2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வடக்கில் தலைகாட்டும் மதவாதம்

கே. சஞ்சயன்   / 2020 மார்ச் 06 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் அரசியல் பரப்பும் சூடுபிடித்திருக்கிறது.  

வடக்கில் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற கோசத்தை முன்னிறுத்தியும், கிழக்கில் தமிழர் ஒற்றுமை என்ற கோசத்தைப் பயன்படுத்தியும், புதிய அரசியல் அணிகள் தோற்றம் பெற்று, இம்முறை தேர்தல் களத்தில் தீவிரமான உள்ளகப் போட்டியை உருவாக்கியிருக்கின்றது.  

வடக்கில், பேரினவாதக் கட்சிகள், அவற்றின் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்ற தமிழ்க் கட்சிகள், ஆசனங்களைக் குறிவைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் முரண்பாடு, அவற்றுக்குச் சாதகமாக மாறும் சூழல் உள்ளது.  

கிழக்கில் தமிழ்த் தரப்புகளின் பிளவுகளைப் பயன்படுத்தி, கூடுதல் ஆசனங்களைப் பெற்று விடும் முனைப்பில், பேரினவாதக் கட்சிகளும் அவற்றுக்குத் துணைபோகும் கட்சிகளும் மாத்திரமன்றி, முஸ்லிம் கட்சிகளும் செயற்படுகின்ற நிலையில், கிழக்கில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிரதிநிதித்துவம் பறிபோய் விடுமோ என்ற அச்சமும் தலைதூக்கியுள்ளது.  

பொதுவாக கடந்த தேர்தல்களில் வடக்கு, கிழக்குக்கு என்று தனியான போட்டிச் சூழல் இருந்ததில்லை. ஆனால், தமிழர் தரப்பில் அரசியல் செய்யும் கட்சிகள், மாற்றுத் தலைமை என வடக்கிலும், தமிழரின் அரசியல் பலத்தை பாதுகாக்க வேண்டும் என்று கிழக்கிலும் உருவாக்கியுள்ள புதிய சூழலினால், இரண்டு அரசியல் பரப்புகளும் வெவ்வேறு திசைகளில் நகரத் தொடங்கியிருக்கின்றன.  

இவ்வாறான பிளவுகளுக்கு மத்தியில், வடக்கில் மதவாதம் என்ற விஷக் காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது; அல்லது பரப்பப்படுகிறது.  

தேர்தல் அறிவிப்பு வெளியாகிய பின்னர், யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி, வடமராட்சி பகுதிகளில், சிவசேனை அமைப்பால், சைவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று கோரும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.  

சில ஆண்டுகளுக்கு முன்னர் வவுனியா, மன்னாரில் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதற்குப் பின்னர், உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் இவ்வாறான சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டன.  

யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில், சைவர் ஒருவரையே முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் வகையிலான சுவரொட்டிகளும், துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.  

அதன் தொடர்ச்சியாகத் தான், இந்தமுறை பொதுத் தேர்தலில் சைவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற கோசத்தை முன்னிறுத்தி பிரசாரத்தை ஆரம்பித்திருக்கிறது சிவசேனை.  

மறவன்புலவு சச்சிதானந்தன் வவுனியாவில் ஆரம்பித்த சிவசேனை அமைப்பு, வடக்கில் இந்துக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பது என்ற பெயரில், மதவாதத்தை ஊக்கவிக்கின்ற ஒன்றாக மாறியிருக்கிறது.  

சிவசேனை அமைப்பு, வடக்கில் அரசியலில் ஈடுபடும் நோக்கத்தைக் கொண்டிராவிடினும், தமிழர் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முனைகிறது.  

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் மதத்தைக் கொண்டு பிளவுகளை ஏற்படுத்த முனைந்த அந்த அமைப்பு, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராகவும், மேயராகவும் சைவர் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்று தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தது.  

இப்போது, நாடாளுமன்றத் தேர்தலிலும் சைவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற சுவரொட்டிப் பிரசாரங்களால், மத ரீதியாகத் தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளைத் தோற்றுவிக்க முனைந்து கொண்டிருக்கிறது.  

தமிழர்கள் காலம்காலமாக மத ரீதியாக ஒன்றுமையுடனேயே செயற்பட்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, வடக்கு, கிழக்கில் கிறிஸ்தவம், இந்து சமயங்களைப் பின்பற்றும் மக்கள் மத்தியில் வேற்றுமைகளோ, முரண்பாடுகளோ இருந்ததில்லை.  

அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள் பின்பற்றுகின்ற மதங்களைப் பற்றி கவனத்தில் கொள்ளாமல் வாக்களித்து, அவர்களுக்கு அங்கிகாரம் அளித்து வந்தவர்கள் தமிழ் மக்கள்.  

‘தந்தை செல்வா’ எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படும், எஸ்.ஜே.வி செல்வநாயகம் தொடக்கம், எம்.ஏ. சுமந்திரன் வரைக்கும் அது பொருந்தும்.   

அவ்வாறானதொரு பாரம்பரியத்தைத் தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சூழலில், மதவாதப் பிரசாரங்களும் மத ரீதியான பிளவுகளும் தமிழ் மக்களின் பாரம்பரிய ஒற்றுமையையும் அரசியல் பலத்தையும் சிதைத்து விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.  

சிவசேனை போன்ற மதவாத அமைப்புகளின் காலூன்றல், தமிழ் மக்கள் மத்தியில் மத ரீதியான பிளவுகளை இன்னும் தீவிரமாக்கி இருக்கிறது.  

சிவசேனை அமைப்பு, இதுவரையில் அரசியலில் ஈடுபடாவிடினும், அதன் தோற்றுவாயும் இலக்கும், அரசியலில் மய்யம் கொள்வதாகவே இருக்கக் கூடும். 

இந்தியாவின் மகாராஷ்ரா மாநிலத்தில் சிவசேனா அமைப்பு அதிகாரத்தில் இருக்கிறது. இந்தியாவை ஆளும் பா.ஜ.க கூட்டணியிலும் அது இடம்பெற்றிருக்கிறது.  

தீவிர வலதுசாரி இந்து அமைப்பான, அரசியல் கட்சியான சிவசேனா, இந்து மதவாதத்தை மாத்திரமன்றி, மராட்டியர்களுக்கு மாத்திரமே மகாராஷ்டிரா என்ற கோசத்தையும் முன்னிறுத்திச் செயற்படுகிறது.  

சில காலங்களுக்கு முன்னர், மும்பையில் இருந்தும் மகாராஷ்டிராவில் இருந்தும் பிற மாநிலத்தவர்கள் வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்தலையும் அந்த அமைப்பு எற்படுத்தி இருந்தது.  

அதன் நிறுவுநரான மறைந்த பால் தாக்கரேவுடன் தொடர்புகளை வைத்திருந்தவர் தான் இலங்கையில் சிவசேனை அமைப்பை உருவாக்கியுள்ள மறவன்புலவு சச்சிதானந்தன்.  

சிவசேனாவின் தாக்கம் அவர், இங்கு உருவாக்கியுள்ள சிவசேனையில் இருக்கிறது‘ அதனை அவரால் மறுதலிக்க முடியாது.  

சில மாதங்களுக்கு முன்னர், இலங்கை வந்திருந்த இந்தியாவின் பா.ஜ.க முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில், இலங்கையில் இந்துக்களின் நலன்களைப் பேணுவதற்காக, அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.  

சுப்ரமணியன் சுவாமி, இந்திய அரசியலில் ‘கோமாளி’யாக வர்ணிக்கப்படுபவர். இலங்கையில் ராஜபக்சவினரின் நெருங்கிய நண்பரான அவருக்கு, அரசாங்க ரீதியாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  

அவ்வாறான ஒருவர், இலங்கையில் இந்துக்களின் நலன்களுக்கான அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிப்படையாகவே கூறியிருந்தமை ஆச்சரியத்தைக் கொடுத்தது.  

மேற்கு நாடு ஒன்றைச் சேர்ந்த அரசியல்வாதியோ, மத்திய கிழக்கைச் சேர்ந்த தலைவரோ இதேபோன்று கூறியிருந்தால், எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருக்கும், எதிர்வினை ஆற்றப்பட்டிருக்கும்?  

ஆனால், இந்திய அரசியல்வாதி ஒருவர், இந்துக்களுக்கான அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதன் பின்னணியில் இருப்பதாகக் கூறியதை, எவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.  

இந்துக்களுக்கான கட்சி உருவாக்கம், சிங்கள, பௌத்த அரசியல் தலைமைகளுக்கு அச்சுறுத்தலானது அல்ல; ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அச்சுறுத்தலானது அல்ல.  

ஆனால், தமிழ் மக்களுக்கும் அவர்களின் இருப்புக்குமே ஆபத்தானது; தமிழ்த் தேசிய அரசியலுக்கு சவாலானது. தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் இலக்கைக் கொண்டது.  

இந்தியாவில், தமிழ்நாட்டில் பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி போன்ற தீவிர இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளும் கட்சிகளும், மத ரீதியாகத் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தவதற்குக் கடுமையாக முயன்று கொண்டிருக்கின்றன.  

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துபவர்களையும் திராவிடக் கொள்கையை பின்பற்றுபவர்களையும் வீழ்த்தும் நோக்கிலேயே இந்த இந்துத்துவ அமைப்புகள் செயற்படுகின்றன.  

இதனால் தமிழ்நாட்டில் மாத்திரமன்றி, இந்தியா முழுவதிலுமே, இந்து அடிப்படைவாதம் ஒரு வித பதற்றத்தை தோற்றுவித்திருக்கிறது.  

அதன் நீட்சியாகத் தான், இலங்கையிலும் இந்துத்துவ அமைப்புகள், கட்சிகள் காலூன்ற முனைகின்றன.  

தமிழ்த் தேசியம், தமிழ் அரசியல் ஆகியவற்றைப் பிளவுபடுத்தி, மதரீதியான தலைமைத்துவத்தை உருவாக்குதலே இவ்வாறான அமைப்புகளின் இலக்காகும்.  

சிவசேனை போன்ற அமைப்புகள், மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் போது, அது தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளைப் பலவீனப்படுத்தும். தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான அரசியல் சக்திகளையும் பேரினவாதக் கட்சிகளையும் அவற்றின் அடிவருடிகளாகச் செயற்படும் கட்சிகளையும் வலுப்படுத்தும்.  

விடுதலைப் புலிகளின் காலத்தில் அருகிக் காணப்பட்ட பிரதேசவாதம், சாதியவாதம், மதவாதம் என்பன, போர் முடிவுக்கு வந்த பின்னர், தளைத் தோங்கத் தொடங்கி இருக்கின்றன.  

பிரதேசவாதத்தையோ, சாதியவாதத்தையோ வெளிப்படையாகப் பேசுவதற்கு தயக்கம் இருந்தாலும், மதவாதத்தை வெளிப்படையாக முன்வைப்பதற்கு, சிவசேனை போன்ற தரப்புகள் கூச்சப்படவில்லை.  

மன்னாரில் இந்துக்களின் நலனுக்காக சுயேட்சைக் குழு ஒன்று போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பதும், சைவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற சுவரொட்டிகளும் தமிழர்கள் மத்தியில் மதவாதம் தீவிரம் பெறுவதற்கான அறிகுறியே.  

சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும், அதனை எதிர்க்கின்ற, அதற்கு எதிராக போராடுகின்ற தமிழ் மக்களே, இந்து மதவாதத்தை முன்னிறுத்துவதும், அதன்வழி அரசியல் செய்ய முனைவதும் அபத்தமானது.  

இந்துக்கள் அல்லது சைவர்களின் நலன்கள் என்ற பெயரில், தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் வேரறுக்க முனைகிறது இந்த மதவாதம்.  

தமிழ் மக்கள் மத்தியில் வேரோடும் இந்து மதவாதம், ஆரம்பத்திலேயே தோற்கடிக்கப்படாவிடின், இனத்தின் இருப்பும் நலனும் கேள்விக்குள்ளாவது தவிர்க்க முடியாததாகி விடும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .