2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ஆபாச படம் காண்பித்து மகளை வன்புணர்ந்த தந்தை உட்பட ஐவர் கைது

Editorial   / 2025 டிசெம்பர் 14 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த   தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும்  விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடனான  வழக்கு சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான் ஜே.பீ .ரஞ்சித்குமார் முன்னிலையில்  கடந்த வெள்ளிக்கிழமை (12)  அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தந்தை  உட்பட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன்  அன்றைய தினம் சந்தேக நபர்களான    தந்தை, தாய்  தவிர ஏனைய 4 சந்தேக நபர்களையும்   அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.

இதே வேளை    குறித்த சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன?

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர்  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சுமார் 5 மாத காலமாக திரைமறைவில் விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின்  1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று   வழங்கிய தகவலின் படி துரிதமாக செயல்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நிந்தவூர் பொலிஸார்  மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு   அதிகாரிகளிடம்  சம்பவம் குறித்து அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து  பாதிக்கப்பட்ட  சிறுமியை நிந்தவூர் பொலிஸ்  நிலையத்திற்கு  அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர்  மற்றும் மகளிர் பணியக  அதிகாரிகளிடம் நடந்த அனைத்தையும் குறித்த  சிறுமி கூறியுள்ளார்.

இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக  12 வயது மதிக்கத்தக்க தனது மகளை  முதலில் ஆபாச படம் பார்த்து வன்புணர்வு  செய்த தந்தை பின்னர் சம காலத்தில்  ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்து வந்தமையும்  பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில்  தந்தை உட்பட 5 பேரை தற்போது  கைது செய்துள்ள பொலிஸார்  தலைமறைவாகிய ஏனைய 3 சந்தேக நபர்களை   தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் அச்சிறுமியிடம் இருந்து  பெறப்பட்ட தகவலின்படி  முதலில் தந்தை கைது செய்யப்பட்டார். பின்னர் சாய்ந்தமருது, சம்மாந்துறைப்  பகுதியில் அச்சிறுமியை  பணத்திற்கு வாங்கி வன்புணர்ந்த   04 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் 52, 41,24 மற்றும்40  வயதிற்குட்பட்ட  பலதார திருமணம் செய்த  சந்தேக நபர்களாவர்.மேலும் தந்தை சுமார் 05 மாத காலமாக தனது மகளை  பல்வேறு நபர்களுக்கு விற்று வந்ததாக பொலிஸ்  விசாரணைகளில் தெரியவந்துள்ளது  

இது தவிர இச்சம்பவத்தில் தலைமறைவான ஏனைய மூன்று சந்தேக நபர்களையும்  கைது செய்ய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் ​வெதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலில்    அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி தந்த நாணயக்காரவின் மேற்பார்வையின் கீழ்  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் .டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில்  பெருங்குற்றப் பிரிவு   பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான பொலிஸ் குழு  மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர்  மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி  தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள்  இணைந்து குறித்த  கைது   நடவடிக்கை  மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விபச்சாரம் ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு பகுதியில் வசித்து வந்த ஐவர் கொண்ட இக்குடும்பம் பொருளாதார நிலைமை காரணமாக அவ்விடத்தில் இருந்து குடிபெயர்ந்து அருகில் உள்ள மற்றொரு ஊரான  நிந்தவூர் பகுதியில் உள்ள புறநகரில்  வாடகை அடிப்படையில் வீடொன்றை பெற்று வாழ்ந்து வந்தனர்.இக்குடும்பத்தில் 18 வயது ஆண்,  12 வயது பெண் பிள்ளை உட்பட  5 வயது ஆண் பிள்ளையும் உள்ளடங்குகின்றனர்.

இதில் 18 வயது ஆண்  பிள்ளை உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஊடாக கல்வி கற்று  வருகின்றார். இச்சம்பவத்தில் 12 வயதான பெண் பிள்ளையே  பாதிக்கப்பட்டவராவார்.சிறுமியின் தந்தை கடற்றொழில் செய்பவர் ஆவார்.தந்தைக்கு 40 வயது என்பதுடன் தாய்க்கு 36 வயதாகும்.ஆரம்ப காலத்தில் தந்தையுடன் தொழில் உறவில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் முறைகேடான தொடர்புகளை தந்தையின் சம்மதத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.

இத்தொடர்புகள் தங்களது வசதியின்மையை காரணம் காட்டி  பொருளாதார நன்மைக்காக மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்த போதிலும் மாளிகை காட்டில் இருந்து ஆரம்பமாகி பின்னர் வாடகை வீடு அமைந்துள்ள நிந்நவூர் வீட்டிலும் குறித்த விபச்சாரம்  தொடர்ந்தது.

பின்னர் தான் குறித்த குடும்பத்தில் இருந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமியும்  ஆபாச படம் காண்பிக்கப்பட்டு தனது தந்தை மூலம் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.பின்னர்   ஏனைய சந்தேக நபர்களுக்கும் சிறுமி  பணத்திற்காக விற்கப்பட்டுள்ளார்.

இச்செயற்பாடுகள் தாயின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.இதன் போது வாடிக்கையாளர் ஒவ்வொருவரிடம் இருந்தும் 20 ஆயிரம், 10 ஆயிரம், 2 ஆயிரம், என பணம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X