2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

காலநிலை மாற்றம் - 2050

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனைத் தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், நாடுகளையும் பிராந்தியங்களையும் அச்சுறுத்தக்கூடியதும் உலகளவில் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றிய ஒரு ஆழமான பார்வையுடன் ஒரு அறிக்கையை கடந் தவாரம் வெளியிட்டிருந்தது. அவ் அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும். இது காலநிலை மாற்றங்கள், “சூறாவளி, வெள்ளம், நீர் பற்றாக்குறை மற்றும் உணவு” ஆகியவற்றின் விளைவாக இருப்பதுடன் இதன் காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் இனி வாழக்கூடியதான நிலையில் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தது.

குறித்த அறிக்கையின் மதிப்பீடுகளில், காலநிலை மாற்றங்கள் குறைந்தது இரண்டு வழிகளில் வெகுஜன மக்களின் இயக்கத்தை பாதிப்பதாக தெரிவித்திருந்தது. முதலாவதாக, இயற்கை பேரழிவுகளின் தாக்கம் செலுத்தும் தாக்கங்கள்; இரண்டு, உணவுப் பாதுகாப்புத் துறையில் ஸ்திரமின்மை- குறிப்பாக, மக்களுக்கு நீர் மற்றும் உணவை அணுகுவதில் ஏற்படப்போகும் கட்டுப்பாடுகள் என்பனவாகும். ஆதலால், இதன் விளைவுகள், பிராந்தியங்களில் உள்ள மக்கள்தொகையின் கட்டமைப்பில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அதன் காரணமாக, இவை அரசியல் ஆட்சிகளுக்கான - குறிப்பாக, உள்நாட்டுத் தேர்தல் மற்றும் ஆட்சியமைப்பு தொடர்பாக மக்கள் தீர்மானம் மேற்கொள்வதில் உறுதியான செல்வாக்கை செலுத்தும் என்பதையும் அனுமானிக்க முடியும்.

இதற்கு பிரதானமான கரணம், ஒவ்வொரு பிராந்தியங்களிலும் வளர்ந்து வரும் மக்கள்தொகை கொண்ட அபிவிருத்தி அடையாத/அடைந்து வருகின்ற நாடுகள் "அரசியல் ஸ்திரமின்மை மற்றும் வன்முறையில்" மூழ்கும் அபாயத்தை இந்நிலை தோற்றுவிக்கும் அதேவேளையில், முக்கியமாக அபிவிருத்தி அடைந்தமற்றும் சில அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வேலை செய்யக்கூடிய குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் குறைவு என்பது பொருளாதார வளர்ச்சியின் விகிதங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது தவிர, எல்லை தாண்டிய இடம்பெயர்வு அரசியல் செயல்முறைகளில் மிக முக்கியமான காரணியாக மாறும். குறிப்பாக, ஆபிரிக்காவில் அடுத்த 20-30 ஆண்டுகளில் அதிகபட்ச மக்கள் தொகை வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்ற இந்நிலையானது, குறித்த பிராந்தியத்தையும் தாண்டி, ஒரு எதிர்மறையான சூழ்நிலையில், இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகளாவிய இடம்பெயர்வுக்கான ஒரு புதிய அலையைத் தூண்டும் என்பதுடன், பிராந்தியத்தின் விவகாரங்களில் இது வெளிநாட்டு சக்திகளின் அப்பட்டமான தலையீட்டையும் அதிகரிக்கும்.

 

மேலும், காலநிலை மாற்ற அகதிகளின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்புக்கு இன்னொரு காரணமாக உலகப் பெருங்கடலின் மட்டத்தின் அதிகரிப்பு ஒரு சர்வதேசப் பிரச்சனையாக உருவெடுக்கும். மேற்குறிப்பிட்ட அறிக்கையின் அடிப்படையில், சீனா, பங்களாதேஷ், இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகள் அடுத்த 30 ஆண்டுகளில் குறிப்பிட்ட ஆபத்தை சமாளிக்க தயாராதல் அவசியமானதாகும். 2100 வாக்கில் உலகப் பெருங்கடலில் நீர் நிலைகள் இப்போதுள்ளதை விடவும் இரண்டு மீற்றருக்கும் அதிகமாக உயரக்கூடும் என்று அறிக்கையில் வழங்கப்பட்ட மதிப்பீடுகள் கூறுகின்றன. இதன் விளைவாக, குறைந்தது 200 மில்லியன் மக்கள் வசிக்கும் பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும். இவற்றின் ஒரு தொடக்கப்புள்ளியாகவே, இப்பத்தியாளர் பூகோளவியல் அடிப்படையில் உயரமாக உள்ள பிராந்தியங்களான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகியவற்றின் அகதிகளுக்கான கொள்கையில் 2016 க்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களை பார்க்கின்றார்.

1. குடியேற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தை (2018) பல ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்க மறுக்கின்ற நிலைமை கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 2013க்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்துக்கு வந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பாவின் முன்னணி நாடுகளின் அரசியல் நிலைமைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தனர். குறிப்பாக, சிறுபான்மையினருக்கான உரிமை, அவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் பல விடயங்கள்எப்போதும் இல்லாத அளவு ஒரு பேசுபொருளாகி இருந்தது. மேலும், அவ் அரசியல் நிலைமைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய வடிவத்தை கேள்விக்குட்படுத்தியும் இருந்தது. இதன் விளைவாக, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடம்பெயர்வு சட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் குறிப்பாக தங்கள் இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைமையுடன் அரசியல் போரில் ஈடுபடும் அளவுக்கு சென்றிருந்தது.

 

2. ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை, குடியேற்ற பிரச்சினைகள் 2016 க்கு பின்னரான அரசியலில் என்றில்லாத அளவு முக்கியம் பெற்றுள்ளது. குறிப்பாக, அவை இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் நிகழ்ச்சி நிரலில் கூட ஒரு முக்கிய புள்ளியாக மாறியுள்ளது. இருப்பினும், முந்தைய ஆண்டுகளைப் போலவே, அகதிகள் தொடர்பிலான விடையங்கள் வெறுமனே உணர்ச்சிகளை தோற்றுவித்த அதேநேரம், ஒரு சீரான மற்றும் விரிவான தீர்வை உருவாக்குவதற்கான முயற்சிகளை முறியடித்துள்ளது. தற்போது, ​​ஆயிரக்கணக்கான உயர் தகுதி வாய்ந்த புலம்பெயர்ந்தோரை ஐக்கிய அமெரிக்கா இழந்து வரும் கடுமையான குடியேற்றக் கொள்கைக்காக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை ஜனநாயகக் கட்சியினர் விமர்சிக்கின்ற போதிலும் - அவர்கள் கனடாவை உதாரணமாக சுட்டிக்காட்டும் போதிலும், கனடாவில் அகதி அந்தஸ்து பெறுவது என்பதும் அவ்வளவு சுலபமானதல்ல என்பதே உண்மை நிலையாகும்.

அடிப்படையில், காலநிலை அகதிகள் தொடர்பில் உண்மையான கொள்கைகளை வகுக்க அபிவிருத்தி அடைந்த நாடுகள் தொடர்ச்சியாகவே விரும்பவில்லை. ஆயினும், குறித்த விடயம் தொடர்பில் அசமந்த போக்குடன் தொடர்ச்சியாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் செயற்படுதல் எதிர்காலத்தில் ஒரு தவிர்க்க முடியாத நிலைக்கு அவர்களின் பொருளாதார மற்றும் பாதுக்காப்பு ஸ்திரத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம், அந்நிலை பூகோள அரசியல் நிலைகளில் மேற்கூறியது போல மிகவும் ஆழமான தாக்கத்தை செலுத்தப்போகின்றது என்பதே தற்காலத்தில் ஆழ்ந்து அவதானிக்கவேண்டிய ஒன்றாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X