2021 ஜனவரி 23, சனிக்கிழமை

13ஆவது திருத்தம்: அற்ப ஆயுளில் அடங்கிப் போகுமா?

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய தமது நிலைப்பாட்டை அல்லது தீர்வுத்திட்டத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாமல் தட்டிக்கழித்து வந்த அரசாங்கத்தின், உண்மையான நிகழ்ச்சிநிரல் என்னவென்று இப்போது ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. மாகாணசபைகளை ஒழிப்பது தான் அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் என்பதை இப்போது விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

அண்மையில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ் - மாகாணசபைகளை ஒழிக்க வேண்டும் என்று “பற்ற வைத்த” நெருப்பு இப்போது நன்றாகவே கொளுந்து விட்டெரியத் தொடங்கி விட்டது. அரசாங்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியும், ஜாதிக ஹெல உறுமயவும் கோட்டாபய ராஜபக்ஷ்வின் கருத்தை அடுத்து, மாகாணசபைகளை ஒழித்தேயாக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளன.

அதுமட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையில் போய்விடும் என்பதால், வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று அமைச்சர்கள் விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் சூளுரைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்ட போது இப்படியொரு சர்ச்சையை அவர்கள் கிளப்பவில்லை. காரணம், அங்கு தமிழர்களால் அதிகாரத்தைப் பெறமுடியாது என்ற நம்பிக்கையே. வடக்கு மாகாணபையின் அதிகாரம் தமிழர்களிடம் கொடுக்கப்பட்டு விடக் கூடாது என்ற - உச்சக்கட்ட இனவாதத்தை - இவர்களின் இந்தக் கருத்து வெளிப்படுத்தியுள்ளது.

மாகாணசபைகளை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை இவர்கள் பொதுப்படையாக முன்வைப்பது வேறு. வடக்கில் மட்டும் தேர்தலை நடத்த விடமாட்டோம் என்பது வேறு.

மாகாணசபைகளை ஒழித்தேயாக வேண்டும் என்று கூறும் இந்த இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் மாகாணசபைகளில் இப்போதும் அமைச்சர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருந்து வருகின்றனர். இதிலிருந்து, தாம் அதிகாரம் செலுத்தக் கூடிய இடங்களில், மாகாணசபைகள் இருக்க வேண்டும், தமிழர்கள் அதிகாரம் செலுத்தக் கூடிய இடங்களில் அவை இயங்கக் கூடாது என்பதே இந்தக் கட்சிகளின் அடிப்படைக் கொள்கை என்பது தெளிவாகிறது.

ஆளும் கூட்டணியில் உள்ள இந்தக் கட்சிகள் மட்டுமன்றி, அரசாங்கத் தரப்பில் உள்ள இடதுசாரிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் எல்லாமே, இதே கருத்தை வலியுறுத்தவே செய்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு கூட இதுவே தான்.

13ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற சர்ச்சையை கோட்டாபய ராஜபக்ஷ் கிளப்பிவிட்டபோது, அவ்வாறான நோக்கம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை என்று கூறியிருந்தார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. ஆனால் பின்னர் அவரும் சரி, அரசாங்கத்தில் அதிகாரம் பெற்றவர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் வெளியிட்டுள்ள கருத்துகளும் சரி அதனை உறுதிப்படுத்துமாற் போலவே உள்ளன.

முன்னதாக, தேவைப்பட்டால் 13ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்காக 19ஆவது திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்று கூறியிருந்தார் அமைச்சர் பசில் ராஜபக்ஷ. ஆனால், கடந்த சனிக்கிழமை அவர் ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டபோது, மாகாணசபைகளுக்குப் பதிலாக, தமிழர்களின் குறைகளை நீக்கும் வகையில் புதிய அதிகாரப்பகிர்வுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தை கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திருத்த வரைபு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், மக்களுக்கு அர்த்தமுள்ள- கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க மாகாணசபை முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆக மொத்தத்தில், 13ஆவது திருத்தத்தை இல்லாதொழித்து, மாகாணசபை முறையையே இல்லாமல் செய்து விடவேண்டும் என்பதில் அரசதரப்பு உறுதியாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இதனைச் செய்வதற்கு அரசாங்கத் தரப்புக்கு இருக்கின்ற ஒரே சிக்கல் இந்தியா தான்.

மாகாணசபை முறையின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

கடந்த முதலாம் திகதி ஜெனிவாவில் நடைபெற்ற பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தியாவை பகைத்துக் கொண்டு மாகாணசபைகளை - 13ஆவது திருத்தத்தை ஒழிப்பது தான் அரசாங்கத்துக்கு இப்போது உள்ள ஒரே சிக்கல்.

ஆனால், இந்தியா மாகாணசபைகளையும் 13ஆவது திருத்தத்தையும் ஒழிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை இந்தியா கண்டிக்கவில்லை என்ற மனக்குறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் உள்ளதையும் காணமுடிகிறது.

கடந்த மாதம் வரை, 13 பிளஸ் என்று கூறிவந்த அரசாங்கம், இப்போது 13ஆவது திருத்தத்தையே ஒழிக்கப் போவதாக கூறுகிறது. அதற்காக 19ஆவது திருத்தத்தைக் கொண்டு வரப் போவதாகவும் கூறுகிறது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இதற்கான வரைபு சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அர்த்தமுள்ள அதிகாரங்களைப் பகிரும் வகையில், மாகாணசபைகளை – 13ஆவது திருத்தத்தை ஒழிக்கப் போவதாகவும், அதற்கான வரைபை தெரிவுக்குழுவிடம் முன்வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ள அவர், அதற்கு மாற்றாக அரசாங்கம் எதை முன்வைக்கப் போகிறது என்று கூறவில்லை.

அதாவது அரசாங்கத்தின் இப்போதைய இலக்கு - தெரிவுக்குழுவின் மூலம் அடைய நினைத்துள்ள இலக்கு - மாகாணசபைகளையும், அதை உருவாக்கிய  13ஆவது திருத்தத்தையும் இல்லாமல் செய்வது தான்.

இதற்குப் பதிலாக எத்தகைய தீர்வை அரசாங்கம் முன்வைக்கப் போகிறது என்ற தெளிவு அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று, நிச்சயமாக ஒன்றை மட்டும் கூறமுடியும். தமிழர்கள் சட்டரீதியாக அதிகாரங்களை பிரயோகிக்கக் கூடிய நிர்வாக அமைப்பு எதையும் அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்கப் போவதும் இல்லை. உருவாக்க விடப்போவதும் இல்லை.

ஏனென்றால், மாகாணசபைகளே ஒப்பீட்டளவில், குறைந்தபட்ச அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிர்வாக அலகு தான். இதையும் இல்லாமல் செய்து விட வேண்டும் என்று வலியுறுத்தும் அரசாங்கம், ஒருபோதும் இன்னொரு நிர்வாக அலகை உருவாக்கப் போவதில்லை.

இதுவரை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பதை வெளிப்படுத்தவில்லை. தெரிவுக்குழுவே அதைத் தீர்மானிக்கும் என்று கூறிவந்தது. இப்போது தெரிவுக்குழு தீர்வுத்திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுமா இல்லையா என்பதைவிட, 13ஆவது திருத்தத்தை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

மாகாணசபைகள் மூலம் பகிரப்பட்ட குறைந்தளவிலான அதிகாரங்களையும் மத்திய அரசு பிடுங்கிக் கொள்வதற்கான களமாகவே, தெரிவுக்குழு பயன்படப் போகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்து வந்த சந்தேகத்தை அரசாங்கமே இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.

13ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு, தெரிவுக்குழுவில் அதை ஒரு யோசனையாக முன்வைக்கத் திட்டமிட்டுள்ள அரசாங்கத்தினால், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான திட்டம் ஒன்றை மட்டும் வரைய முடியாது போனது எப்படி என்பது தான் கேள்வி.

அரசாங்கம் ஒரே முடிவுடன் தான், காய்களை நகர்த்துகிறது.

மாகாணசபைகளை இல்லாதொழிக்கும் வகையில், 13ஆவது திருத்தத்தையே அரசியலமைப்பில் இருந்து நீக்கி விடுவது தான் அந்தத் திட்டம்.

கோட்டாபய ராஜபக்ஷ் ஊடகங்களின் மூலம் தொடக்கி விட்ட போரினதும், சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் நடத்துகின்ற பிரசார யுத்தத்தினதும், பசில் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நடத்தும் இராஜதந்திரப் போரினதும் இலக்குகள் எல்லாமே ஒன்றாகவே தெரிகின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் பயணிக்கின்ற பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும், பயணிப்பது என்னவோ, 13ஆவது திருத்தத்தை ஒழிப்பதைக் குறியாகக் கொண்டு தான்.

இந்தநிலையில், இந்தியா என்ற கவசத்துக்குள் இருந்தாலும், 13ஆவது திருத்தத்தினதும், மாகாணசபைகளினதும் ஆயுள் எந்தளவுக்கு வலிமையானது என்பது கேள்விக்குரியதாகவே மாறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .