2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பிரபாகரனை காப்பாற்றும் திட்டம் தோல்வியடைந்தது ஏன்? : குமரன் பத்மநாதன் விளக்குகிறார்

Super User   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகம்-1 | பாகம்-2 | பாகம்-3 | பாகம்-4

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் 'டெய்லிமிரர்' ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் மூன்றாவது பாகம் ஓகஸ்ட் 21 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:-

கேள்வி: பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் ஹெலிகொப்டர் மூலம் காப்பாற்றும் உங்கள் திட்டத்திற்கு இறுதியில் என்ன நடந்தது? ஏன் அது செயற்படவில்லை?

பதில்: அது மிகவும் துயரமான கதை. பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி, அவரது குடும்ப அங்கத்தவர்களை வான்வழி மூலம் காப்பாற்றும்படி என்னைக் கேட்டபின் நான் ஒரு திட்டம் வகுத்து  ஆரம்ப ஏற்பாடுகளை செய்தேன். இலங்கை கடற்படை அணுகமுடியாத தொலைவிலுள்ள துறைமுகம் ஒன்றில் காத்திருக்கும் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்தேன். உக்ரேய்ன் நாட்டிலிருந்து எனக்குத் தெரிந்தவர் மூலமாக ஒரு பாவித்த ஹெலிகொப்டரை வாங்கவும் நான் ஒழுங்கு செய்தேன்.

எல்.ரீ.ரீ.ஈ. இன் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு பயிற்றப்பட்ட விமானிகள் வன்னிக்கு ஹெலிக்கொப்டரை கொண்டு செல்வர் என்பதே திட்டம். பிரபாகரன் விரும்பினால் சார்ள்ஸ் அன்டனியை தவிர  குடும்பத்தின் ஏனையோர் வெளியே கொண்டுவரப்படுவர். தலைவருக்கு விருப்பமில்லையென்றால்  அவரும் அவரது மெய்ப்பாதுகாவலர்களில் சிலரும் சிரேஷ்ட தலைவர்களும்  ஹெலிகொப்டர் மூலம் இலங்கையில் ஒரு குறித்த காட்டுப் பகுதியில் இறக்கப்படுவர்.

அதன்பின் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் இன்னும் ஒரு சிலரை கப்பலுக்கு ஹெலிகொப்டர்  கொண்டு செல்லும். நான் கப்பலில் இவர்களுக்காக காத்திருந்திருப்பேன். பின்னர் இந்த குடும்பத்தை மூன்று நாடுகளில் ஒன்றில்,  சில சமயம் சுழற்சி முறையில் வைத்திருக்க எண்ணினேன்.

கேள்வி: இந்த நாடுகள் இவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனவா? இவை மேற்கத்தைய நாடுகளா?

பதில் : இல்லை. அவை மேற்கத்தைய நாடுகள் இல்லை. அவற்றில் இரண்டு ஆபிரிக்க நாடுகள்; ஒன்று ஆசிய நாடு. எனது பிரதிநிதிகள் மூலம் இந்த நாடுகளின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் நான் தொடர்பிலிருந்தேன். இதைப்பற்றி அவர்களுடன் பேசியபோது அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

கேள்வி: இந்தத் திட்டம் பெரும் ஆபத்துகளுக்கு முகங்கொடுக்கக் கூடியதாக இருந்ததே? இது வெற்றிபெறும் என நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தீர்களா?

பதில் : ஆம். ஆபத்துமிகுந்ததுதான். ஆனால் நான் அதை முன்னெடுக்க தயாராகவிருந்தேன். இந்த ஆபத்துக்கு முகங்கொடுக்க தயாராக இருக்கவில்லையென்றால் அடுத்தது மரணம்தான். பிரபாகரன் கடைசி நிமிடத்தில் வெளியேவர சம்மதிக்கலாம் என்ற இரகசியமான எண்ணம் எனக்கிருந்தது. இதனால்தான் நான் இந்த திட்டத்தை தீட்டினேன். எதிர்பாராத செயற்பாடு என்பதே முக்கியம். முதல் கட்டம் வெற்றி பெற்றால் வேறு ஆட்களையும் காப்பாற்ற முயன்றிருக்கலாம்.

கேள்வி: அப்படியானால் எங்கு பிழை நடந்தது?

பதில் : அது ஒருபோதும் நினைத்த மாதிரி இருக்கவில்லை. அந்த திட்டத்தை செயற்படுத்த 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்பட்டது. என்னிடமோ அவ்வளவு பணம் இல்லை. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புதான் இந்தப் பணத்தை தந்திருக்க வேண்டும்.

நோர்வேயில் இருந்த நெடியவன் எனக்கு பணத்தை அனுப்புவார் என காஸ்ட்ரோ, சாள்ஸ் அன்டனியிடம் உறுதியாக கூறியிருந்தார். ஆனால் அவர் அதை செய்யவே இல்லை.

நேரம் போய்க்கொண்டிருந்தது. பணம் அவசரம் தேவை என நான் பல முறை கேட்டேன். 'பணம் வந்து  கொண்டிருக்கிறது, பணம் வந்துகொண்டிருக்கிறது' என கூறப்பட்டபோதும் அது ஒருபோதும் வரவில்லை.

வெளிநாடு ஒன்றிலிருந்து விமானப்பிரிவு தலைவர் அச்சுதனுடன் நெடியவன் தொடர்பு கொண்டிருந்தார்.  அச்சுதன் முதலில் அந்த நடவடிக்கைக்கு தேவையான எல்.ரீ.ரீ.ஈ.  விமானிகளை தருவதற்கு சம்மதித்திருந்தார். ஆனால், பின்னர் திடீரென என்னோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். சிலவேளை இது நெடியவனின் கட்டளையாகவும் இருக்கலாம். நான் அந்தரப்பட்டேன்.

ஊதியத்திற்கு பணியாற்றும் விமானிகளை நாடினேன். ஆனால் நிதி இன்மையால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை.

மே மாதத்தின் நடுப்பகுதியில்  இலங்கை இராணுவம் மும்முனைத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டது. அதன்போது வலைஞர்மடம் - முள்ளிவாய்க்கால்- வட்டுவாகல் பகுதிகளை முற்றுகை அரணுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின் ஹெலிகொப்டர் மூலம் காப்பாற்றும் முயற்சி சாத்தியமற்றுப்போனது. பெரும் சோகத்துடன் நான் அந்த திட்டத்தை கைவிட்டேன். நெடியவன் , காஸ்ட்ரோ ஆகியோர் மீது நான் பெரும் சினங்கொண்டேன். ஆனால் எதுவுமே செய்யமுடியாத நிலை.

கேள்வி: சில நாட்களுக்குள் எல்லோரும் இறந்துவிட்டனரா?

பதில் : ஆம். அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். முழுக் குடும்பமுமே போய்விட்டது.  பாலச்சந்திரனின் மரணம் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு 12 வயது மட்டுமே. நான் அவனை நேரில் கண்டதில்லை. ஆனால் அவன் சிறுபையனாக இருந்தபோது நான் பிரபாகரனுடன் அடிக்கடி பேசுவேன். பிரபாகரன் தொலைபேசியை அவனிடம் கொடுத்து ''இந்தா கேபி மாமாவுடன் கதை''  என்பார். நான் அவனுடன் கதைப்பேன். பின்நாளில் அவனுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் நான் இன்னும் அவன் நினைவாகவே உள்ளேன்.

சண்டை உரத்து, ஷெல் வீச்சு அதிகரித்தபோது அவன் பயந்து போயிருந்தான். பின்னர் சாள்ஸ் வான்வழியே தப்புவதற்கான ஒழுங்கை மேற்கொள்ளும்படி என்னை கேட்டிருந்தபோது பயப்படாமல் இருக்கும்படியும் விரைவில் கேபி மாமாவிடம் போய்விடுவாய் என்றும் கூறப்பட்டது. இந்த சின்னப்பையன் தனது பொருட்களில் சிலவற்றை பையொன்றில் போட்டு போகுமிடமெல்லாம் கொண்டு திரிந்தான். ''நான் கேபி மாமாட்ட போறன்'' என்று கூறுவானாம்.

சில சமயம் பாலச்சந்திரன் பையை வைத்துக்கொண்டு தான் கே.பி. மாமாவுடன் போகப்போவதாக ஆட்களுக்கு கூறிக்கொண்டு நடக்கப்போகாத காப்பாற்றும் நடவடிக்கைக்காக காத்திருப்பதை எனது மனத்திரையில் காண்பேன். இப்படி நினைக்கும் போது நான் பெருங்கவலைப்படுவேன். திட்டத்தை செயற்படுத்தாது குழப்பிய நெடியவன் மீது கோபங்கோபமாக வரும்.

கேள்வி: ஏன் அவர் அப்படிச் செய்தார்?

பதில் :  எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இது காஸ்ட்ரோவின் கட்டளைப்படி நடந்திருக்கலாம். கே.பிக்கு இந்த பெருமை கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை என நான் நினைக்கின்றேன். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ. இல் காணப்பட்ட பிழையின் வெளிப்பாடுதான், தனிநபர்கள் தங்களது சிறுபிள்ளைத்தனமான பொறாமைகள், பிரிவுகள் காரணமாக ஒட்டுமொத்தமாக இயக்கத்தையும் போராட்டத்தையும் கெடுத்துக்கொண்டனர்.

கேள்வி: முழுக்குடும்பமுமே கொல்லப்பட்டுவிட்டது என உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் , மதிவதனி உயிரோடு இருக்கிறார் என்றெல்லாம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் சில பகுதியினராலும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாலும் கதைகள் பரப்பப்பட்டுள்ளனவே? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?

பதில் : இப்படியான கதைகள் சிலரது சுயநலனுக்காகப் பரப்பப்படுகின்றன. மற்றும் சிலர் இப்படி நடந்து விட்டதை ஏற்க மனமில்லாமல் இந்த கதைகளை நம்புகின்றனர்.

கேள்வி: இதுப பற்றி நேரடியாகக் கண்ட சாட்சிகள் உங்களிடம் இல்லையல்லவா?

பதில் :  உண்மைதான். கடைசிக் கட்டம்வரை  நான் சூசையுடன் தொடர்பிலிருந்தேன். இது பற்றி நான்  உத்தியோக பூர்வமான மூலங்களிலிருந்தும் கேள்விப்பட்டுள்ளேன். முக்கியமாக நான் பிரபாகரனின் உடலை ரிவியில் பார்த்தேன்.

கேள்வி: அது அவர்களது உடல் அல்ல என இவர்கள் கூறி மறுக்கின்றனரே?

பதில் : முழு முட்டாள்தனமான கதை. ரிவியில் பார்த்தவுடனேயே நான் உடனேயே இது பிரபாகரன் உடல்தான் என்பதை அறிந்துகொண்டேன். நான் மிக மனமுடைந்து போனேன். பல மணித்தியாலங்களாக நான் யாருடனும் தொடர்பின்றி இருந்து தியானம் செய்தேன், பழையதை நினைத்து அழுதேன்.

கேள்வி: இந்த குழப்பத்துக்கு நீங்களும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றீர்கள். பிரபாகரனின் மரணம்பற்றி செய்திகள் வந்தபோது அவர் மரணிக்கவில்லையென்றும் பாதுகாப்பான இடத்தில் உயிருடன் உள்ளதாகவும் நீங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் மறுப்புரையை வாபஸ் பெற்றீர்கள். இதனால் உங்கள் மீதான நம்பிக்கை பெரிதும் சிதறிப்போனது. இது உங்களை விமர்சிப்பவர்களுக்கு நல்ல ஆயுதமாயிற்று. ஏன் இந்த தடுமாற்றம்? விளக்கமுடியுமா?

பதில் : ஆம். இதற்கான விளக்கத்தை தருவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நடந்தது இதுதான். பிரபாகரன், பொட்டம்மான் மற்றும் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து இரகசியமாக நந்திக்கடல் வழியாக அதன் கரையுடாக வெளியேறினர். வேறு இரண்டு குழுக்கள் வேறு திசையால் சென்றனர். காட்டுக்குள் போய்ச் சேர்வதுதான் இவர்களது எண்ணமாக இருந்தது.

முற்றுகையிடப்பட்ட பகுதியைச் சுற்றி மூன்று அடுக்குகளாக படைவீரர்கள் நிற்பதனை முன்னைய உளவுபார்ப்புகள் கண்டறிந்திருந்தன. என்னோடு தொடர்பிலிருந்த சூசை, பிரபாவும் பொட்டுவும் மூன்று அடுக்கு காவலையும் தாண்டி சென்றுவிட்டதாக எனக்கு அறிவித்தார். இதன் பின்  பிரபாகரன் குழுவுடன் தொடர்பேதும் கிடைக்கவில்லை. எனவே நானும் சூசையும் தலைவர் பாதுகாப்பான இடத்துக்கு போய்ச் சேர்ந்து விட்டார் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்பு சாதனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கருதினோம்.

இதன் பின்னரே எமது ஆயுதங்களை மௌனிப்பது பற்றிய அறிக்கையை வெளியிட்டேன். இதை நான் சூசையுடன் பேசிய பின்னர்தான் செய்தேன். சமாதான முன்னெடுப்புகளை விரைவுபடுத்தவும் எஞ்சியுள்ளோரை காப்பாற்றவும் ஒரு அத்திபாரம் இடும் வகையில்தான் நான் அறிக்கையை வெளியிட்டேன்.  வேறு ஓர் இடத்திலிருந்த நடேசனும் புலித்தேவனும் கூட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தனர்.

பிரபாகரன் இராணுவத்தின் பாதுகாப்பு அடுக்களை கடந்து சென்றுவிட்டார் என முதலில் எனக்கு கிடைத்த தகவல்தான் அவர் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட்டார் என நம்பவைத்தது. இந்த நம்பிக்கைதான் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை மறுக்கவும் அவர் பாதுகாப்பாக உள்ளார் எனவும் கூறவைத்தது. அத்துடன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற முதலாவது ஊடக அறிக்கை அம்புலன்ஸில் தப்பிப்போகும் முயற்சியுடன் தொடர்பாக வெளிவந்தது. ஆனால் அந்த அறிக்கை தவறானது. பிரபாகரன் அம்புலன்ஸ் எதிலும் இருக்கவில்லை.

சூசையுடன் நான் தொடர்பை இழப்பதற்கு சற்று முன் பிரபாகரனால் முற்றுகையை தாண்ட முடியவில்லை. அவர் திரும்பிவந்துவிட்டார் என பதறி சூசை, என்னை திகைப்படைய செய்தார். பிரபாகரன் இருந்த இடத்திலிருந்து சில நூறு மீற்றர் தூரத்திலேயே, தான் நின்றதாக கூறினார். இராணுவத்தின் பாதுகாப்பு அடுக்குகளை தாண்டும் முயற்சி சரிவரவில்லை என்றும் பொட்டம்மான் இன்றி பிரபாகரன் தனியே திரும்பிவிட்டதாக சூசை கூறினார். சண்டை கடூரமாக நடக்கின்றது என்பதற்கு மேலாக எந்த தகவலையும் அவரால் தரமுடியவில்லை. சிறிது நேரத்தின்பின் நான் சூசையுடன் தொடர்பை இழந்துவிட்டேன்.

சிறிது நேரத்தின்பின் தொலைக்காட்சியில் பிரபாகரனது உடலை பார்த்தேன். எல்லாம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஆனால். பிரபாகரனின் இறப்பை மறுத்த முதலாவது அறிக்கை, பின்னர் அதை உறுதி செய்து விடப்பட்ட அறிக்கை எல்லாமே நேர்மையாக விடுவிக்கப்பட்டவை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். யாரையும் பிழையாக வழிப்படுத்தும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. அந்த அறிக்கைகள் அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் என்னால் விடுக்கப்பட்டவை. சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. தொடர்பாடல் கஷ்டமாக இருந்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்


  Comments - 0

 • manitha udlukkul erukkum aanma Saturday, 10 September 2011 05:18 PM

  சத்தியம் வெற்றி பெரும். தருமம் வெல்லும்.பொறுத்திருந்து பாருங்கள்.

  Reply : 0       0

  Mohamed Sunday, 22 August 2010 06:16 PM

  யாருக்கு யார் மிளகாய் அரைகின்ரார்கள்?

  Reply : 0       0

  junaideen-pottuvil Sunday, 22 August 2010 06:42 PM

  சுவாரசியமான கதை ?

  Reply : 0       0

  xlntgson Sunday, 22 August 2010 09:08 PM

  இவர் கதை விடுபவராக இருந்தால் அரச கட்சியினர் சும்மா விடுவார்களா, இவரது கூற்றில் ஏதோ உண்மை இருக்க போய் தான் இவரை கௌரமாக வைத்திருக்கின்றனர் என்று சமுசயக்கலாம். KP பிரபாகரனின் மக்கள் மீது கொண்டிருக்கும் பாசம் அபாரம். கடைசி பிள்ளை மாமா மாமா என்று கூறுவான் என்று கூறும் போது மனம் நெகிழ்கிறது. விதி யாரைத் தான் விட்டது, ஒருவர் செய்யும் தவறுகள் தனது பிள்ளைகளையும் குடும்பத்தையும் தன்னை சூழ உள்ளவர்களை எல்லாம் பாதிக்காமல் விடாது. விதி வலியது! தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் கூட விதியை நம்புவதில் ஆச்சரியமில்லை.

  Reply : 0       0

  karikalan Monday, 23 August 2010 09:24 AM

  நாடகமே உலகம் நாளை நடப்பதை நடந்த பின் அறிவோம்

  Reply : 0       0

  sheen Monday, 23 August 2010 09:15 PM

  அமெ. இரட்டைக்கட்டிடங்கள் தாக்கப்பட்டது தான் புலிகளுக்கெதிரான அலை அடிக்கக்காரணம் என்று கூறுவதை ஏற்க இயலாது, ராஜீவ்காந்தியை கொன்றதன் பின் இந்தியாவில் அமெ. பல்தேசிய நிறுவனங்கள் புகுந்து கொள்ள இலேசானதன் பின் இந்தியாவை குழப்பியடிக்க அமெ. & மேலை நாடுகள் பயன்படுத்திய காலிஸ்தான் புலிகள் & விடுதலை புலிகள் அவர்களுக்கு தேவையற்றவர்களாக ஆகி விட்டனர். கடைசி நேரத்தில் ஒரு ஹெலி வாங்க பணம் இல்லாவிட்டால் புலிகளின் தலைவர் மிக நம்பி இருந்த மேலை நாடுகளிடம் இல்லாத வானூர்திகளா? ட்ரோன் ஸ்டெல்த் சீப்ளேன் என்று எத்தனை??

  Reply : 0       0

  illamaran Wednesday, 25 August 2010 06:09 AM

  பிரபாகரன் இறந்து விட்டார் என்று நம்பமுடியாமல் இருபதுற்கு காரணங்கள் பல : முதன் முதலில் காண்பித்த படம் வேறு, 40 வயதில் உள்ள பிரபாகரன் போல் இருந்தார். அவரது தலை மாஸ்க் வைத்தது போல் இருந்தது. மறு நாள் காண்பித்த படம் வேறு. குண்டாக , 45-50 மதிக்கத்தக்க நபர் போல் இருந்தார்.அதுவும் பிரபாகரன் போல் கண்டிப்பாக இல்லை . பின்பு , காட்டிய படம், ச்ற்றேட்சேரில் எடுத்த சென்ற பிரபாகரனின் உடல் என்று கூறப்பட்ட உடல் தான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--