2020 ஜூலை 11, சனிக்கிழமை

கண்ணால் காண்பதே மெய்

A.P.Mathan   / 2019 ஜூன் 12 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு விடயத்தையும் கண்களால் பார்த்து, தீரவிசாரித்து அறிவதனூடாகவே  உண்மை நிலைமைகளை அறியமுடியும். அதனடிப்படையில், திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடத்தில், பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, நேரடியாகச் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.  

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை, நேரடியாகச் சென்று தெளிவுபடுத்தும் நோக்கில், திங்கட்கிழமை காலையில், அமைச்சர் திருகோணமலைக்குச் சென்றிருந்தார். சர்ச்சைக்குரிய புண்ணிய பூமியுடன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் நேரடியாக அழைத்து, மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.  

அரசாங்க அதிபர் எம்.என்.புஸ்பகுமார தலைமையில் மாவட்டச் செயலகத்தில்  நடைபெற்ற விஷேட சந்திப்பில், கன்னியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த  விகாரையில், பிரதான தேரர், கன்னியா பிள்ளையார் கோவில் நிர்வாகிகள், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டவல, அமைச்சர் மனோ  கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், சுசந்த புஞ்சிநிலமே, சீனித்தம்பி யோகேஸ்வரன் உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும் சிவில் அமைப்பினரும்  கலந்துகொண்டிருந்தனர்.  

ஆலய பரிபாலன சபையின் குற்றச்சாட்டுப்படி, பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு பௌத்த விகாரை கட்டவுள்ளார்கள் என்பதாகவே அமைந்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அதனையே சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி, தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான பிரதேசத்தில், புதிதாகப் பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதியளிக்கும் தொல்பொருள் திணைக்களம்,  இருந்த கோவிலைப் புனருத்தாபனம் செய்வதற்கு அனுமதிப்பதில்லை என்ற  குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.  

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த  புஞ்சிநிலமே, கடுந்தொனியில் அதனை மறுத்து, இலங்கையில் ஒரு சட்டம்தான் அனைத்து இடங்களிலும் பிரயோகிக்கப்படுவதாக வாதிட்டார். மஹிந்த ராஜபக்‌ஷவின் எடுபிடியான சுசந்தவின் கூற்றை இடைமறித்து, ‘நாங்கள்தான் இங்கு அரசாங்கம்.  எதை எப்படிச் செய்யவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்’ என, அமைச்சர் மனோ  கணேசன் முற்றுவைத்தார். 

இந்தக் கலந்துரையாடலினூடாக, சில அடிப்படைப் பிரச்சினைகளை அவதானிக்க  முடிந்தது. சிறுபான்மை இனங்களாக இருப்பவர்களின் குரல்கள் நசுக்கப்படுவது  தெளிவாகத் தெரிகிறது. தொல்பொருள் திணைக்கள நிர்வாக சபையில் எந்தவொரு  சிறுபான்மை இனத்தவரும் இல்லை. 32 உறுப்பினர்களைக் கொண்ட அந்தச் சபையில், ஒரு சிறுபான்மை இனத்தவர்கூட இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நிலைமை  அப்படியிருக்கையில், உண்மையான புராதனம் பாதுகாக்கப்படுமென்பதை ஒருபோதும்  நம்ப முடியாது.  

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்  பேராசிரியர் மண்டவல, தொல்பொருள் சட்டங்களை விளங்கப்படுத்தினார். தொல்பொருள்  திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களைச் சேதப்படுத்துவது பாரிய  குற்றச்செயலாகக் கருதப்பட்டு வழக்குத் தொடரப்படுமெனவும், அப்படிச் சேதம்  விளைவித்தவர்களுக்குப் பிணை வழங்குவதில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.  அதுமாத்திரமன்றி, கன்னியா பிரதேசத்திலுள்ள வெந்நீரூற்றுப் பிரதேசம்,  தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமானது எனவும் சுட்டிக்காட்டினார்.  

திருகோணமலை, பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட 243ஜி கன்னியா  கிராம அலுவலர் பிரிவிலுள்ள வெந்நீரூற்றும் அதனைச் சூழவுள்ள எச்சங்களும்  தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமானதெனத் தெரிவித்த மண்டவல, அங்கு  மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்  எச்சங்கள் அநுராதபுர யுகத்துக்குரியவை எனவும் தெரிவித்தார்.  

இச்சந்திப்பைத் தொடர்ந்து, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதிக்கு  நேரடியாகச் சென்று பார்த்தோம். வெந்நீரூற்றுக்கும் கிரியை செய்யும் சிவன்  கோவிலுக்கும் இடையில் இருந்த பிள்ளையார் கோவில்தான்  இடிக்கப்பட்டிருக்கிறது. அக்கோவிலுக்குச் சொந்தக்காரர்கள்தான், அக்கோவிலைப்  புனருத்தாபனம் செய்வதற்காக இடித்திருக்கிறார்கள். புனருத்தாபனத்துக்கான  வேலைகள் நடைபெறும்போதுதான் பிள்ளையார் கோவில் இருந்த இடத்துக்குக் கீழே,  பௌத்த விகாரையொன்றின் அடிப்பாகம் தென்பட்டுள்ளது. 

அதனையடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் தலையீட்டினால் பிள்ளையார்  கோவில் கட்டும் பணி நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், அன்றைய கூட்டத்தில்  கலந்துகொண்ட தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டவல,  பிள்ளையார் கோவில் அமைப்பதற்கான மாற்று இடமொன்றைத் தருவதாக உறுதியளித்தார். அதுமாத்திரமன்றி, கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில், பௌத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும் தமிழ் பௌத்த வரலாறு இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம் எனவும், கன்னியா விகாரையின் தேரர்கள் உடன்பட்டனர்.  

இதேவேளை, புராதன சிதைவுகளுக்குச் சேதம் ஏற்படாத வகையில், கன்னியா  வளவுக்குள் வெந்நீரூற்று விநாயகர் ஆலயத்தை அமைக்கவும், வெந்நீரூற்று சிவன் கோவிலைப் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டதுடன், கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து  சமய அலுவல்கள் அமைச்சு வழங்கும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 

அமைச்சர் மனோ கணேசனின் தலையீட்டையடுத்து, பிரச்சினை ஓரளவுக்குத் தணிக்கப்பட்டிருக்கிறதே தவிர முற்றுப்பெறவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தனியார்க் காணிகளில் தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுமாக இருந்தால், அக்காணியைத் தொல்பொருள் திணைக்களம் தம்வசப்படுத்தும். இதுதான்  சட்டம். அச்சட்டத்தின் அடிப்படையில், கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியிலுள்ள  பிள்ளையார் கோவில் காணிக்கு உரிமைகோரும் கணேஷ் கோகிலரமணி, சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். 

ஆனாலும், அவரும் சில விடயங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தால்,  மாற்று இடத்தில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கான அனுமதியைப்  பெற்றுத்தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ‘விகாரையின்மேல் கோவில் கட்ட அனுமதியோம்’ என, பிக்குகள் சொன்னபோது, அங்குசென்ற எமக்கும் உண்மை  புரியவில்லை. நேரடியாகச் சென்று பார்த்தபோதுதான், சிதைந்துபோன விகாரை  எச்சங்களுக்கு மேலாகப் பிள்ளையார் கோவிலைக் கட்டமுடியாதென்பது தெரியவந்தது.  தொல்பொருள்களைப் பாதுகாப்பது அனைவரதும் கடமை. ஆனால், ஓர் இனத்தை மாத்திரம் மய்யப்படுத்தியதாக தொல்பொருள்களைச் சித்தக்கக்கூடாது என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். 

பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இராமாயணத்துடன் தொடர்புடையதெனக் கருதப்படும் கன்னியா வெந்நீரூற்றுக்குள் எவ்வாறு பௌத்த விகாரைகள் முளைத்தன என்பது கேள்விக்குறிதான்.

ஆனாலும், பிற்பட்ட காலங்களில் மேற்கொள்ளப்பட்ட  படையெடுப்புகள், அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் என்பன, இன்னமும் தொல்பொருள் எச்சங்களாக இருக்கின்றன. அப்படியானதோர் எச்சமே, தற்போது கன்னியாவில் வெளிப்பட்டிருக்கிறது. 

அநுராதபுர யுகத்துக்குரிய தொல்பொருள் எச்சங்கள் என  உறுதிப்படுத்தப்பட்டுள்ள இவற்றைப் பாதுகாக்க வேண்டியது கட்டாயமானதுதான்.  ஆனாலும், ஏற்கெனவே இருந்த ஆலயங்களை செயலிழக்கச் செய்வது அப்பட்டமான உரிமை  மீறலாகவே பார்க்கப்படவேண்டும். மண்டவல கூறுவதுபோல், 1956ஆம் ஆண்டு  அநுராதபுரத்தின் புராதன எச்சங்களைத் தொல்பொருள் திணைக்களம் பாரமெடுத்தபோது,  அங்கிருந்த கட்டடங்கள் யாவும் அகற்றப்பட்டு, புதிய நகருக்குக் கொண்டு  செல்லப்பட்டிருக்கிறது. அப்படியான நிலையொன்றை கன்னியாவும் எதிர்கொள்ளலாம். அப்படியொரு நிலை வருமாக இருந்தால், புதிதாக அப்பகுதியில்  உருவாக்கப்பட்டிருக்கும் பௌத்த விகாரைக்கும் இவ்விதி பொதுவானதாக இருக்க  வேண்டும். இந்நாட்டின் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க  வேண்டும். தொல்பொருள் திணைக்களம் என்பதும் அனைவருக்கும் உள்ள உரிமைகளை  மதித்து நடக்கும் திணைக்களமாக இருக்க வேண்டும். 

நீராவியடி பிள்ளையார் கோவில்

அத்துமீறிய ஆக்கிரமிப்பும் புராதன எச்சங்களை இல்லாதொழிக்கும்  செயற்பாடுகளும், நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தாராளமாகவே  இடம்பெறுகின்றன. கன்னியா விஜயத்தைத் தொடர்ந்து, முல்லைத்தீவு - செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காகச் சென்றிருந்தோம். 

கன்னியா விவகாரம் போன்றல்லாது, அடாத்தான முறையில் பௌத்த விகாரையை அமைத்து, சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் பௌத்த துறவியின் ஈனச்செயலை, அங்கு நேரடியாகக் காணக்கிடைத்தது.

இந்த மதகுரு, உண்மையிலேயே பௌத்த துறவியா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஏனெனின், இத்துறவின் இரண்டு பிள்ளைகள், இங்கிலாந்தில் கல்வி கற்கிறார்களாம். எந்த வருடத்தில் தான் துறவியானார் என்பதைக்கூடத் தெளிவாகக் கூறுகிறாரில்லை.  

அப்படிப்பட்ட ஒரு தனிநபரின் சுயவிருப்புக்கு, இன ஒற்றுமை  சின்னாபின்னமாக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீராவியடிப் பிள்ளையார் கோவில் அமைந்திருந்த பகுதியில், தொல்பொருள் எச்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை, ஏற்கெனவே தொல்பொருள் திணைக்களம்  அறிவித்திருக்கிறது. அப்படியிருந்தும் அடாத்தான முறையில் அப்பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் அந்த பௌத்த பிக்கு. இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடலையும், அமைச்சர் மனோ கணேசன் மேற்கொண்டிருந்தார். 

எந்தவிதமான அடிப்படையும் இன்றி, ஓரிடத்தை அடாத்தாக ஆக்கிரமித்து, அதற்கு உரிமைப் பத்திரங்களைச் சமர்ப்பித்துப் போராடிக்கொண்டிருக்கும் பௌத்த பிக்குவின் கோரமுகத்தை, இக்கூட்டத்தில் காணமுடிந்தது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளை இஞ்சித்தேனும் கணக்கெடுக்காத பொடுபோக்குத்  தனத்தையும் அவதானிக்க முடிந்தது. 

அந்த பிக்குவைப் பொறுத்தவரையில், ஆட்சிமாற்றம் ஒன்றே தீர்வென்ற  எண்ணத்துடன் கருத்துகளை முன்வைத்தார். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம், குறித்த பகுதியில் எந்தவிதக் கட்டுமானங்களையும் செய்யக்கூடாது என்பதுதான் கட்டளை. நீதிமன்றத் தீர்ப்பைக்கூடத் துச்சமென மதித்து, தனது பிடிவாதத்தைத் தமிழர்கள் மீது காட்டும் பிக்குவை அடக்கி வைப்பதற்கு, எவருக்கும் துணிவில்லாமலிருப்பது கவலைக்குரிய விடயம்தான். 

இராணுவம்,  பொலிஸைத் தவிர, சுற்றி எந்தவொரு சிங்களவரும் இல்லாத இடத்தில், தன்  சுயநலத்துக்காக விகாரை அமைத்து, சண்டித்தனம் காட்டிவரும் பௌத்த பிக்குவைத் தண்டிப்பதற்கு எந்தவொரு முதுகெலும்புமுள்ள பொலிஸாரும் இல்லாமலிருக்கிறார்கள். 

மக்கள் பிரதிநிதிகளின் பேச்சைக்கூடக் கணக்கெடுக்காமல், தன் முழுப்  பலத்தையும் பிரயோகித்துவரும் இதுபோன்ற பௌத்த பேரினவாதிகளை, தொல்பொருள்  திணைக்கள அதிகாரிகளும் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார்கள். தமிழ் மக்கள் மீது  பிரயோகிக்கப்படும் கெடுபிடிகளில் ஒரு துளியையாவது பிரயோகித்தால், இந்த இனவாதச் சக்திகளை அடக்கியிருக்க முடியும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல்  இருப்பது கேவலமானது. 

மக்கள் பிரதிநிதிகளும் தம்மால் முடிவதில்லை என்பதற்காக, ஒதுங்கியிருந்துவிட முடியாது. வெறுமனே அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும்  சாடிக்கொண்டிருப்பதிலும் பார்க்க, இவ்வாறான இனவாதிகளின் ஈனச்செயல்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடந்ததாக  அறியமுடியவில்லை. சாதாரண பொதுமக்களுக்கு இருக்கும் வைராக்கியம் வன்முறையாக வெடிப்பதற்கு, நீண்டகாலம் செல்லாது. 

ஆகையால், தமக்கிருக்கும் அதிகார பலத்தை மக்கள்  பிரதிநிதிகள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். எதிர்ப்பு அரசியல் செய்வது  தங்களின் அரசியலோடு மாத்திரம் வைத்துக்கொள்ளலாம். அதைவிடுத்து, இவ்வாறான  புற அழுத்தங்களை எதிர்கொள்வதற்காகவாவது ஒற்றுமைப்பட வேண்டிய கட்டாயத்தைத்  தமிழர் பிரதிநிதிகள் உணரவேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .