2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஈழத் தமிழர்களை முன்வைத்து இந்திய குடியுரிமைச் சட்ட விவாதங்கள்

எம். காசிநாதன்   / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசியல் நிர்ணய சபையில், பேசிய டொக்டர் அம்பேத்கர், “வரைவு அரசமைப்புப் பிரிவுகளில், குடியுரிமை வழங்கும் இந்தப் பிரிவு போல், அரசமைப்பு வரைவுக் குழுவுக்குத் (Drafting Committee) தலைவலி கொடுத்த வேறு எந்த பிரிவும் இல்லை” என்று, குடியுரிமை பற்றிய அரசமைப்புப் பிரிவு ஐந்தின் மீதான விவாதத்தில் 10.8.1949 அன்று கூறினார்.   

அவருடையை வார்த்தை, இன்றைக்கு 70 ஆண்டுகள் கழித்து, உண்மையாகும் என்பது, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உருவாகியுள்ள தலைவலியில் பிரதிபலிக்கிறது.   

மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க போன்ற முக்கிய கட்சிகள் ஆதரித்தன் விளைவாக, சட்டமூலம் வெற்றி பெற்றது. 12.12.2019 அன்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அரசிதழிலும் இந்தச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.  

இப்போது, புதிய குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 அமுலுக்கு வந்து விட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில், மதத் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியா திரும்பிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின், பார்சி, கிறிஸ்துவர்கள் இதுவரை, சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்பட்டு, குடியுரிமை இன்றி, வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.   

அந்த இன்னலுக்கு, இந்தக் குடியுரிமை சட்டத் திருத்தம் முடிவுரை எழுதியிருக்கிறது. 31.12.2014 வரை, இது மாதிரி இந்தியாவுக்குள் நுழைந்துள்ளவர்கள் இனிச் சட்டபூர்வ குடியுரிமை பெற்றவர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள், இந்தச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும். அவர்கள் மீது, இது தொடர்பாக இருந்த வழக்குகளும் தானாகவே இரத்தானதாகக் கருதப்படும். 12 வருடங்கள் இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும் என்ற விதி, ஐந்து வருடங்களாகத்  தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் உட்பட, சுமார் 19 இலட்சம் பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தச் சட்டத் திருத்தம், சில மாநிலங்களுக்குப் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களுக்குப் பொருந்தாது என்றும், ஐ.பி.எல் (Inner Line Permit) பகுதிகளுக்குப் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது, இந்தச் சட்டம் பற்றி அஞ்சியவர்களுக்கு ஆறுதல் என்றாலும், எந்த நேரத்திலும் இந்தச் சட்டம் தங்களுக்கும் அமுல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாகவே, இந்தப் போராட்டங்கள் தலை தூக்கியுள்ளன. 

பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் “உங்களுக்குப் பாதகம் இல்லை” என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள். ஆனாலும், அஸ்ஸாமில் போராட்டம், கலவர சூழ்நிலையாக மாறிவிட்டதற்குக் காரணம், அங்கு ஏற்கெனவே ‘வெளிநாட்டவரை கண்டறிய’ செய‌ற்படுத்தப்படும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறை (National Register of Citizens) ஆகும்.

அதற்கு முன்பு, 1980களில் ஏற்பட்ட கலவரத்தால் ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’ 1985இல் உருவானது. அதன் கீழ், வெளிநாட்டவரைக் கண்டறிய, 25.3.1971 என்று ‘கட் ஓப் திகதி’ நிர்ணயிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான், தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகள் நடந்தன. இதில் இந்துக்களும் மலை வாழ் மக்களும் விடுபட்டுள்ளார்கள். 

ஆகவே, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள், அஸ்ஸாமிலேயே தங்கியிருக்க, இந்தக் குடியுரிமைச் சட்டம் வழி வகுத்து விடுமோ என்ற அச்சமே, அஸ்ஸாமில் நடைபெறும் தற்போதையை போராட்டத்துக்குக் காரணம் ஆகும்.   

இது ஒருபுறமிருக்க, தமிழ் நாட்டிலும் இந்தச் சட்டத்துக்கு ‘எதிரும் ஆதரவும்’ உருவாகியுள்ளன. மேற்கண்ட மூன்று நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்குள் வந்து குடியேறிய இஸ்லாமியர்கள், இந்தியாவில் வந்து குடியேறியிருக்கும் ஈழத்தமிழர்கள், இந்தக் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்துள்ளது.

அ.தி.மு.க தரப்பில் இரு அவைகளிலும் ஆதரித்து வாக்களித்துள்ளது. ஆனால், “இலங்கைத் தமிழர்கள்,  இஸ்லாமியர்கள் ஆகியோர்களுக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் பொருந்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ஜெயலலிதா இருந்த போது, எழுப்பிய ‘இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையைப் புதுப்பித்திருக்கிறது. 

ஆனால், அ.தி.மு.க எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதில், வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய நிர்ப்பந்தம், பா.ஜ.கவுக்கு உருவாகியிருக்கும். 

மத்திய அரசாங்கத்தின் தயவில், மாநிலத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க அப்படியெல்லாம் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே, முன்பு தி.மு.க ‘ஈழத் தமிழர்’ பிரச்சினையில் சிக்கியது போல், தற்போது அ.தி.மு.க குடியுரிமைச் சட்டத்தில் சிக்கியுள்ளது.  

தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஈழத்தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரச்சினைகளை முன் வைத்து, இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர். தி.மு.க சார்பில், தமிழகம் முழுவதும் டிசம்பர் 17 ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

“ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் நடைபெற்ற போது, தி.மு.கவும் காங்கிரஸும் அதை தடுக்கத் தவறி விட்டன” என்று தமிழ்நாட்டில், அ.தி.மு.க குற்றம் சாட்டி வந்தது. “ஈழத்தமிழர்களைக் கொல்லத் துணை போன காங்கிரஸுடன், ஏன் கூட்டணி” என்று தி.மு.கவைப் பார்த்து, அ.தி.மு.க தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது. 

இந்த எதிர்மறைப் பிரசாரத்தை முறியடிக்க, குடியுரிமை திருத்தச் சட்டப் பிரச்சினையை கையிலெடுத்துள்ளது தி.மு.க. எதிர்த்து வாக்களித்ததோடு மட்டுமின்றி,  இந்தச் சட்டத்தை வைத்து, தமிழகத்தில் அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் எதிர்ப்பான நிலைப்பாட்டை, மேலும் உறுதியாக்க தி.மு.க வியூகம் வகுத்துள்ளது. 

தி.மு.கவின் நிலைப்பாட்டுக்கு ஏற்றாற்போல், காங்கிரஸ் கட்சியும் ‘இலங்கைத் தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இலங்கைப் போரின் போது, விமர்சனத்துக்கு உள்ளான அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்போது மாநிலங்களவையில், “இலங்கை இந்துக்களை ,ஏன் இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் சேர்க்கவில்லை” என்று கேட்டுள்ளார். 

ஆகவே, தமிழகத்தைப் பொறுத்தவரை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவில் வந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினையை, மய்யமாக வைத்து, ‘தமிழக அரசியல்’ என்ற கண்ணாடி மூலம் பார்க்கப்படுகிறது.  

பொருளாதாரத் தேக்க நிலைமை,  வேலை வாய்ப்பு இல்லை என்றெல்லாம் காங்கிரஸும், மற்ற எதிர்க்கட்சிகளும் குடைச்சல் கொடுத்தாலும் பா.ஜ.கவைப் பொறுத்தவரை, தனது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. 

இந்தமுறை கிடைத்துள்ள மக்கள் ஆதரவை வைத்து, தன் அடிப்படைக் கொள்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், எப்போதும் நிறைவேற்ற முடியாது என்ற சிந்தனையில் பா.ஜ.க செயல்படுகிறது. வாஜ்பாய், அத்வானி போன்றோர் செய்ய மறந்ததைத் தான் செய்து விட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி எண்ணுகிறார். 

அதனால்தான், பொருளாதாரத்தில் பின்தங்கிய, முற்பட்ட வகுப்பினருக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு, காஷ்மீர் சிறப்பு அதிகாரம் இரத்து, தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற வரிசையில், தற்போது குடியுரிமைச் சட்டத் திருத்தம் நிறைவேறி இருக்கிறது. விரைவில் ‘அயோத்தியில் ராமர் கோயில்’ என்பதும் நிறைவேறி விடும். எஞ்சியிருப்பது பொது சிவில் சட்டம் மட்டுமே. அதற்கும், நேரம், திகதியை பா.ஜ.க குறித்து வைத்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. 

ஆட்சி, நிர்வாகம் என்பது ஒருபுறமிருக்க,கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தனது கட்சிக் கொள்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைமை உறுதியாக இருக்கிறது. எதிர்காலத்தில், எந்த மாநிலக் கட்சி தங்களுடன் கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும் பா.ஜ.க தனித்தே வலுவான தேசியக் கட்சியாக வெற்றி பெறும் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் மூலமந்திரம்.   

‘மத அடிப்படையில் குடியுரிமையா?’ ‘சம உரிமை என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம் மீது தாக்குதலா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் தற்போது முட்டுச்சந்தில் நிற்கிறது. அந்தக் கட்சிக்கு முழு நேரத் தலைவரும் இல்லை. பா.ஜ.கவின் பல கொள்கைகளை காங்கிரஸால் எதிர்க்கவும் இயலவில்லை. பொருளாதார இட ஒதுக்கீடு வழங்கும் போது எதிர்த்து; பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின சிறுபான்மையின மக்களை ஓரணியில் திரட்டும் வாய்ப்பையும் கோட்டை விட்டு விட்டது. அதனால் மற்ற மாநிலக் கட்சிகளும் காங்கிரஸுடன் சேர்ந்து கை கொடுக்க முன்வரவில்லை. அதனால் மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை பலம் இல்லாத நிலையிலும் பா.ஜ.கவால் பல்வேறு சிக்கலான சட்டங்களை எளிதில் நிறைவேற்ற முடிகிறது. கொள்கை உறுதிப்பாட்டில் பா.ஜ.க நேர் கொண்ட பார்வையுடன் பயணிக்கிறது. 

ஆகவே, இந்திய அரசியல் களம் இப்போதைக்கு  பா.ஜ.கவுக்கு சாதகமாகவே காணப்படுகின்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X