.  

ஆனால், சஜித்தை ஆதரித்ததால், தமிழ் மக்களைச் சர்வதேசம் இனவாதிகளாக அடையாளப்படுத்தவில்லை. தமிழ் மக்கள், நம்பிக்கை கொள்ள முடியாத வேட்பாளரே, கோட்டாபய என்று தான் அடையாளப்படுத்தி இருக்கிறது.  

ஜனாதிபதித் தேர்தலில், தெற்கில் சமபலத்துடன் மோதுகின்ற வேட்பாளரை, வெற்றிபெற வைக்கவோ, தோற்கடிக்கவோ தமிழ் மக்களால் முடியும்.  

இந்தமுறை, அவ்வாறான சமபல களநிலை இருக்கவில்லை. அதனால், தமிழ் மக்களுக்கு ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தி கிடைத்திருக்கவில்லை.  

இவ்வாறான நிலையில், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தாலும், அதனால் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டிருக்காது. பொது வேட்பாளரைத் தமிழர் தரப்பில் நிறுத்துவது, யாரேனும் ஒரு வேட்பாளருக்குச் சாதகமானதாக அமைந்து விடக்கூடாது.

இரண்டு தரப்புகளுக்கும் சமமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குத் தள்ளிச் செல்லக் கூடியதாக இருந்தால் மட்டுமே அது சாதகமானது. 

 ஆனால், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் அது, கோட்டாபயவின் வெற்றியை இன்னும் பிரமாண்டப்படுத்தியிருக்குமே தவிர, அவரது வெற்றி வாய்ப்பைச் சிறிதும் பாதித்திருக்காது.   

அவ்வாறான நிலையில், பொது தமிழ் வேட்பாளரைக் களமிறக்கியும் எந்த அரசியல் அறுவடையையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை, ஏற்பட்டிருக்கும். ஆனால், சஜித்தை ஆதரித்ததன் மூலம், தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருக்கும் செய்தி, சிங்கள மக்களின் கருத்தியலில் இருந்து, தமிழ் மக்கள் வேறுபட்டு நிற்கிறார்கள் என்பது, உணர்த்தப்பட்டிருக்கிறது.  

கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறாமல் தான், ஜனாதிபதியானவர் என்ற குறை அவருக்குள் தொடரவே போகிறது. தமிழ் மக்கள், இந்த அரசியல் மாற்றத்தை விரும்பவோ, ஏற்கவோ இல்லை என்ற கருத்து, சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  

எல்லா இன, மத மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் அரசாங்கத்துக்கும், எல்லா மக்களினதும் அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்ளாத ஓர் அரசாங்கத்துக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் இருக்கும். தற்போதைய அரசாங்கமும் அவ்வாறான ஒரு நிலையில் தான் இருக்கிறது.  

தமிழ் மக்களின் இந்த இறுக்கமான நிலைப்பாடு, இணக்கப்பாட்டு முயற்சிகளுக்குப் பலமான அடித்தளத்தை ஏற்படுத்தக் கூடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதில் பொதுஜன பெரமுன ஆர்வம் காட்டவும் இல்லை; கூட்டமைப்பைச் செல்லாக் காசு என்றே விமர்சித்தும் வந்தது. இவ்வாறான ஒரு நிலையில், சஜித்தை ஆதரிக்கும் நிலைக்கு அப்பால், நடுநிலை முடிவை எடுப்பதை விட, கூட்டமைப்புக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.  

கூட்டமைப்பு, அரசியல் கள நிலைவரங்களைப் புரிந்து கொண்டது; மக்களின் மனநிலையை அறிந்து கொண்டது; அதன் மூலம், மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதான தோற்றப்பாட்டை, இந்தத் தேர்தலின் மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  

சஜித்துக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும், கூட்டமைப்புக்காகப் போடப்பட்ட வாக்குகள் அல்ல. ஆனாலும், கூட்டமைப்பு எடுத்த முடிவு, அந்த வாக்குகள் கூட்டமைப்புக்காக விழுந்தவையாக, எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கூட்டமைப்பின் முடிவு, தமிழ் மக்களை ஓரம்கட்டிவிட்டதாக கூற முடியாது; கூட்டமைப்பையும் அது தனிமைப்படுத்தியிருக்கவில்லை.  

தேர்தலுக்கு முன்னரே, கூட்டமைப்பைக் காட்டமாக விமர்சித்தது பொதுஜன பெரமுன. ஆட்சியமைத்தால், கூட்டமைப்புடன் பேசும் முடிவும் அதனிடம் இருக்கவில்லை. எனவே, சஜித்தை ஆதரித்ததால் தான், இந்த நிலை என்பது பொய்யான வாதம்.  

இனப்பிரச்சினை இருக்கிறது என்பதையோ, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் பற்றியோ வாய்கூடத் திறக்காத ஒரு ஜனாதிபதியை, கூட்டமைப்பு நெருங்குவது கடினம் தான்.  ஆனால், கோட்டாபயவினால் நீண்டகாலத்துக்கு இந்த மௌன விரதத்தை கடைப்பிடிக்க முடியாது. 

ஏனென்றால், சரி, தவறுகளுக்கு அப்பால், இந்தியா போன்ற சர்வதேச சக்திகள், இந்தப் பிளவு நிரந்தரமாக்கப்படுவதை விரும்பாது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X