Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஞ்சியுள்ள 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் - கல்முனை மாநகர சபைக்கு மாத்திரமே தேர்தல் நடைபெறவுள்ளது.
கல்முனை மாநகரம் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் உள்ளது. மீன்பிடி மற்றும் வர்த்தகத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இந்த மாநகரத்தினை தென் கிழக்கின் முக வெற்றிலை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அழைப்பார்.
சுமார் 60,000 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கல்முனை தேர்தல் தொகுதியை முழுமையாக உள்ளடக்கியதே கல்முனை மாநர சபையாகும். 19 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கல்முனை மாநகர சபை தேர்தலில் பதிவு செய்யப்பட்ட ஒன்பது அரசியல் கட்சிகள் மற்றும் எட்டு சுயேட்சை குழுக்கள் சார்பாக சுமார் 400 பேர் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 ஆசனங்களையும், இலங்கை தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களையும், ஜனநாயக தேசிய முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
இம்முறை நடைபெறும் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் முக்கிய வேட்பாளர்களுடன் தமிழ்மிரர் இணையத்தளம் விசேட நேர்காணலொன்றை மேற்கொண்டது.
இந்த நேர்காணலின் முழு வடிவம் வருமாறு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் பிரதி பொது செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர்:
கேள்வி: கல்முனை மாநகர சபையின் ஆட்சியை உங்களது கட்சி கைப்பற்றினால் எவ்வாறான செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளீர்கள்?
பதில்: கல்முனை மாநகரத்தின் ஆட்சியை கைப்பற்றினால் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கல்முனை பொது சந்தையினை நவீன முறையில் அமைப்பேன். ஏனென்றால் மாநகர எல்லைக்குள் ஒழுங்கான பொது சந்தையின்மையினால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதற்கு அடுத்தாக கல்முனை மாநகரத்திலுள்ள மேட்டு வட்டடை பிரதேசத்தில் புதிய நகரமொன்றை அமைத்தல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வண்ணம் சிறந்த முறையில் வடிகான் அமைத்தல் ஆகியன எனது தூர நோக்காகவுள்ளன. அத்துடன் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளையும் செய்வேன்;.
கல்முனை மாநகரத்திலுள்ள மேட்டு வட்டடை பிரதேசத்தை நிரப்பி நவீன வீட்டு திட்டமொன்றை அமைப்பதன் மூலம் கல்முனை பிரதேசத்திலுள்ள காணி பிரச்சினை மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடில்லா பிரச்சினை என்பவற்றை தீர்க்க முடியும்.
இதேவேளை, மேட்டு வட்டடை பிரதேசத்திலுள்ள சதுப்பு நிலங்களை நிரப்புவதன் மூலம் மழை காலத்தில் கல்முனை பிரதேசத்தில் பாரிய வெள்ள பெருக்கு ஏற்படும். இதை தடுப்பதற்காக கொழும்பில் தியவென் ஓயா போன்று கல்முனையில் வாவியொன்றை அமைப்பதன் மூலம் தீர்வு காண முடியும்.
இதற்கு மேலதிகமாக கல்முனை மாநகர எல்லைக்குள் மூன்றில் ஒரு பங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அவர்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப எனது சேவைகள் வழங்கப்படும்.
எனது ஆட்சிக் காலத்தின் போது தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படமாட்டார்கள். கல்முனை மாநகர எல்லைக்குள் முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை போன்ற செயற்பாடுகள் தமிழ் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படும்.
கேள்வி: இவ்வாறான செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கு தேவையான நிதிகளை எவ்வாறு பெறவுள்ளீர்கள்?
பதில்: இந்த நிதியினை பெறுவதற்கு மூன்று வழிகளை தீர்மானித்துள்ளேன். முதலாவது மஹிந்த சிந்தனைக்கிணங்க - பின் தங்கிய பிரதேசங்களின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்ய முடியும். எமது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி என்பதனால் கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தேவையான அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடமிருந்து இலகுவாக பெற முடியும்.
இரண்டாவதாக, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்ய வெளிநாடுகள் தயாராக உள்ளன. இதனால் வெளிநாடுகளின் உதவியை பெற்று இந்த செயற்றிட்டங்களை மேற்கொள்ள முடியும்.
மூன்றாவதாக கல்முனை மாநகரத்திற்குள்ள வருமானத்தின் மூலமும் என்னால் முன்வைக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்களை மேற்கொள்வேன்.
இதேவேளை, நான் கல்முனை மேயராக தெரிவு செய்யப்பட்டால் கல்முனை மாநகரத்தின் அபிவிருத்திக்கு தேவையான நிதியுதவிகளை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ.புட்டேன் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக கொழும்பு நகரை போன்று கல்முனை நகரத்தையும் அபிவிருத்தி செய்து தருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இதற்காக பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலுள்ள நகர அபிருத்தி அதிகார சபையை பயன்படுத்த முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
கேள்வி: உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் நேய ஆட்சி தொடர்பாக விளக்க முடியுமா?
பதில்: வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மாநகரத்தின் அபிவிருத்திக்கு தேவையான நிதிகளை வழங்குவதற்கு தேவையான பிரதான காரணி வெளிப்படைத்தன்மையாகும். வெளிப்படை தன்மை என்பது மக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும்.
இதனாலேயே தனது விஞ்ஞாபனத்திற்கு மக்கள் நேய ஆட்சி என பெயர் சுட்டியுள்ளேன். இதற்கு மேலதிகமாக மக்கள் விரும்பக் கூடிய ஆட்சியை மேற்கொள்ளலும் மக்களால் முன்வைக்கக் கூடிய அபிவிருத்தி செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தலுமாகும். இவையும் மக்கள் நேய ஆட்சியேயாகும்.
அத்துடன் மாநகரத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் நிதி மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்படும். இதன் மூலம் வெளிப்படை தன்மை ஏற்படும்.
இதனால் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மாநகரத்தின் அபிவிருத்திக்கு தேவையான நிதிகளை வழங்கும்.
கேள்வி: கல்முனை மாநகர மேயர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?
பதில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே கல்முனை மாநகர மேயர் தெரிவு செய்யப்படுவார் என மருதமுனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய இடங்களில் இடம்பெற்ற பிரசார கூட்டங்களின் போது கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஒருபோதும் வாக்குக் குறைவாக பெற்றவர்கள் மேயராக நியமிக்கப்பட்டமாட்டார்கள். இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் நான் ஒரு வாக்கு குறைவாக எடுத்தாலும் மேயர் பதவியினை எனக்கு வழங்குமாறு கட்சி தலைமைத்துவத்திடம் கேட்கமாட்டேன்.
கேள்வி: கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்:தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்பு வாக்கினை அதிகம் பெற வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். இதனை நான் வரவேற்கிறேன். எனென்றால் வேட்பாளர்கள் விருப்பு வாக்கும் அதிகம் பெற வேண்டும் என்ற நோக்கத்தினால் கட்சியின் வாக்கு வங்கியும் அதிகரிக்கும். இதனால் கட்சியின் வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கும். இதேவேளை, வேட்பாளர்களிடையேயான விருப்பு வாக்கு போட்டி காரணமாக கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது.
இலங்கை தமிழரசு கட்சியின் முதன்மை வேட்பாளராக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் குச்சித்தம்பி ஏகாம்பரம்:
கேள்வி: கல்முனை மாநகர சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி எவ்வாறு உள்ளது?
பதில்: மாநகர எல்லைக்குள் மூன்றில் ஒரு பங்கினரே தமிழர்களாவர். இதனால் மாநகரத்தின் ஆட்சியை கைப்பற்றுவது கடினமாகும். எனினும் கல்முனை மாநகர சபையில் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரும்.
மாநகர சபையின் கடந்த ஆட்சியின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக ஆறு பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இம்முறை ஏழு ஆசனங்களை எமது கட்சி கைப்பற்றும் என்பது நிச்சயம்.
கேள்வி: கல்முனை மாநகர எல்லைக்குள் மூன்றில் ஒரு பங்கினரே தமிழர்களாவர். இந்த நிலையில் பல தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இதனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படமாட்டாதா?
பதில்: பல தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்டாலும் அவர்களினால் ஓர் ஆசனத்தைக் கூட கைப்பற்ற முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக மாத்திரமே கல்முனை மாநகர சபைக்கு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
ஏனைய தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்யும் தவறினை கல்முனை வாழ் தமிழ் மக்கள் இல்லாமல் செய்யமாட்டார்கள்.
இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனே தமிழ் மக்கள் உள்ளனர் என்பதை தெரிவிக்க முடியும். இதனால் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிப்பார்கள் என்பதனை உறுதியாக கூற முடியும்.
கேள்வி: இத்தேர்தலில் வெற்றியடையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் - கல்முனை மாநகர வாழ் மக்களுக்கு எவ்வாறான சேவைகளை மேற்கொள்ளவுள்ளீர்கள்?
பதில்: தற்போது தேர்தல் பிரசாரங்களில் எமது கட்சியின் கொள்கையை பிரகடனப்படுத்தி வருகின்றோம். தேர்தலின் பின்னரும் அதற்கே முதலிடம் கொடுப்போம்.
அதேநேரம் கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் தமிழ் மக்களுக்கு பல இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறான இழப்புக்கள் இனிமேல் ஏற்படாமல் இருக்க நாம் பாடுபடுவோம். அத்துடன் மாநகர எல்லைக்குள் எமது கட்சியின் உதவியுடனும் மாநகர சபையின் உதவியுடனும் அபிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
கேள்வி: மாநகரத்தை ஆட்சி செய்யவுள்ள ஆளும் கட்சியுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு இணைந்து செயற்படவுள்ளது?
பதில்: நிச்சயமாக கல்முனை மாநகரத்தை ஆட்சி செய்யவுள்ள ஆளும் கட்சியுடன் எமது கட்சி இணைந்து செயற்படும். அதாவது எமது சமூகத்தினரிற்கு பாதகமின்றி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
இதுபோன்றே முன்னர் கல்முனை மாநகரத்தை ஆட்சி செய்த மேயர்களுடன் எமது உறுப்பினர்கள் செயற்பட்டுள்ளனர். அதேநேரம் மாநகரத்தை ஆட்சி செய்யும் ஆளும் கட்சியுடன் இணைந்து- பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் பெற்றுக்கொள்வோம்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு எமது சமூகத்திற்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்வோம். அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் இம்மாநரகத்தில் இரு சமூகத்திற்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்காக மிக கவனமாக செயற்படுவோம்.
கல்முனை மாநகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுபவரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான நௌசர் என்றழைக்கப்படும் ஏ.சி.எஹியா கான்:
கேள்வி: கல்முனை மாநகர சபையின் ஆட்சியை உங்களது கட்சி கைப்பற்றினால் எவ்வாறான செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளீர்கள்?
பதில்: கொழும்பு மாநகர சபையை போன்ற ஒரு சபையே கல்முனை மாநகர சபையாகும். ஆனால் கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் எந்த அபிவிருத்தி செயற்பாடுகளும் கல்முனை மாநகர சபையால் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நான் வெட்கப்படுகின்றேன்.
கல்முனை மாநாகரத்தை இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது சொல்லக் கூடிய வகையிலான எந்த அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பை போன்று கல்முனையை அபிருத்தி செய்ய அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும்.
இதனால், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றினால் மாத்திரமே கல்முனை மாநகரத்தை கொழும்பை போன்று அபிவிருத்தி செய்ய முடியும்.
இதற்கு மேலதிகமாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கல்முனை மாநகரத்தின் ஆட்சியை கைப்பற்றும் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான ஏ.சி.எஹியா கான் மேயராக வந்தால் வடக்கில் தான் மேற்கொள்ளப்பட்டதை போன்ற அபிருத்தியை கல்முனையிலும் மேற்கொள்வேன் என அமைச்சர் றிசாட் பதியுதின் தெரிவித்துள்ளார்.
இதன் முதற்படியாக கல்முனை பிரதேச அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபா நிதியொதுக்கீடு செய்யவுள்ளார். இதனை கொண்டு வீதி புனரமைப்பு மற்றும் பாடசாலை அபிவிருத்தி போன்ற பல அபிவித்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்;ளேன். இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகள் தேர்தலுக்கு பின்னரும் இடம்பெறும்.
கேள்வி: உங்களை மேயராக்குவதன் மூலம் கல்முனையை அபிவிருத்தி செய்வேன் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தமையினால் உங்கள் கட்சியின் வேட்பாளர்களிடையே முரண்பாடுகள் ஏற்படவில்லையா?
பதில்: இதுவரை அவ்வாறு ஒன்றும் இடம்பெறவுமில்லை, இனி இடம்பெற போவதுமில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஏழு பேரும் மிக ஒற்றுமையாக தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
எங்களது தலைவர் றிசாட் பதியுதீன் என்னை மேயராக்குவேன் என்று கூறியதில் எந்த தவறுமில்லை. எனென்றால் நான் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மருமகன். அவரின் செயலாளராக பல வருடங்கள் கடமையாற்றியுள்ளேன். அது மாத்திரமல்லாமல் மும்மொழிகள் பேசக் கூடிய தொழிலதிபர் என்ற வகையில் மேயர் பதவிக்கு நான் சிறந்தவன் என்ற காரணத்தினாலேயே அமைச்சர் கூறியிருந்தார். அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட தலைவராகவும் என்னை அமைச்சர் றிசாட் பதியுதின் இனங்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேள்வி: ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக இருந்த நீங்கள் கல்முனை மாநகர சபை தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்ததற்கான காரணம் என்ன?
பதில்: நான் எப்போதும் நாட்டை ஆட்சி செய்யும் கட்சியையே விரும்புவேன். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. அந்த அடிப்படையில் நான் அரசாங்கத்துடன் இணைவது என்றால் முதலில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தராக இருந்தால் அரசாங்கத்துடன் மிக இலகுவில் இணைந்து விட முடியும் என எண்ணினேன். இதற்கிணங்க ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டேன். இதனையடுத்து எனக்கு கல்முனை தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. எனினும் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பெரும்பான்மை இனத்தவரின் செல்வாக்குகளே அதிகமாக இருந்தது. இதன் காரணமாக என்னால் கட்சிக்குள் முன்னேற முடியாமல் போனது. இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணையுமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் அழைப்புவிடுத்தார். இதனையடுத்தே நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டேன்.
கேள்வி: கல்முனை மாநகர சபை தேர்தலின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்தும் பிரிந்து இன்னுமொரு கட்சியில் இணையமாட்டீர்கள் என்பது எவ்வளவு நிச்சயம்?
பதில்: நான் ஒருபோதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பிரியமாட்டேன் என உறுதியான சொல்கிறேன். ஏனென்றால் அரசாங்கத்துடனிருந்தால் மாத்திரமே மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என்பதனால் தொடர்ந்து அக்கட்சியுடனேயே இருப்பேன்.
கேள்வி: இத்தேர்தலில் நீங்களும் உங்களது கட்சியும் தோல்வியடைந்தால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பதவி தொடருமா?
பதில்: தற்போது நான் மக்கள் சேவையில் ஈடுபடுவதற்காகவே களமிறங்கியுள்ளேன். இதற்காக எனது கொழும்பிலுள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்தையும் தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளேன். இத்தேர்தலில் நான் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக தொடர்ந்து கல்முனையில் தங்கியிருப்பேன். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அம்பாறை மாவட்ட செயலகம் எனது வீட்டிலேயே உள்ளது. இந்த செயலகத்தின் ஊடாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் புரிவேன். அத்துடன் நான் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கல்முனை பிரதேச அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் எனக்கு ஊடாகவே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் றிசாட் பதியுதின் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடும் மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த வேட்பாளர் எஹியா கான்:
கேள்வி: கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி எவ்வாறு உள்ளது?
பதில்: கல்முனை மாநகரத்தின் ஆட்சியை ஐக்கிய தேசிய கட்சி கைபற்றமாட்டது. எனினும் எமது கட்சி சார்பாக சுமார் ஆறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதன் மூலம் மாநகரத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதிவினை பெற்று இரண்டாவது கட்சியாக எமது கட்சி செயற்படும்.
கேள்வி: கல்முனை மாநகர சபையின் முன்னைய ஆட்சி காலத்தில் ஒரு உறுப்பினரையும் கொண்டிராத ஐக்கிய தேசிய கட்சியினால் இம்முறை எவ்வாறு ஆறு உறுப்பினர்களை வெற்றிகொள்ள முடியும்?
பதில்: நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எதிர்கட்சி வரிசையில் புரிந்துணர்வோடு செயற்பட்டு வந்தமையினால் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவில்லை. இதனாலேயே கல்முனை மாநகரத்தின் முன்னைய ஆட்சி காலத்தில் எமது கட்சிக்கு ஒரு உறுப்பினரும் இல்லை. அந்த தேர்தலில் எமது கட்சி போட்டியிட்டிருந்தால் எமது கட்சி பல உறுப்பினர்களை கைப்பற்றியிருக்கும். இம்முறை எமது கட்சிக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து வாக்குகள் கிடைக்கும். இதனால் எமது கட்சி சார்பாக ஆறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
கேள்வி: உங்கள் கட்சியினால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் கல்முனை மாநகரத்தில் எவ்வாறான அபிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளீர்கள்?
பதில்: கல்முனை மாநகரத்தின் ஆட்சியை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றாவிட்டாலும் மேயரினால் மேற்;கொள்ளக் கூடிய அபிவிருத்திகளை போன்ற அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை வழங்குவதாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே உறுதியளித்துள்ளார்.
இதனால் எமது கட்சி சார்பாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எந்தவித பயமுமின்றி, தயா கமகேயின் நிதியுதவியின் மூலம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். இதற்காக மேயரின் அனுமதியோ அல்லது உதவியோ எமக்கு தேவையில்லை.
கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தயா கமகேயின் பங்களிப்புடன் பல அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தீர்மானித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக தயா கமகேயின் நிதியுதவியில் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 60 இலட்சம் ரூபா செலவில் சிறுவர் தினத்தினையொட்டி களியாட்ட நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்திருந்தோம். இதுபோன்ற பல திட்டங்களையும் மேற்கொள்வோம்.
தொகுப்பு: றிப்தி அலி
படங்கள்: எஸ்.எம்.எம்.ரம்ஸான்
uooran Wednesday, 05 October 2011 05:55 PM
இங்கு கருத்துரைத்த கட்சி சார்பானவர்களின் நிலைப்பாட்டை பாருங்கள்,
இதில் இருந்தே நிசாம் காரியப்பர் மாநகர மேயருக்கு பொருத்தமானவர் என அடையாளம் காண முடிகிறது. அவரின் அறிவு முதிர்ச்சியும் பரந்த நோக்கும் பிரதேச இனவாதமற்ற சிந்தனையும் புரிகிறது. அன்பானவர்களே தயவு செய்து எந்த ஊரார் என பார்க்க வேண்டாம் ஆட்களை பாருங்கள். பிறகு முன்பு கவலைப்பட்டதை போன்று கவலைப்பட வேண்டாம். இருபத்தி ஐந்து வேட்பளர்களையும் பிரதேச வாதமற்ற தராசில் நிறுத்துப்பாருங்கள். பின்னர் யாருக்காவது வாக்களியுங்கள். இது உங்கள் விருப்பம் ஜனநாயக நாடு.
Reply : 0 0
Riyal Wednesday, 05 October 2011 05:59 PM
நிசாம் காரியப்பர் சொன்னவையெல்லாவற்றையும் யாரும் நம்பாதீங்க.
Reply : 0 0
neethan Wednesday, 05 October 2011 07:00 PM
நிசாம் காரியப்பர்,குச்சிதம்பி ஏகாம்பரம் வெளிப்படையாகவே பேசி உள்ள நிலையில், மாநகரின் நல்லாட்சிக்கு மக்கள் ஆணை கிடைக்கட்டும்.
Reply : 0 0
pasha Wednesday, 05 October 2011 07:35 PM
நிசாம் காரியப்பர் சாய்ந்தமருதை புறக்கணிக்கமாட்டார் என்பதற்கு எந்த உறுதியும் வழங்கவில்லை அவர் சொன்னதெல்லாம் தமிழ் மக்களை அவர் புறக்கணிக்கமாட்டார் என்பது தான்.
Reply : 0 0
UMMPA Wednesday, 05 October 2011 07:59 PM
தம்பி உங்களுக்கு தெரியுமா இந்த காரியப்பர் குடும்பத்தின் வரலாறு ! இவர்களின் சரித்திரமே இந்த நாட்டு சரித்திரத்தில் ஓர் அங்கம் . இவர்களின் உண்மை தன்மைதான் அரசன் தொட்டு நமது மக்கள்வரை இவர்களின் பின்னால் திரண்டு கொண்டிருப்பது.
Reply : 0 0
razeek kalmunai Wednesday, 05 October 2011 08:28 PM
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் விசுவாசமாக நீண்ட காளத்துக்கு இருந்தாக சரித்திரம் உண்டா? அரசை விட்டு பிரிந்தால் மக்களுக்கு நிசாம் சார் என்ன செய்வார் அரசு சார்பு இன்றி இவரால் அபிவிருத்திக்கு நிதியினை எடுக்கமுடியுமா ?
Reply : 0 0
rozan Wednesday, 05 October 2011 08:36 PM
சிராஸ்ட்ட நேர்காணலையும் இங்க போடுங்க..... நிசாம் கொழும்பில இருப்பார். அதுதவிர வேற ஒன்றும் செய்ய மாட்டார்......
Reply : 0 0
porali Wednesday, 05 October 2011 08:38 PM
ஊரான்.......நிசாம் இவ்வாறுதான் சொல்வார்....
Reply : 0 0
ayoo kalmunai Wednesday, 05 October 2011 08:44 PM
நிசாம் உங்களுடன் இருப்பவர்கள் நிறைப்பேர் கொந்தாறத்து காரர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நிதி மக்களுக்கு தெரிய படுத்தத் முடிமா? விடுவார்களா அவர்கள் எல்லோரும் ?.............
Reply : 0 0
Ossan Salam - Doha Wednesday, 05 October 2011 09:34 PM
இவர் ஏதோ முழு நாட்டையும் பிடித்து ஆட்சி செய்யப்போகின்ற ஒரு நினைப்பில் இப்படி கூறுகின்றாரா ஒன்றும் புரியவில்லையே?
Reply : 0 0
careem Wednesday, 05 October 2011 11:02 PM
ரோசஹ்ன்: சிராஸ் இந்த கட்சிகள் எதிலையுமில்லையா??????????
Reply : 0 0
ruzny Thursday, 06 October 2011 12:46 AM
யஹியக்ஹனுக்கு மட்டும்தான் மூன்று மொழியும் தெரியும்போல ..இபொழுது GRADE 1 பிள்ளைக்கு கூட மூன்று மொழியும் தெரியும் ..மயோன் இப்போது நாட்டிலேயே இல்ல. அது அவருக்கு தெரியபோல இந்த பருப்பு எல்லாம் இங்க வேகாது ...
Reply : 0 0
Dean Thursday, 06 October 2011 01:17 AM
நிசாம் காரியப்பர் மேயர் பதவிக்கு பொருத்தமானவர் , முஸ்லிம் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும், அதில் சந்தேகமில்லை . பிரச்சினை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதுதான்.
Reply : 0 0
Hameed faleel Thursday, 06 October 2011 01:21 AM
பிரதேசவாதிகளே .. பிரிந்தது போதும். இனிமேல் அவது புத்தியுடன் நடவுங்கள் ... நல்ல தலைமைக்கு இடம் கொடுப்போம். கல்முனை மாநகரம் இனிமேல் ஆவது அபிவிருத்தி காண பிரார்திப்போம் ..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
35 minute ago
45 minute ago
1 hours ago