X

X
கண்களை இழந்து ஓவியமா?

ஆசியாக் கண்டத்தில் இலங்கை ஒரு சிறிய நாடு; அழகான நாடு. பல இயற்கை வளங்களையும் தன் அகத்தே கொண்ட நாடு. இவ்வாறு இருந்த போதிலும் பல ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இந்த நாட்டு மக்கள் வாழ்கின்றனர். 

பொதுவாக மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளில் பல, இனப்பிரச்சினையின் தொடர்ச்சியான அறுவடைகளே. 

அதாவது பல தசாப்தமாகத் தொடரும் நீண்ட கால இனப்பிரச்சினையால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதிரிகளாக ஏற்பட்ட பிரச்சினைகள் எனலாம்.  

சிங்கள மக்களை நோக்கின் அவர்கள் நாளாந்தம் பலவாறான சமூக பொருளாதார பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். இவற்றில் சில இனப்பிரச்சினையுடன் சம்பந்தம் இல்லாதவையாக இருக்கலாம். 

ஆனால் மறுபுறத்தே தீவின் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்துமே இனப்பிரச்சினையின் குழந்தைகளும் பேரப் பிள்ளைகளுமே எனலாம். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நில விடுவிப்பு, ஜெனிவா மாநாடுகளின் எதிர்பார்ப்புகள் சிங்களக் குடியேற்றம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.  

உண்மையிலேயே இப்பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்று அறுதியிட்டுக் கூறக்கூடிய வகையில் ஒரு திடமான காலப்பகுதியைக் கூற முடியாது. அந்நியர் ஆட்சிக் காலத்தில் இனங்களுக்கிடையில் ஆங்காங்கே அவ்வப்போது சிறுசிறு இன முறுகல் சம்பவங்கள் நடந்தேறி உள்ளமை பதிவாகி உள்ளன.  

ஆனாலும், 1948 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலங்களில் அது தீவிரம் அடைந்தது எனக் கூறலாம். இன்னொரு விதத்தில் கூறுவதாக இருந்தால், ஆங்கிலேயர் ஆட்சியில் ஒழித்திருந்த இனவாதம் 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர், அவர்கள் வெளியேறியதும் வெளியே வந்தது எனலாம். 

எது எவ்வாறாக இருந்த போதிலும், இனவாதம், மதவாதம் ஆகிய இரண்டும் இலங்கை மாதாவின் மக்கள் ஆகிய சிங்கள இனத்தையும் தமிழ் இனத்தையும் இரண்டாக்கியது என்பது மட்டும் நிதர்சனம்.  

இவ்வாறான சூழலில், முன்பு நாட்டில் பயங்கரவாதமே நிலவுவதாக கூறிய அரசாங்கம் தற்போது இனப்பிரச்சினை உள்ளது என ஒப்புக் கொண்டுள்ளது. இனப்பிரச்சினைக்குப் பரிகாரம் காண முற்படுகின்றது. 

ஆகவே மருத்துவத்தில் முதலில் நோய் என்ன என்பதைக் கண்டு பிடித்தாலே சிகிச்சையைத் தொடரலாம். அதேபோல, இனப்பிரச்சினை என்னவென்று அறிந்தால் மட்டுமே அதற்கான நீடித்த நிரந்தரமான, நியாயமான தீர்வை கண்டறியலாம்.

எனவே, இவ்வாறாகப் பல இருள் படிந்த பக்கங்களை தமிழ் மக்களுக்கு வழங்கிய இலங்கைத் தீவின் இனமுரண்பாடு என்றால் என்ன என நோக்கின்,  
இலங்கையில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றனர். 

அத்துடன் தீவின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் ஒரு தேசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தேசத்துக்குச் சேதம் ஏற்படும் படியான எந்தத் தீர்வுத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். 

இப்படிப்பட்ட தேசத்தை (மக்களை) தாங்கும் பிரதான தூண்களாக நிலம், மொழி, பொருளாதாரம் மற்றும் கலாசாரம் என்பன திகழ்கின்றன. ஒரு கட்டடத்தை நான்கு தூண்கள் தாங்குவது போல, ஓர் இனத்தை இந்த நான்கு தூண்களும் தாங்குகின்றன என்றால் மிகையாகாது.  

காணி நிலம்  

அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் கடந்த காலங்களில் தமிழ் மக்களது பல ஆயிரம் ஏக்கர் காணிகள் பறிபோய் விட்டன. தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற முத்திரை குத்தி மேலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. 

திருகோணமலையில் 1921இல் 4 சதவீதமாகக் காணப்பட்ட சிங்கள மக்களின் சனத்தொகை தற்போது 32 சதவீதமாக எகிறி விட்டது. இது ஒரு சாதாரண பிறப்பு அதிகரிப்பு அல்ல; மாறாக நன்கு திட்டமிட்ட அதிகரித்த சிங்கள குடியேற்றங்களின் வருகை ஆகும். இக்காலப்பகுதியில் மாவட்டத்தில் தமிழ் மக்களது சனத்தொகை 55சதவீதமாக இருந்து 33 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. 

அத்துடன் தமிழ் மக்களின் தேசியம் என்ற அம்சத்தை முற்றாக சிதைக்கும் வகையில், 1984இல் மேற்கொள்ளப்பட்ட தனித் தமிழ் கிராமமான மணலாறு, தனிச் சிங்கள கிராமமாக உருமாற்றம் பெற்ற வெலிஓயா ஆகும். 

தற்போது கூட வடக்கு மாகாண நீர் பற்றாக்குறையைப் போக்க மாகாவலியை வடக்கு நோக்கி திசை திருப்பினால் அதனுடன் சிங்கள குடியேற்றங்களும் கூடவே வந்து விடும் என உள்ளூர் வாசிகளுக்கு உள்ளூர பயம்.   

மொழி  

தனிச்சிங்கள சட்ட வருகையுடன் (1956) நாட்டில் மொழி தொடர்பிலான பல பிரச்சினைகள் வெளிக்கிளம்பின. ஒரு மொழி இரு நாடு அல்லது இரு மொழி ஒரு நாடு என்றவாறாக நாடாளுமன்றத்தில் உயர்ந்த பெரிய அர்த்தமுள்ள குரல் ஒலித்தாலும் அதையும் மீறி நடைமுறைப்படுத்தப்பட்டது. மொழி என்பது ஒரு முக்கிய ஊடகம். இச்சட்டத்தினால் தமிழ் மக்கள் தங்கள் மொழியை இழந்து ஊமை ஆனார்கள் என்று கூடக் கூறலாம்.

தற்போது தமிழ் மொழிக்கு உரிய கௌரவம், மதிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.   

ஆனாலும் உதாரணமாக அரச வங்கியான இலங்கை வங்கியின் தங்க நகை அடகுச் சேவையை ரண் சுரக்கும் என மும்மொழியிலும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் கிராம சேவையாளரை (விதானையார்) சிங்களத்தில் கிராம நிலடாரி என அழைப்பார்கள். அது போலவே ஆங்கிலத்திலும் கிராம நிலடாரி என்றே நாடு பூராக குறிப்பிடப்படுகின்றது. 

விண்ணப்பபடிவங்களிலும்GN பிரிவு என்றே குறிப்பிடப்படுகின்றது. அதாவது சிங்கள மொழியையே ஆங்கிலத்திலும் குறிப்பிடுகின்றனர். தமிழர் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் அரசாங்க சுற்றறிக்கைகள் அவ்வப்போது சிங்கள மொழியில் வருதல் என மொழி தொடர்பிலான பிணக்குகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.  

பொருளாதாரம் (பொருள் ஆதாரம்)  

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் (செல்வம்) இல்லை எனின் இந்த உலகத்திலே இடம் இல்லை என்பதே இதன் பொருள். யுத்தத்துக்கு முற்பட்ட காலங்களில் தமிழ் மக்களது பொருளாதாரம் மிக உயர்வான நிலையில் காணப்பட்டது.

1958, 1977, 1983 எனப் பல கால கட்டங்களிலும் தெற்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்களில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களது பொருளாதாரம் அழிக்கப்பட்டது. தொடர்ந்து 2009ஆம் ஆண்டு வரை வடக்கு, கிழக்கில் நடைபெற்ற படை நடவடிக்கைகளால் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்தழிவை தமிழர் தரப்பு கண்டது. 

தற்போது கூட யுத்தத்துக்குப் பின்னரான எட்டு வருட காலங்களில் உண்மையான பொருளாதார அதிகரிப்பு ஏற்படவில்லை. முல்லைத்தீவில் பெரும்பான்மை இனத்தவரால் சட்டவிரோத மீன்பிடி மேற்கொண்டு வரப்படுகின்றது. பெருவாரியாக அவர்கள் உழைக்கின்றனர்.

ஆனால், தமிழ் மீனவர்கள் வறுமையில் வாடுகின்றனர். மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள உல்லாச தங்கு விடுதிகள் அனைத்தும் பெரும்பாண்மை இனத்தவர்களுடையவை. அங்கு தமிழர்கள் பணி புரிகின்றனர். முன்னாள் போராளிகளது குடும்பங்கள் கடும் வறுமையில் திண்டாடுகின்றனர்.  

 ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் எங்கு தவறுதலாக தடக்கி விழுந்தாலும் அங்குள்ளவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர் எனக் கூறுவார்கள். தற்போது அங்குள்ள இளைஞர்கள் குடிபோதையில் விழுந்து எழும்புகின்றனர்.

அதிகமாக குடிப்பதில் வேதனையான சாதனை படைக்கப்பட்டுள்ளது. போதையால் பாதை மாறும் இளைஞர்கள் எண்ணிக்கை தினசரி அதிகரித்துச் செல்கின்றது. இளைஞர்கள் பாதை மாறினால் முழு சமூகமுமே நடுத்தெருவுக்கு வரும். 

கிளிநொச்சியில் விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பெண்கள் கைது என்ற செய்திகள் வெளி வருகின்றன. கஞ்சா போதைப்பாவனை, பாலியல் பிரச்சினைகள் என்பது பூச்சியமாக காணப்பட்ட பகுதியாக தமிழர் பிரதேசங்கள் முன்பு காணப்பட்டன. 

தற்போது வித்தியா பாலியல் விவகாரத்தால் முழு இனமும் தலை குனிய வேண்டிய நிலையில் உள்ளது. நள்ளிரவில் ஒரு பெண் தனியாகச் செல்லக்கூடிய நிலை காணப்பட்டால் அங்கு பெண் சுதந்திரம் உள்ளதாகக் கூறுவார்கள். இவ்வாறான நிலை முன்பு இருந்தது. தற்போது பெண்கள் ஒருவரது துணையுடன் பகலில் செல்லவே அச்சப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.  

ஆகவே, நிலம், மொழி, பொருளாதாரம் கலாசாரம் என்பவை அழிக்கப்படல் அல்லது சிதைக்கப்படலே இனப்பிரச்சினை ஆகும். தமிழ் மக்கள் இவற்றை அழிக்க விடாமல் தடுத்த போராட்டமே இன விடுதலைப் போராட்டம் ஆகும். அதற்கு ஆட்சியாளர்கள் கொடுத்த பெயர் பயங்கரவாதம் ஆகும்.  

கோயிலில் ஆண்டவனுக்கு படைக்கப்படும் பொருட்கள் ஆண்டவனைப் போய் சேரும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஆனால், ஏழைக்கு வழங்கும் தானம் நிச்சயமாக ஆண்டவனைப் போய்ச் சேரும். ஒருவரிடம் இருக்க வேண்டிய ஒன்று இல்லை எனின் அவர் ஏழை. தமிழ் மக்களிடம் அரசியல் சுதந்திரம் இல்லை. ஆதலால் அவர்கள் ஏழை. ஆகவே அந்த ஏழைக்கு வழங்கும் தீர்வு (சுதந்திரம்) ஆண்டவனுக்கு சமர்ப்பனம் ஆகும்.  

இனப்பிரச்சினைக்கு பரிகாரம் காணும் பொருட்டு அரசாங்கம் அரசியல் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பௌத்த மத மூன்று பீடங்களுக்கான தேரர்களும் ஏனைய சங்க அமைப்புகளின் தேரர்களும் புதிய அரசியல் அமைப்போ அல்லது அரசியல் அமைப்பில் மாற்றங்களோ தேவையில்லை என முடிவு எடுத்துள்ளனர்.  

அரசியல் அமைப்பு மாற்றம் காணாது இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஏற்றம் ஏற்படப் போவதில்லை. இந்த நிலையில் நாட்டில் புதிய விடியல் தோற்றம் பெறப்போவதில்லை. 
ஆனாலும் தமிழ் சமூகத்துக்குத் தொடர்ச்சியான ஏமாற்றங்கள் பழகி விட்டன. இம்முறை அதில் என்ன மாற்றத்தை செய்வார்கள் என மனம் கல்லாகி விட்டது.  

ஆகவே, தமிழர்கள் தங்களது நிலம், மொழி, பொருளாதாரம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றைத் தாங்கள் பாதுகாக்க முடியாதவாறு அழுத்தத்தின் மத்தியில் ஏற்படுத்தப்படும் திணிப்பு (தீர்வு) கண் பார்வை அறவே அற்ற ஒருவருக்கு வழங்கப்படும் ஓவியத்துக்குச் சமனாகும்.  


கண்களை இழந்து ஓவியமா?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.