2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ஜெனிவா: அரசின் கழுத்தை நெரிக்கும் பாலச்சந்திரன்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22ஆவது அமர்வு ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இலங்கை விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன.

வரும் திங்கட்கிழமை - 25ஆம் திகதி - தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம், 22ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறப் போகிறது.

இந்தக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் என்பது ஓர் ஆண்டுக்கு முன்னரே தெரிந்த விடயம் தான். அதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஓர் ஆண்டு கால அவகாசம் கொடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதே, இம்முறை நெருக்கடி அதிகமாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால், அப்போது எதிர்பார்க்கப்பட்டதை விட, பன்மடங்கு அதிகமான அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் சுமந்து கொள்ளும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த ஓர் ஆண்டு இடைவெளிக்குள் இலங்கை அரசாங்கம், நிறைவேற்றத் தவறிய பொறுப்புகளும் அதன் நடவடிக்கைகளும் தான்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறை காட்டவேயில்லை என்ற சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளை உறுதி செய்வது போன்றே, அண்மையில் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் வெளியிட்ட கருத்து அமைந்திருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் 35 வீதமான பரிந்துரைகள் மட்டும் தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று அவர், அந்தச் சந்திப்பில் ஒப்புக்கொண்டிருந்தார். இது இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை நியாயப்படுத்துவதற்கு வாய்ப்பாகியது.

அதுமட்டுமன்றி, பொறுப்புக்கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தமது பணியகம் அளிக்க முன்வந்த ஆலோசனை மற்றும் உதவிகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளவில்லை என்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஜெனிவா கூட்டத்தொடருக்கு கடந்தவாரம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நிறைவேற்றவில்லை, அதற்கு உதவி அளிக்க ஐ.நா முன்வந்தபோது அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற நிலை – மிகப்பெரிய சிக்கலை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி விட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இலங்கை அரசாங்கம் அலட்சியம் காட்டுகிறது, ஐ.நாவின் தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்கிறது என்ற சர்வதேச கணிப்பு இதன் மூலம் உருவாகிவிட்டது.

இதற்கிடையில், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அதற்காக கையாளப்பட்ட வழிமுறைகள் என்பன, இலங்கை அரசாங்கத்தினால் நீதித்துறை சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது என்று வெளியுலகம் தீர்மானிக்க காரணமாகி விட்டது.

அதுதவிர, திருகோணமலையில் சுதந்திர தினத்தன்று, அதிகாரப்பகிர்வை நிராகரிக்கும் வகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து, இந்த அரசாங்கம், நிரந்தர அமைதிக்கோ, நல்லிணக்கத்துக்கோ வழிசெய்யும் அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயாரில்லை என்றும் கருத வைத்துவிட்டது.

இப்படியே, ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறிய அரசாங்கத் தரப்பின் நடவடிக்கைகள், மற்றும் கருத்துகள், ஜெனிவா மீதான இறுக்கத்தை அதிகப்படுத்திவிட்டன.

இத்தகைய பின்னணியில், இப்போது புதிய பூகம்பமாக வெடித்திருப்பது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான கடைசி மகன் பாலச்சந்திரன் பற்றிய படங்கள்.

சனல் 4 தொலைக்காட்சியில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்‘ என்ற தலைப்பில், இதுவரை இரண்டு ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட கல்லும் மக்கரே என்ற இயக்குநர், மூன்றாவதாக, ‘சூடு தவிர்ப்பு வலயம்‘ என்ற பெயரில் மற்றொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் திரையிடவுள்ள இந்த ஆவணப்படத்தில், இலங்கை அரச படைகளின் போர்க்குற்றங்கள், அதற்கான புதிய சாட்சியங்களை உள்ளடக்கியுள்ளதாக கல்லும் மக்கரே தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாறு கூறியதுடன் நின்று விடாமல், இந்த ஆவணப்படம் குறித்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், புதிதாக மூன்று ஒளிப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அவை மூன்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பற்றியவை.

லண்டலில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளிதழ், இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘தி இந்து‘ ஆகியவற்றில் ஒரே நேரத்தில், இந்த ஒளிப்படங்களையும், அது பற்றிய கட்டுரைகளையும் கல்லும் மக்கரே வெளியிட்டது உலகெங்கும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அரச படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு, தடுத்து வைத்திருந்த பின்னரே கொல்லப்பட்டதை இந்த ஆவணப்படம் மூலம் உறுதிப்படுத்த சனல் 4 தொலைக்காட்சியும், அதன் குழுவினரும் தயாராகியுள்ளனர்.

இந்த ஒளிப்படங்கள் இணையங்களிலும், அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

தமிழ்நாட்டிலும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் மட்டுமன்றி இங்கும், இது உணர்வுபூர்வமான பிரச்சினையைக் கிளப்பி விட்டுள்ளது.

என்னதான், இலங்கை அரசாங்கமும் இராணுவத் தரப்பும் இதனை பொய் என்றும் புனைவு என்றும் மறுத்தாலும், அவை எதுவும் எடுபடப்போவதில்லை என்பது வெளிப்படை. ஏனென்றால், இதுவரையில் அரசாங்கமோ, படைத்தரப்போ, போரில் எந்த மீறல்களும் இடம்பெறவில்லை என்று கூறிவரும் நிலையில், இத்தகைய சான்றுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது.

போரின்போது, பொதுமக்கள் மீது இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்களை நடத்தவில்லை என்று, அதுகுறித்த விசாரிக்க நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் கடந்தவாரம் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தது.

இத்தகைய நிலையில், பாலச்சந்திரன் கொலை பற்றிய எந்தக் குற்றச்சாட்டையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.

பாலச்சந்திரன், இருதரப்பு மோதலுக்குள் அகப்பட்டே இறந்து போனதாக அரசாங்கம் கூறி வருகிற போதிலும், அது எப்போது, எங்கே நிகழ்ந்தது என்பதை அரசாங்கம் கூறவில்லை. அதுமட்டுமன்றி, அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ, அதற்கு என்ன ஆனது என்றோ கூறவில்லை.

இவ்வாறு பாலச்சந்திரன் பற்றிய பல வினாக்களுக்கு அரசாங்கம் விடையளிக்காத - விடையளிக்க முடியாத நிலையில், தான் இவை பொய்கள் என்றும் புனைவுகள் என்றும் ஒரே பதிலுடன் முடித்துள்ளது.

பாலச்சந்திரனின் இந்த ஒளிப்படங்கள் ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறும் வாதம் உண்மையாகவே இருந்தாலும், இது பொய் என்பதை நிரூபிக்க அரசாங்கம் தயாரா என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது.

விடுதலைப் புலிகள் சிறார்களைப் படையில் சேர்த்துக் கொண்டதை சாதகமாகப் பயன்படுத்தி, சர்வதேச சமூகத்தை தன்பக்கம் திருப்பிக் கொண்ட அரசாங்கம் இப்போது, ஆயுதம் தரிக்காத 12 வயதுச் சிறுவனின் மரணத்துக்குப் பதில் கூறவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.

அரசாங்கம் வெளியிடும் மறுப்பு அறிக்கைகளால் பாலச்சந்திரன் விவகாரம் அடங்கி விடும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால், அது பூகம்பமாக வெடித்துள்ள காலம் ஜெனிவா கூட்டத்தொடரை அண்டியதாக இருப்பதாலும், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரிதாக கவனத்தை ஈர்த்துள்ளதாலும், இந்த நெருக்கடியின் தாக்கத்தில் இருந்து இலங்கை அரசாங்கத்தில் இலகுவாக விடுபட முடியாது.

ஜெனிவா அமர்வுகள் தொடங்குவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க புதிய புதிய தலைவலிகளும், பிரச்சினைகளும் இலங்கை அரசாங்கத்தின் கழுத்தை இறுக்கத் தொடங்கி விட்டன. ஜெனிவா இராஜதந்திரப் போருக்கு, அரசாங்கம் கடந்த ஓர் ஆண்டாகவே தயார்படுத்தல்களை மேற்கொண்டு வந்தாலும், அதில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை அதற்கு அற்றுப் போயுள்ளதாகவே தெரிகிறது.

கடந்த ஆண்டு ஜெனிவா தீர்மானத்தைத் தோற்கடிக்க பெருமெடுப்பிலான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்ட அரசாங்கம், இம்முறை அந்தளவுக்கு ஈடுபாடு காட்டுவதாகத் தெரியவில்லை. அதுவும், வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை ஜெனிவாவுக்கு அனுப்பவே தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

இது ஜெனிவா களத்தை அரசாங்கம் அலட்சியமாக எதிர்கொள்ளும் உத்தியாகப் பார்க்க முடியவில்லை. நம்பிக்கையீனத்துடன் அணுகுவதாகவே தென்படுகிறது.

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர், இலங்கை அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புகளைக் கொண்டுள்ள நிலையில், கொமன்வெல்த் கூட்டத்தொடரையேனும் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் தான் அரசாங்கம் இப்போது கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--