2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆட்கடத்தலும் இந்தியாவுக்கு வந்த பெருஞ்சிக்கலும்

என்.கே. அஷோக்பரன்   / 2018 மார்ச் 19 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 136)

சர்வகட்சி மாநாட்டில் மீண்டும் இரண்டு குழுக்கள்  

சர்வகட்சி மாநாடு, மீண்டும் 1984 மே ஒன்பதாம் திகதி கூடியபோது, அதில் ஜனாதிபதி ஜே.ஆர், புதிதாக அமைத்த ‘அதிகாரப்பகிர்வுக் குழு’, ‘குறைகள் ஆராயும் குழு’ என்பவற்றில் பங்குபற்ற, தமிழர் தரப்பின் பிரதிநிதிகளான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் மறுத்துவிட்டனர்.  

 மாறாக, குறித்த குழுக்களின் அறிக்கைகளை, சர்வகட்சி மாநாட்டின் பிரதான அவை மீண்டும் கூடும் போது, தாம் ஆராய்வதாக அறிவித்திருந்தனர். அமிர்தலிங்கமும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் எதிர்பார்த்தது போலவே, ஜே.ஆரின் திட்டம் முன்நகர்ந்து கொண்டிருந்தது.  

 புதிய குழுக்களை அமைத்து, ஜே.ஆர் ஆராய்ந்து கொண்டிருந்தமை காலங்கடத்தவே என்று தமிழர் தரப்பு உணர்ந்திருக்கலாம். அதற்குத் துணைபோகாதிருக்கவே, அவர்கள் குறித்த குழுக்களில் பங்குபற்றுவதைத் தவிர்த்திருக்கலாம்.  

 மேலும், இந்தக் குழுக்களில் பங்குபற்றுவதனால், எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்ற உணர்வு கூட, தமிழர் தரப்பைப் பின்னடையச் செய்திருக்கலாம்.   

ஆனால் ஜே.ஆர், “இந்த இரண்டு குழுக்கள் அமைக்கப்படுவதானது, மிக முக்கியமானது. வடக்கிலுள்ள பல இளைஞர்கள், தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி பற்றி ஆராயும் குழுவை ஆவலோடு எதிர்பார்த்துள்ளார்கள். அதிகாரப் பகிர்வு என்பது, அரசியல் கட்சிகளிலுள்ள சிலருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு மட்டுமானதுதான்.  ஆனால், தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்பு என்பவைதான், எதிர்கால சந்ததியின் பெரும்பகுதிக்கு உதவிசெய்யும்” என்று ஜே.ஆர் பேசினார். 

தமிழர் அரசியல் பொதுவௌியில், பொதுப்பயன்பாட்டிலுள்ள ‘உரிமை’, ‘சலுகை’ ஆகிய இரண்டில், தமிழர் தரப்பு, அரசியல் உரிமைகளைவிடவும் அரசியல் சலுகைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதுதான் ஜே.ஆர் குறிப்பிட்டதன் இன்னோர் அர்த்தம்.   

உரிமையா, சலுகையா?

பொருளாதார முன்னேற்றம் எந்தவொரு சமூகத்துக்கும் அத்தியாவசியமானது. கல்வி, வேலைவாய்ப்பு என்பவை பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையானவை. இவற்றை மறுப்பதற்கில்லை.   
அதிலும் குறிப்பாக, வடக்கு, கிழக்கு தமிழர்கள் கொலனித்துவ  காலம் முதல், உயர்கல்வி மற்றும் உத்தியோகத் தொழிற்றுறையில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள், அத்தோடு விவசாய உற்பத்தி, முயற்சியாண்மையிலும் அவர்களது பங்கு கணிசமாக இருந்தது. தனிச்சிங்களச் சட்டத்தின் அறிமுகம் மற்றும் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல், சுதந்திரகாலம் முதல் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், சமச்சீரற்ற அபிவிருத்தித் திட்டங்கள் என்பன தமிழர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையிலேயே சிதைத்தது.   

ஆகவே, தமிழர்களின் அரசியல் பாதையானது, ஆட்சியின் விளைவுகளை, அதாவது சலுகைகளை வேண்டியதாக அமையாது, அந்த விளைவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வேண்டியதாக அமைந்தது.  

 இங்கு, தமிழர் தரப்பு, சுயநிர்ணய உரிமையின்பாலான சுயாட்சியை வேண்டியது, வெறுமனே தமிழ்க் கட்சிகள் தமிழர் பிரதேசங்களை ஆளுவதற்காக அல்ல; மாறாக, மற்றவர் ஆட்சியின் கீழ், தமிழ் மக்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ள, மற்றவரின் கருணையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலையை இல்லாது செய்யத்தான். இதுதான், தமிழர் தரப்பின் அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைக்கான அடிப்படை.   

அது, ஜே.ஆர் சூழ்ச்சிகரமாகக் குறிப்பிட்டதுபோல, வேலைவாய்ப்பு, கல்விவாய்ப்பு என்பவற்றைப் பின்னிலைப்படுத்தும் கோரிக்கையல்ல; தமிழருக்கான வேலைவாய்ப்பு, கல்விவாய்ப்பு என்பவற்றை தமிழரே தீர்மானிக்க வேண்டும் என்பதேயாகும்.   

பொறுமை காத்த அமீர்  

இந்த இரண்டு குழுக்களும் மே மாதத்தில் ஐந்து முறை சந்தித்து, கலந்துரையாடல்களை முன்னெடுத்தன. இந்தக் கலந்துரையாடல்களில், தமிழர் தரப்பு கலந்து கொண்டிருக்கவில்லை.   

இந்த மே மாத இடைவௌியை, ஜே.ஆர் தனது கிழக்கை நோக்கிய சர்வதேச விஜயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் காங்கிரஸும் அடுத்த நகர்வு என்னவென்று தீர்மானிக்க முடியாத சூழலில் சிக்கியிருந்தன.  

 “ஜே.ஆரை நம்ப வேண்டாம் என்றும், இது வெறும் காலங்கடத்தும், சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் என்று சொன்னோம்; நீங்கள் கேட்கவில்லை” என்பது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் செய்தியாக இருந்தது.   

மறுபுறத்தில், அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் முழுமையாக நம்பியிருந்த இந்தியா, அவர்களைத் தொடர்ந்தும் பொறுமை காக்குமாறு வேண்டிக் கொண்டது. பொறுமை காப்பதைத் தவிர, அமிர்தலிங்கத்துக்கும் வேறு வழியிருக்கவில்லை என்பதுதான் உண்மை.   

இந்தியாவை அதிரச் செய்த ஒரு கடத்தல் 

இந்தச் சந்தர்ப்பத்தில், அன்று பலமாக இயங்கிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான, மக்கள் விடுதலை இராணுவம் எனப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவப் பிரிவு, அதன் தாய்வீடு என்று கருதக்கூடிய இந்தியாவுக்கே, அதிர்ச்சிதரும் ஒரு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.   

ஸ்டான்லி அலன் மற்றும் அவரது மனைவி மேரி அலன் ஆகிய இரண்டு அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர்.   

அமெரிக்க உதவி நிறுவனமான யு.எஸ்.எய்ட், பருத்தித்துறையில் முன்னெடுத்த நீர்த்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அலனையும் அவரது மனைவியையும் 1984 மே 10ஆம் திகதி மக்கள் விடுதலை இராணுவத்தினர், அவர்கள் குடியிருந்த வீட்டுக்குள் புகுந்து கடத்திச் சென்றனர்.   

அவர்கள் கடத்திச் செல்லப்பட்ட கார், காங்கேசன்துறைக் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, அவர்கள் இந்தியாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.  

 மறுநாள், மக்கள் விடுதலை இராணுவம், கடத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கமானது, தமிழக அரசாங்கத்தினூடாகத் தமது இயக்கத்தவரிடம் தரப்படவேண்டும் என்பதோடு, சிறையில் இருக்கும் தமது இயக்கத்தினர் 20 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இது மூன்று நாட்களுக்குள் நடக்காவிட்டால், கடத்தப்பட்ட இருவரும் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்றும், இதில் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு அறியத்தந்தது.

இது, இந்தியாவுக்கு எப்படிச் சிக்கலைத் தந்தது என்றால், இது நடந்த போது, அமெரிக்க உப - ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (சீனியர்), இந்தியாவுக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கப்பம் கேட்ட கடிதத்தில், 50 மில்லியன் பெறுமதியான தங்கம், தமிழக அரசாங்கத்தின் ஊடாக, தமது இயக்கத்தவரிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருந்தார்.   

மேலும், ஈ.பி.ஆர்.எஸ்.எப் இயக்கத்துக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு, அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர்கள் தமிழகத்தில் இருந்தனர். ஆகவே, இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு இருந்தது.   

குறிப்பாக, எம்.ஜி.ஆருக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சியைத் தந்திருந்தது. இந்தச் சம்பவம் பற்றி, எம்.ஜி.ஆர் பற்றிய தனது நூலில், எம்.ஜி.ஆரின் கண்ணும், காதும் என்றறியப்பட்ட அன்றைய தமிழக பொலிஸின் இயக்குநர் நாயகமாக (டி.ஜி.பி) இருந்த கே.மோகன்தாஸ் விரிவாக எழுதியிருக்கிறார்.   

இதனைத் தொடர்ந்து, மெற்றாஸில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களான பத்மநாபா, வரதராஜ பெருமாள் மற்றும் மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதானி டக்ளஸ் ஆகியோர், விசாரணைக்கு வசதியான ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கும் மோகன்தாஸ், அவர்கள் முதலில், இதுபற்றித் தமக்கேதும் தெரியாதென்று தெரிவித்ததாகவும், தொடர்ந்த விசாரணையில், இதனைச் செய்தவர்கள் தமது இயக்கத்தவராக இருப்பினும், இது தமக்குத் தெரியாமல், குறித்தவர்களின் சுயமுனைப்பில் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்ததாகவும், எழுதியுள்ள மோகன்தாஸ், நேரம் மிகக் குறைவாக இருந்த காரணத்தால், தான் அதிரடியாக அவர் இருந்த அறைக்குள் சென்று, “அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால், இங்கு, இந்த அறையிலேயே நீங்களும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்; அவர்கள் விடுதலை செய்யப்பட்டால், நீங்களும் விடுதலை செய்யப்படுவீர்கள்” என்று சொன்னதாகவும், அது வேலை செய்ததன்படி, மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதானி டக்ளஸ், உரிய செய்தியைத் தனது சகாக்களிடம் சேர்ப்பித்து, அலன் தம்பதியினரை விடுவித்ததாகவும் பதிவு செய்கிறார்.   

இதை நாம் கருத்திலெடுக்கும் போது, இந்த விடயங்கள், இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட ஒருவருடைய தனிப்பட்ட கருத்துகள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இருவரும் பலத்த பதற்றத்திலிருந்தனர்.  

 “தமிழக மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் இழக்கும் நிலையை, தமிழ் ஆயுதக்குழுவினர் அடைந்து விட்டார்களோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று, எம்.ஜி.ஆர் குறிப்பிடும் அளவுக்கு இது சிக்கலான ஒரு நிலையைத் தோற்றுவித்திருந்தது.  

 இந்திரா காந்தி கூட, உளவுத்துறையினூடாக உருக்கமான கோரிக்கையை வைக்க வேண்டியளவுக்கு பாரதூரமான ஒன்றாக இது மாறியிருந்தது. 

மே 14ஆம் திகதி, யாழ், ஆயர் முன்னிலையில் குறித்த தம்பதியினர் விடுதலை செய்யப்பட்டனர். “அவர்கள் அமெரிக்க உளவாளிகள், அதனை அம்பலப்படுத்தவே, அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்று கடத்தியவர்கள் தரப்பில், மே 17ஆம் திகதியன்று சொல்லப்பட்டது.   

“அவர்கள் நீர்த்திட்டத்துக்காக வரவில்லை; மாறாக, யாழ்ப்பாணத்தைப்  படம்பிடித்துக் கொண்டிருந்த அமெரிக்க உளவாளிகள் அவர்கள். ஜே.ஆரின் அமெரிக்க விஜயம், விரைவில் நடக்கவிருந்த நிலையில்தான், இதை அம்பலப்படுத்த நாம் இதைச் செய்தோம்.  பிரதமர் இந்திரா காந்தியின் கோரிக்கையின் படிதான், அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஏனென்றால், துன்பத்துக்குள் ஆழ்ந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, இந்திரா காந்தி ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று ஈ.பி.ஆர்.எல்.எப் அறிவித்திருந்தது.   

கடத்தல் தொடர்பிலான இலங்கையின் அணுகுமுறை  

இந்த விவகாரம் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எதுவித பதற்றமும் அற்றதாக இருந்தது. 

முழுப்பதற்றமும் இந்தியாவின் உடையதாக மாறியிருந்தது. கடத்தல் பற்றி முதலில் ஊடகங்களுக்கு அறிவித்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, “கடத்தல்காரர்களின் கப்பக்கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில் அமைதிதான்; பயங்கரவாதத்துக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.   

அத்தோடு, கடத்தப்பட்டவர்கள் கடல்வழியாகத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தையும் வௌிப்படுத்தியிருந்தார். மறுபுறத்தில், வௌிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட், அமெரிக்க தூதுவரைச் சந்தித்து, “அவ்விருவரைப் பாதுகாக்க, இலங்கை அரசாங்கம் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யும்” என்ற உறுதிமொழியையும் வழங்கியிருந்தார்.   

அமெரிக்காவோடு நெருக்கமான உறவை ஏற்படுத்தி இருந்த இலங்கை அரசாங்கம், இந்தச் சம்பவத்தில் மெத்தனப் போக்காக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்தியாவை அம்பலப்படுத்த, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களுக்கு இந்தியா பயிற்சி அளிப்பதை, தமிழகத்தில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் இயங்குவதை அம்பலப்படுத்த, இதை ஒரு சிறந்த வாய்ப்பாக, இலங்கை அரசாங்கம் பார்த்திருக்கக்கூடும்.   

அலன் தம்பதியினர் விடுதலையான பின்பு, கருத்துத்தெரிவித்த அமைச்சர் அத்துலத்முதலி, “பயங்கரவாதச் சக்திகள், தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகின்றன. இது பற்றி உங்களுக்கு முன்பு ஐயமிருந்திருந்தால், இப்போது அது தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார். ஏலவே, இந்திய விரோதப் போக்காளராக, வௌிப்படையாக அறியப்பட்ட பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவுக்கு, இந்தச் சம்பவம் இன்னும் சாதகமாகப் போனது. 

இலங்கையில் பிரிவினையைத் தூண்ட, இந்தியா, தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்குகிறது; தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கத் தொடங்கினார். மறுபுறத்தில், சர்வதேச நாடுகளிடம், இராணுவ உதவிகளைப் பெற்று, இராணுவத்தைப் பலப்படுத்தும் கைங்கரியத்தை ஜே.ஆர் செவ்வனே முன்னெடுத்தார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X