2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

இனியும் 'சீனா காட்'டை இலங்கை விளையாடப் போகிறதா?

Super User   / 2010 நவம்பர் 18 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தின் முடிவின் பின்னரான புதுடில்லியுடனான சமன்பாட்டில் தொடர்ந்து 'சீனா காட்டை' விளையாட விரும்பும் இலங்கைக்கு நோபாளத்திலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. நேபாளத்துக்குள்ள இந்தியாவுடனான பிரச்சினையை சீனாவை ஈடுபடுத்தாமல் நேபாளம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என சீன அரசுத் தலைமை கூறியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா கூறியுள்ளார்.

நேபாளம் தொடர்பில் இந்தியாவினதும் சீனாவினதும் பாதுகாப்பு தொடர்பான பயங்களை தீர்ப்பதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை உதவும் என்ற பிரசண்டாவின் கருத்துக்கு பதில் கூறுவதாகவே சீனாவின் அறிவுபூர்வமான இந்தக் கருத்துக் கூறப்பட்டது. இந்தியாவினதும் சீனாவினதும் தலையீட்டின் காரணமாகவே நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கான தீர்வு குழப்பப்படுவதாக ஒரு கருத்தும் உள்ளது.

நேபாளத்தின் அரசியலமைப்பு சபையே நாடாளுமன்றம் ஆகும். இந்த அரசியலமைப்பு சபை 16 தடவை வாக்கெடுப்பை நடத்தியும் பிரதம மந்திரியை தெரிவு செய்ய முடியாமல் போயிற்று. பிரசண்டாவிலிருந்து பலர் பிரதமராக முயன்று தோல்வி கண்டனர். இதற்கு தேவையான 50 சதவீத ஆதரவை இவர்களால் பெறமுடியவில்லை.

இந்தியாவை சீண்டுகின்ற அதேவேளை, இந்தியாவை சீனாவுடன் தன்னையும் தன் கட்சியையும் அடையாளப்படுத்தும் மாவோயிஸ்ட்டான பிரசண்டா, இப்போது நேபாளத்தில் அரசியல் ரீதியில் சமாதானம், ஸ்திரத்தன்மை என்பவற்றை கருத்தில் கொண்டு தற்போது மத்திய நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிகின்றது.

இதன் கருத்து நேபாளத்தில் சீனாவால் செய்ய முடியாமல் போனதை இந்தியா செய்யும் என்பதல்ல. சீனாவின் எல்லையில் இந்தியா என்ன செய்யக் கூடாது என்று சீனா நினைக்கின்றதோ  அதை, இந்தியாவின் எல்லையில் சீனா செய்ய விரும்பாது என்பதே அதன் பொருள்.

நடைமுறை விளைவுபற்றிய அதன் அக்கறையுடன், இந்தியாவுடனான இருப்பக்க உறவுகளை, சீனா அணுகுவது இது முதல் தடவையல்ல. முத்துமாலைத் திட்டம் என வர்ணிக்கப்படும், சீனாவின் திட்டத்தை சீனா மீள்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது புதுடில்லிக்கு இத்திட்டம் பற்றியுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது வேறு விடயம்.

சீனாவின் கிழக்கு ஆசிய அயல்நாடுகளுடன், தந்திரோபாய ரீதீயான பேச்சுகளை தொடக்குவதன் மூலம் இந்தியா பதில் நடவடிக்கை எடுத்திருக்குமாயின் தீர்வுக்கான தோற்றுவாயையும் தீர்வையும் தேடி அதிக தூரம் போக வேண்டியிருந்திருக்காது.

இருப்பினும் இந்தியாவின் அயலிலுள்ள சீனாவின் அணியொன்று, அது ஒரு அரசாங்கமாக இருந்தாலென்ன, இல்லாதிருந்தாலென்ன, இந்தியாவோடு தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இவ்வளவு வெளிப்படையாக பேசுவது இதுவே முதல் தடவை.

சீனா இந்தியாவுக்கு கூற விரும்பியது பிரசண்டா மூலம் கூறப்பட்டதா என்பது  ஊகத்துக்குரிய விடயமாகும்.

பொது எதிரியான இந்தியாவுக்கு தொல்லைகொடுப்பதற்கு இந்தியாவின் அயலிலுள்ள சீனாவின் கூட்டு நாடான பாகிஸ்தான், சீனாவை அழைத்தபோதும், கார்கில் யுத்தத்தில் சீனா சம்பந்தப்படவில்லை.  

இதற்கு நீண்ட காலத்தின் முன் பனிப்போரின் முடிவுக்கு முன் சீனா தனக்கு அப்போதுதான் புதிதாக கிடைத்திருந்த அமெரிக்க நண்பன், பங்களாதேஷ் யுத்தம் உச்சத்திலிருந்த நேரத்தில் பாகிஸ்தான் உதவி வழங்கும்படி கேட்டதை ஏற்று நடக்கவில்லை.

இவற்றை மீட்டுப்பார்க்கும் போது அந்த நேரத்தில் சீனாவின் தீர்மானம் மூன்றாம் உலக யுத்தத்தை தவிர்ப்பதற்கு உதவியது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பங்களாதேஷில் இந்தியாவின் இராணுவ முன்னேற்றத்தை நிறுத்துவதற்காக அமெரிக்கா தனது 7 ஆவது கப்பல் அணியை தாமதமாக நகர்த்திய நிலையில் அதே வருடம் 1971 இன் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்திருந்த வேளையில் இடம்பெற்ற நிகழ்வுகளை அவதானித்தபோது யுத்தம் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்பட்டன.

இந்தப் பின்னணியில் பங்களாதேஷ் யுத்தத்தின்போது பாகிஸ்தான் விமானப் படைக்கு எண்ணெய் மீள்நிரப்பும் இலங்கை திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இது இறைமையுள்ள நாடொன்றின் இறைமையான தீர்மானம். ஆனால், இது கொழும்பு எதிர்பார்த்ததைவிட மிக மோசமான விளைவுகளை கொண்டு வந்திருக்கலாம். ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சியை ஒடுக்க இந்தியா விரைந்து போனதைக் கூட கணக்கில் எடுக்காமல் இலங்கை நடந்த முறையை பார்க்கும்போது இந்தியா நன்றி பாராட்டப்படாத வேலையை செய்ததாக இந்திய விமர்சகர்கள் கூறினர்.

நல்லவேளையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிலிருந்து கிடைக்கும் அபிவிருத்தி உதவியையும், இந்தியாவுடனான தந்திரோபாய உறவுகளையும் வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளார். 'இந்தியா எமது உறவு, மற்றெல்லோரும் நண்பர்கள்' - இப்படி அடிக்கடி கூறுவது ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு மிகவும் பிடித்த விஷயம். இலங்கையில் உள்ள, எப்போதாகிலும் ஆட்சிக்கு வரக்கூடிய அரசியல் கட்சிகளும் இந்த கருத்தைக் கொண்டுள்ளன.

பிரசண்டாவுக்கு வழங்கிய அதே அறிவுரையை இலங்கையின் தலைமைக்கும் சீனா வழங்கியிருக்குமா என்பது ஊகத்துக்கும் உரியதே.

இந்தியா சம்பந்தப்படும் வல்லரசு சமன்பாடுகளுடன் தொடர்புறும் வேளையில் இலங்கை தனது கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்த்தாலே போதுமானது.

'ஒப்பரேஷன் பூமாலை' நடந்த உச்ச காலத்தில், பனிப்போர் சகாப்தத்தில், 'முதலாளித்துவ'  இலங்கையின் நட்பு நாடுகள் எனக் கருதப்பட்ட அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள், வாயளவில் கூட எதையும் செய்யவில்லை என்பதை மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம் கண்டு கொண்டது.

இப்படித்தான் வல்லரசுகளின் செய்லகள் இருக்கும். இதை அமெரிக்கா இலங்கைக்கு செய்தபோது அது ஏற்கனவே வல்லரசாக இருந்தது. இன்று, சீனா வல்லரசாக விரும்பும் நாடு மாத்திரமே, இதுவரை.!

(தமிழில்: ந.கிருஷ்ணராசா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .