2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி மஹிந்தவுக்கு கைகொடுக்குமா ஈழம்?

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

புலம்பெயர் தமிழர்கள் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசிப்பதற்கு தாம் தயாரென்று கிளிநொச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டுமென்ற கருத்து தென்னிலங்கையில் வலுப்பெற்றுள்ள சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தக்கருத்து வெளிவந்துள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதை மையப்படுத்தி, பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனை சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகள் மத்தியில் வலுப்பெறத்தொடங்கியிருந்தது.

கோட்டே ஸ்ரீநாக விகாரையின் விகாராதிபதி வண. மாதுளுவாவே சோபித தேரர்தான், இந்த முயற்சியை முன்னெடுக்கத் தொடங்கியவர். அவரை அடுத்து  ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் இலக்குடன் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பில்  பேசத் தொடங்கினர்.

எப்படியாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியிலிருந்து இறக்கவேண்டுமென்ற நோக்கிலிருந்த சிலரும் எப்படியாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்துவிட வேண்டுமென்ற நோக்கிலிருந்த இன்னும் சிலரும் இந்தப் புள்ளியில் ஒன்றிணைந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதுடன், புதிய ஜனாதிபதியைக்கொண்டே 06 மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கு அரசாங்கத்துக்குள் இருக்கும் அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் கூட இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால், ஊவா மாகாணசபைத் தேர்தலில், ஐ.தே.க. வுக்கு கிடைத்த கணிசமான வாக்குகளும் அந்தக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு புதிய தெம்பை கொடுத்திருக்கின்றன. இதனால், தானே ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் என்று அவர் கங்கணம் கட்டத் தொடங்கியுள்ளார்.

ஐ.தே.க. வின் முக்கிய பிரமுகர்கள் பலரும் ரணில் விக்கிரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பிலும் பேசத் தொடங்கியுள்ளனர். அவரையே பொதுவேட்பாளராக நிறுத்தலாமென்றும் யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால், முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக பொதுவேட்பாளராக நிறுத்தப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்ட மாதுளுவாவே சோபித தேரர், முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் தொடர்பில்  இப்போது யாரும் பேசுவதைக் காணமுடியவில்லை.

ஆக, ஐ.தே.க. வுக்கு வெளியே இருந்து பொதுவேட்பாளரை தெரிவுசெய்யும் விவகாரம் இப்போது மெல்ல வலுவிழக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல் என்ற பிரச்சினை இன்னமும் தீரவில்லை.

தெற்கிலுள்ள மக்களிடையே, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவேண்டுமென்ற கருத்து பெரும்பாலான இடதுசாரிக் கட்சிகளால் மட்டுமன்றி, ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்ன தேரர் உள்ளிட்டோராலும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, நாட்டில் ஜனநாயகத்துக்கு முக்கியமானதொரு சவாலாக மாறியுள்ளதான கருத்து தமிழ் மக்களிடத்தில் மட்டுமன்றி, சிங்கள மக்களிடத்திலும் உள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்ற வாக்குறுதியை முன்னிறுத்தி பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்திருந்தபோது, அரசாங்கம் சற்று அதிகமாகவே கலக்கமடைந்திருந்தது.

அப்போது, தாமும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் ஆலோசிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அதுமட்டுமன்றி ஆளும் கட்சிக்குள் கூட, இது பற்றி தீவிரமான ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும் கூட செய்திகள் வெளிவந்தன.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் எதனை முன்னிறுத்தி போட்டியில் நிறுத்தப்படுகிறாரோ, அந்த அடிப்படை அம்சத்தை ஆட்டம் காணவைப்பதற்காகவே ஆளும் கட்சி அத்தகைய ஆலோசனைகளில் ஈடுபட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதனால்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இப்போது எதிர்க்கட்சியான ஐ.தே.க., நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதை அடிப்படையாகக்கொண்டு செயற்படவில்லை.

ஒன்றுபட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்துவோம் என்ற தொனியிலேயே ஐ.தே.க. வின் பிரசாரங்களும் கருத்துக்களும் வெளியாகின்றன.

எனினும், சிங்கள வாக்காளர்களிடையே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டுமென்ற கருத்து வலுவாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இத்தகைய கட்டத்திலேயே  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சியில் வைத்து, புலம்பெயர் தமிழர்களும் இங்குள்ள சிலரும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊக்கமளிப்பதைக் கைவிட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் தாம் ஆலோசிக்க முடியுமென்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதற்காக இந்த விடயத்தை கிளிநொச்சியில்  கூறவேண்டும்? இதே கருத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெற்கிலுள்ள எங்காவது ஒரு மேடையில்  கூறியிருந்தால், இந்தளவுக்கு முக்கியத்துவம் இருந்திருக்காது. இந்தளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களால் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்காது. கிளிநொச்சியில் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாலேயே, இதன் முக்கியத்துவம் அதிகமாகியுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும்  தனி ஈழக் கோரிக்கைக்கும் முடிச்சுப்போட்டுள்ளதன் மூலம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவோ - அதன் அதிகாரத் தித்திப்பிலிருந்து விடுபடவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என்பதை தெளிவாக உணரமுடிகிறது.

ஏனென்றால், தனி ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கும் எந்தவிதமான தொடர்புமே கிடையாது. இந்த இரண்டையும் ஒன்றாக போட்டுக் குழப்பி சிங்கள மக்களின் ஆதரவையும் அனுதாபத்தையும் அவர் தேடிக்கொள்ள முனைந்திருக்கிறார்.

ஈழக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதற்காகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்டது போன்ற கருத்தை உருவாக்க முனைந்துள்ளது அவரது நிபந்தனை.

ஈழக் கோரிக்கைக்குப் பின்னதாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இலங்கையில் உருவாக்கப்பட்டது. ஆனால், அது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமது ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக உருவாக்கிக்கொண்டதே தவிர, ஈழக் கோரிக்கையை இல்லாதொழிப்பதற்காக அல்ல.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஈழக் கோரிக்கையை இல்லாதொழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதென்று வைத்துக்கொண்டால் கூட, அந்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். ஏனென்றால், இன்றுவரையும் ஈழக் கோரிக்கை கைவிடப்படவோ, இல்லாதொழிக்கப்படவோ இல்லை.

அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, அரசாங்கத்துக்கு கைகொடுத்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஏற்கெனவே, பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்கள் இதனை வெளிப்படையாகவே கூறியும் உள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவும் முப்படைத்தளபதிகளும் தமது விருப்பப்படி போரை நடத்துவதற்கும் அதற்குத் தேவையான உதவிகள், உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி நிறையவே கைகொடுத்திருந்தது. அது போரில் வெற்றியைப் பெறுவதற்கு மட்டுமே கைகொடுத்தது.

போரில் வெற்றி பெற்றதால் மட்டுமே ஈழக் கோரிக்கை கைவிடப்பட்டுவிட்டதாகவோ, அது செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டதாகவோ அர்த்தமில்லை.

இலங்கையிலுள்ள இறுக்கமான சட்ட அமைப்புகள், ஈழக் கோரிக்கையை வெளிப்படையாக முன்னெடுத்துச் செல்வதற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், யாரும் அதனை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. புலம்பெயர் தமிழர்கள் அதனைக் கைவிடும் நிலையில் இல்லை.
இப்போது புலம்பெயர் தமிழர்கள் ஈழக் கோரிக்கையை கைவிட்டால்தான், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தொடர்பில்  யோசிக்கத் தயாரென்று ஜனாதிபதி கூறியிருப்பது, ஈழக் கோரிக்கையை கைவிடச் செய்வதற்காக என்று எவரேனும் கருதினால் அது முட்டாள்தனம்.

ஏனென்றால், ஈழக் கோரிக்கையை கைவிடுமளவுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியொன்றும் தமிழர்களுக்கு, அதுவும் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கியமான பிரச்சினை அல்ல.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தமிழர்களுக்கு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதேயளவுக்கு சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏனைய இனத்தவர்களுக்கும் கூடப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில்தான், ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்குமிடையில் முடிச்சுப் போட்டிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இது ஈழக் கோரிக்கையை புலம்பெயர் தமிழர்கள் கைவிடச் செய்வதற்காக முன்வைக்கப்பட்ட நிபந்தனையல்ல.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பேன் என்ற தமது முன்னைய வாக்குறுதிகளை மீறி, மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை நியாயப்படுத்திக்கொள்ளும் முயற்சியாகும்.

தமிழர்களை பொறுத்தவரையில், ஈழக் கோரிக்கையை முன்வைக்க காரணமாக இருந்தது, ஆட்சியிலிருந்த அரசாங்கங்களேயாகும். தமிழர்கள் காலம்காலமாக ஏமாற்றப்பட்டதன் விளைவாகவே, ஈழக் கோரிக்கை வலுப்பெற்றது. ஏனென்றால், சுதந்திரத்தின்போதோ, அதற்குப் பின்னரோ தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லை. ஆனால், அரசாங்கங்களின் போக்கினாலும் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதாலும்தான், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவேண்டிய கட்டாய நிலை உருவாக்கப்பட்டது. இப்போதும் கூட, தனிநாட்டுக் கோரிக்கை உள்நாட்டில் வலுவிழந்துவிட்டதாகக் கொள்ளமுடியாது.

ஒரே நாட்டுக்குள் கௌரவமான அரசியல் தீர்வொன்றை காணத் தயாரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறினாலும், அதற்கும் கூட அரசாங்கம் உடன்படத் தயாராக இல்லை.

இதுபோன்ற நிலையில், இயல்பாகவே தனிநாட்டுக் கோரிக்கை வலுப்பெற்றுவிடும். எங்கெங்கு தமது நியாயமான கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படவில்லையோ, அங்கெல்லாம் அதற்கு எதிர்மாறான விளைவுகளே தோற்றம் பெறும்.

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள், அபிலாஷைகள் மறுக்கப்பட்டு, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாத நிலை தொடரும்வரை, ஈழக் கோரிக்கையை எவராலுமே இல்லாதொழிக்கமுடியாது.

அதுவரை அது எங்கோ ஒரு  மூலையில் தெரிந்தோ, தெரியாமலோ உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். இது அரசாங்கத்துக்குத் தெரியாத ஓர் இரகசியமல்ல.

போர் முடிந்தவுடன் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அளித்திருந்த பேட்டியொன்றில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன், அவரது ஈழக் கோரிக்கையும் புதைக்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்தார்.

ஆனால், போர் முடிந்து 05 ஆண்டுகளுக்குப் பின்னரும் அரசாங்கம் அதே ஈழக் கோரிக்கையை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறது.
ஈழக் கோரிக்கையை கைவிட்டால்தான், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பேன் என்று சிறுபிள்ளைத்தனமான நிபந்தனைகளை முன்வைக்கிறது அரசாங்கம்.

ஈழக் கோரிக்கையை செயலிழக்கச் செய்வதற்கு அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு என்ற மிக வலுவான ஆயுதங்கள் இருக்கின்றன. அரசாங்கம் அவற்றைப் பயன்படுத்தினால், ஈழக் கோரிக்கை தானாகவே வலுவிழந்துவிடும். அதற்காக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை பணயம் வைக்கவேண்டிய தேவையெல்லாம் கிடையாது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்த இரண்டையுமே கைவிடத் தயாராக இல்லை.

தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து அரசியல் தீர்வு காணவும் தயாராக இல்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியைக் கைவிடவும் தயாராக இல்லை.

எனவேதான், சிங்கள மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவிக்கு ஈழக் கோரிக்கையை பணயம் வைத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

சிங்கள மக்களை இதுபோன்ற பூச்சாண்டிகளினூடாக இன்னமும் தம்வசம் வைத்திருக்கலாமென்று அரசாங்கம் தவறாக எடைபோடுகிறது. அதனால்தான்,  இப்படியொரு நிபந்தனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைக்கத் துணிந்திருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .