2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

புனர்வாழ்வு பெற்று வீடுதிரும்பும் முன்னாள் புலி உறுப்பினர்கள்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை மீண்டும் சமூகமயப்படுத்தும் முக்கியத்துவமிக்க ஒரு நிகழ்வு அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

முன்னாள் புலி உறுப்பினர்கள் சுமார் 12,000 போர்களில் 8,500 பேர்கள் இதுவரையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதி இவ்வாறு 1,800 இளைஞர், யுவதிகள் தங்களது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டனர்.

'நான் கா.பொ.த உயர்தர பரீட்சையை முடித்து கணினி பாடநெறியொன்றைக் கற்பதற்கு எண்ணியிருந்த வேளையில் தான் புலிகள் என்னை பலவந்தமாகப் பிடித்துச் சென்றனர். அது 2007ஆம் ஆண்டாகும். அவர்கள் பிடித்துச் செல்லும் எல்லோருக்கும் வழங்குகின்ற ஆரம்பப் பயிற்சிகள் எனக்கும் வழங்கப்பட்டன. அது மிகவும் பயங்கரமானதொரு அனுபவமாகும்.

நான் எப்போதும் வீட்டுக்குச் செல்லும் எண்ணத்திலேயே இருந்தேன். கணினித்துறையைப் பயின்று அத்துறையில் ஒரு தொழிலைச் செய்ய வேண்டுமென்பதே எனது விரும்பமாகும். அரசாங்கப் படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வரும்போது படையினரிடம் சரணடையும் ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

புனர்வாழ்வு முகாமில் இருந்த காலப்பகுதியில் கணினி பாடநெறியொன்றைக் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது மட்டுமல்ல உளவளத்துணை தொடர்பான பாடநெறியொன்றைக் கற்பதற்கும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதற்கும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் எனது வீட்டுக்குச் செல்கிறேன்' என 20 வயதுடைய வவுனியாவைச் சேர்ந்த துசாரி ராமச்சந்திரன் என்ற யுவதி தெரிவித்தார்.

'எனது பிள்ளை இன்று இந்த நிலையில் இருப்பதை பார்க்கின்றபோது எனக்கு பெரும் மகிழ்ச்சியாய் உள்ளது' என துசாரியைப் போன்றே அழகான அவரது தாயார் எம்மிடம் தெரிவித்தார்.

அவரது முகத்தில் நிறைந்து காணப்பட்ட மகிழ்ச்சியை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

33 வயதுடைய ஸ்ரீதரன் எம்மிடம் இப்படித்தெரிவித்தார். 'நான் இரண்டு பிள்ளைகளின் தந்தை. எமது வீடு முல்லைத்தீவில் உள்ளது. நான் ஒரு சாரதியாகத் தொழில் செய்துவந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் தான் புலிகள் என்னைப் பிடித்துச் சென்றனர். அவர்களது ஆரம்பப் பயிற்சிகளுக்குப் பின்னர் நான் புலிகளது ஒரு லொரிச் சாரதியாக வேலை செய்ய வேண்டி ஏற்பட்டது. அது மிகவுமே கஷ்டமான நாட்களாகும். சரியாக உண்பதற்கோ குடிப்பதற்கோ இல்லாமல் இரவில் காடுகளில் விழித்திருக்க வேண்டியிருந்தது.

எனது இரண்டு பிள்ளைகளையும் நினைத்துப் பார்க்கும் போது எனக்கு மிகவுமே கவலையாக இருக்கும். அவர்கள் மிகவுமே சிறியவர்கள். எனது மகனுக்கு 6 வயது, மகளுக்கு 11 வயது.

என்றாலும் எனக்கு புலிகளுடன் இருப்பதைத்தவிர வேறு வழிகள் இருக்கவில்லை. அதிலிருந்து விடுபட்டு இன்று இவ்வாறு மீண்டும் வீட்டுக்குச் செல்லக் கிடைத்தமையையிட்டு நான் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். நான் எனது பிள்ளைகளை இனி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்றுதான் அப்போது எண்ணியிருந்தேன். ஆனால் இன்று எனக்குக் கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பம் ஆச்சரியமாகவே உள்ளது' என அவர் தெரிவித்தார்.

விஸ்வமடுவைச் சேர்ந்த 21 வயதுடைய மகேஸ்வரன், கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயதுடைய கரன், 27 வயதுடைய வேலுகோபால், மட்டக்களப்பைச் சேர்ந்த 28 வயதுடைய நல்லையா ஆகியோரும் இதேபோன்ற கதைகளையே எம்மிடம் தெரிவித்தனர்.

புலிகள் மகேஸ்வரனைப் பிடித்துச் செல்லும்போது அவர் 10ஆம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். ஒரு சிறுவர் போராளியாகவும் இளைஞராகவும் 2005 முதல் 2009 வரையில் அரசாங்கப்படைகளிடம் சரணடைகின்றவரையில் அவர் வாழ்;க்கையில் எதிர்நோக்கிய கஷ்டங்களையும் இன்னல்களையும் எம்மிடம் விபரித்தார்.

கரனை புலிகள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லும் போது அவருக்கு வயது 18. 'எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டுமே உள்ளார். எனது அம்மாவிடம் எனக்கு மீளச் செல்லக்கிடைத்தமை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது' என அவர் தெரிவித்தார்.

'நான் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து, உயர்தரத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் புரலிகள் என்னை பலவந்தமாக அழைத்துச் சென்றனர். எனது தம்பியையும் பிடித்துச் சென்றனர். எனது தம்பி யுத்தத்தில் இறந்து போனான். நான் ஒன்பது மாதங்கள் தான் அங்கிருந்தேன். எனது உயிர் எந்தவேளையிலும் பிரிந்து சென்றுவிடும் என்ற பயத்துடனேயே நான் இருந்தேன்.

நான் படிப்பதற்கே விரும்பினேன். யுத்தம் செய்வதற்கல்ல. கடைசியில் புலிகளிடமிருந்து விலகி படையினரிடம் சரணடையக் கிடைத்த சந்தர்ப்பத்தை நான் மகிழ்ச்சியாகவே கருதுகின்றேன். அதன் காரணமாகவே நான் இன்று உயிர் பிழைத்திருக்கிறேன். என்னைப்போன்றே எனது தம்பிக்கும் என்னுடன் இன்று வீடு செல்லக் கிடைத்திருக்குமானால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்' என 28 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மயூரன் தெரிவித்தார்.

கொடூர யுத்தத்தில் பலவந்தமாக தம்மை ஈடுபடுத்தியிருந்த பயங்கரவாத சக்திகளிடமிருந்து விடுதலை பெற்று வாழ்க்கையில் தங்களது எதிர்பார்ப்புகளை நோக்கி தடையேதுமின்றி செல்லக்கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் தொடர்பாக அவர்கள் அவ்வாறு மகிழ்ச்சியுடன் கருத்துத் தெரிவித்தனர்.

பயங்கரவாதத்தினால் அடக்கியாளப்பட்டிருந்த நிலைமைகளை எடுத்துக்கூறும் வகையில் சாந்திலிங்கம் கோகுலன் ஒரு சிறந்த பாடலைப்பாடினார். வாலிபத்தின் வளம்மிக்க பகுதிகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கக் கிடைக்காது போன இளைஞர்கள் அன்று சிவப்பு ரோஜா என்ற ஒரு நாட்டியத்தை அரங்கேற்றினர். வாழ்க்கையில் தாம் விரும்பியதைச் செய்யக் கிடைத்திருக்கும் சுதந்திரம் குறித்த மகிழ்ச்சி அவர்களது குரலிலும் செய்கைகளிலும் வெளிப்பட்டது.

அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட சுமார் 12,000 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அவர்களது விருப்பங்களுக்கேற்ப விவசாயம், இயந்திரவியல், தச்சுத் தொழில், கணினி போன்ற பல்வேறு கைத்தொழிற்துறைகளில் மட்டுமன்றி உளவளத்துணை பாடநெறியூடாகவும் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

புலிகளினால் தமது கல்வி வாய்ப்புக்களை இழந்த இந்த இளைஞர் யுவதிகளுக்கு விசேட கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை வழங்கும் அதேநேரம் க.பொ.த. (சா.த), க.பொ.த. (உ.த) பரீட்சைகளுக்குத் தோற்றும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டது. அந்தவகையில் 2010ஆம் ஆண்டில் சாதாரணதர பரீட்சையில் 175 பேர் தோற்றி அவர்களில் 38 பேர்கள் எல்லா பாடங்களிலும் சி;த்தியடைந்துள்ளனர். 2010 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 361 பேர்களில் 222 பேர்கள் அதில் சிததியடைந்துள்ளதுடன் கணிதப் பிரிவில் ஒருவரும் விஞ்ஞானப் பிரிவில் ஒருவரும் உட்பட கலை வர்த்தகத் துறைகளில் 15 பேர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பதும் குறி;ப்பிடத்தக்கது.

-சமன்மலி    (ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--