2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா?

கே. சஞ்சயன்   / 2018 ஏப்ரல் 20 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.   

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின் ஊடாக, போட்டியிடுவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும், கேள்வி-பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டே, அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.  

இரண்டு வார‍ங்கள் இந்தியாவில் தங்கியிருந்து, ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வதாகக் கூறியிருந்தாலும், அதைப் பலரும் நம்பத் தயாராக இருக்கவில்லை என்பதே உண்மை.  

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூட்டமைப்பை எதிர்த்து, புதியதொரு கட்சியை அல்லது கூட்டணியை ஆரம்பித்துப் போட்டியிடுவதற்கான இந்திய அரசாங்கத்தின் அனுமதியை, ஆசியைப் பெற்றுக் கொள்வதற்கே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியா சென்றிருக்கிறார் என்பது பலரின் சந்தேகம்.  

அந்தச் சந்தேகங்களில் உள்ள நியாயத்தன்மையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.  
கடந்த மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஜெனீவாவில் நடந்து கொண்டிருந்தது. அப்போது, கிளிநொச்சியில் ஒரு நிகழ்வில் பங்கேற்கச் சென்றிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம், ஊடகவியலாளர் ஒருவர், “ஜெனீவாவுக்கு ஏன் செல்லவில்லை” என்று கேள்வி எழுப்புகிறார்.  

அதற்கு முதலமைச்சர், தனக்கு இங்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் தமது சார்பில், அங்கு செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதற்கு, மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் சென்றுள்ளார்கள் என்றும் கூறியிருந்தார்.  

2013ஆம் ஆண்டு விக்னேஸ்வரன், முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பல அமர்வுகள் ஜெனீவாவில் நடந்திருக்கின்றன. ஆனால், ஒருபோதும் அவர் ஜெனீவா சென்றதுமில்லை; செல்வதற்கு முயன்றதுமில்லை.  

வேலைப்பளுவை அவர் காரணம் காட்டியிருந்தார். அப்படியானால், ஜெனீவாவுக்குச் செல்பவர்கள் எல்லாம், வேலையில்லாமல் இருப்பவர்களா?   

தமது வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டுத் தான், பலரும் அங்கு சென்று நியாயம் கேட்க முனைகிறார்கள்.  
முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் விக்னேஸ்வரன், கனடாவுக்கும் இலண்டனுக்கும் சென்று வந்திருந்தார். முன்னர் ஓரிரண்டு தடவைகளும், இப்போதும் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கிறார்.   

இதன்போதெல்லாம் அவருக்கு வேலைப்பளு இல்லையா? இம்முறை அவர் இரண்டு வாரங்கள் இந்தியா சென்றிருக்கிறார். ஓய்வெடுப்பதும், விடுமுறையில் வெளிநாடு செல்வதும் தவறு அல்ல; தொடர் பணி, சோர்வைத் தரும். அவர் நிம்மதியைத் தேடி, ஆன்மீகப் பயணம் செல்வது ஒன்றும் தவறு இல்லை.  

ஆனால், ஜெனீவாவுக்கான பயணத்துக்கு அவர் கூறிய காரணம் சரியானது அல்ல; நியாயப்படுத்த முடியாதது. முல்லைத்தீவின் தென்பகுதியில், தமிழர்களின் பூர்வீக நிலங்கள், சிங்களக் குடியேற்றங்களால் அபகரிக்கப்படுவதாக வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.   

இதையடுத்து, கடந்த 10ஆம் திகதி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும், சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்ற பகுதிகளைப் பார்வையிட்டு, அதற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடத்துவதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.  

அதற்கமைய, கடந்த 10ஆம் திகதி, அனைத்து உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்குச் சென்றனர். ஆனால், முதலமைச்சர் மட்டும் அங்கு செல்லவில்லை. அவர் அடுத்தநாள், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்காக கொழும்புக்குச் சென்றிருந்தார். வடக்கு மாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட போது, முதலமைச்சர் அவையில் இருந்தார். அவருக்கு இந்தப் போராட்டம் பற்றியும் தெரிந்திருந்தது. ஆனால், அதை விட்டுவிட்டு அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.  

முல்லைத்தீவு போராட்டத்துக்குச் செல்லாமல், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன், அங்கு சித்திரை விழா, நினைத்த காரியம் நடந்தேற உதவும் திருத்தலங்களில், வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர் புதுடெல்லிக்குச் செல்லக்கூடும் என்றும், அல்லது புதுடெல்லிக்கு நெருக்கமான கொள்கை வகுப்பாளர்களுடன் பேசக் கூடும் என்றும் பரவலான பேச்சுகள் உள்ளன. 

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூட்டமைப்பு அல்லாத ஓர் அணியில் களமிறங்கும் தமது முடிவை, சூசகமாக வெளிப்படுத்தி விட்டு வந்துள்ள அவரை, புதுடெல்லி எவ்வாறு கையாளப் போகிறது என்று பலரும் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரனை, இந்தியா பெரியளவில் அரவணைத்து வைத்திருந்தது என்று கூற முடியாது. அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க விரும்புவதாகக் கடிதம் எழுதி, பல ஆண்டுகளாகி விட்ட போதிலும், புதுடெல்லியில் இருந்து அவருக்கு இன்னமும் அதற்கான அழைப்பு வரவில்லை.  

ஆனாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, ஒருமுறை அவரைச் சந்தித்திருந்தார். இரண்டாவது முறை கொழும்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்தும் அவரைச் சந்தித்திருந்தார். ஆனாலும், வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில், அவரைப் புதுடெல்லிக்கு அழைத்துப் பேச, இன்னமும் ‘சவுத் புளொக்’ கொள்கை வகுப்பாளர்கள் தயாராகவில்லை.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை, புதுடெல்லி தனது தேவைக்கு ஏற்ப கையாளுவதாகப் பரவலாக ஒரு கருத்து உள்ளது. அது எந்தளவு உண்மை என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, புதுடெல்லியின் செல்வாக்கு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  

அப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்படும் ஒரு தலைமையை, தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்தெடுப்பதற்கு, இந்தியா துணை போகுமா என்ற கேள்வி இருக்கிறது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு, சரியத் தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது சரியா என்று இந்தியா சிந்திக்காமல் இருக்காது.  

ஒருவேளை, வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தால், விக்னேஸ்வரன் அமைக்கும் கூட்டணி வெற்றியைப் பெற்றால், அந்தக் கட்டத்தில் இந்தியாவின் செல்வாக்கு குறைந்து போய் விடுமோ என்றும் புதுடெல்லி கணக்குப் போடும் வாய்ப்புகள் உள்ளன.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவரில்லை. எனவே, இந்தியா அவரை ஆதரிக்காமல் தவிர்ப்பதற்கு காரணங்களும் குறைவு தான்.   

ஆனால், அவரைச் சுற்றியுள்ள தரப்பினர் சிலர், இந்தியாவைப் பிடிக்காதவர்கள் என்பது புதுடெல்லிக்குத் தெரியும்.  

இப்படியான நிலையில், இந்தியாவை வெறுக்கும் தரப்பினருடன் அமைத்துக் கொள்ளும் கூட்டணியின் மூலம், விக்னேஸ்வரன் பலம் பெற்றால், அவரைத் தமது கைக்குள் வைத்துக் கொள்வதில், சிரமங்கள் ஏற்படும் என்றும் கூட, புதுடெல்லி கருதுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விக்னேஸ்வரன் அமைக்கப் போகும் கூட்டணியையும் இந்தியா சமநோக்கில் வைத்திருக்க முயலலாம்.  

இலங்கையில் குறிப்பாக, வடக்கு, கிழக்கில் இந்தியா தனியாதிக்கம் செலுத்த விரும்புகிறது. எனவே, தனக்கு நெருங்கிய ஒருவரே அங்கு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்பும்.  கூட்டமைப்பு செல்வாக்கை இழக்கும் சூழல் ஒன்றை இந்தியா அவதானித்தால், விக்னேஸ்வரனின் பக்கம் அதன் பார்வை திரும்பும். அதேவேளை, விக்னேஸ்வரனுக்கும் கூட இந்தியாவைப் பகைத்துக் கொண்டு ஓர் அரசியலை ஆரம்பிக்கும் துணிச்சல் இல்லை. தான் விரும்பாத ஒன்று முன்னெடுக்கப்படுவதை இந்தியா ஒரு போதும் அனுமதியாது என்பது அவருக்குத் தெரியும்.  

எனவே, எப்படியாவது இந்தியாவின் அனுமதியுடன் தான், வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தனியானதோர் அணியை ஆரம்பிக்க அவர் முயல்வார்.  

அவ்வாறு ஒரு தனியான அணியை ஆரம்பிக்க முனையும் போது, இந்தியா அவருக்குச் சில நிபந்தனைகளை விதிக்க முற்படலாம். அதாவது, தீவிர கருத்துடையவர்களை அடக்கி வைப்பது, இந்தியச் சார்பு நிலைப்பாட்டை உறுதி செய்வது, இந்தியச் சார்பு நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துடையவர்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் விடுவது போன்றவற்றில் கவனம் செலுத்த வாய்ப்புகள் உள்ளன.  

அதேவேளை, பூகோள அரசியல் நகர்வுகளுக்கு அமைய, இந்தியாவுக்கு மாற்றான சக்திகளுடனும் தொடர்புகளை வைத்துக் கொள்வது, மாற்றுத் தலைமையை கட்டியெழுப்புவது போன்ற கருத்துகள் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன.  

அதில் சீன சார்ப்பு நிலையை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் கூட சிலரால் கூறப்பட்டன. ஆனால், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அத்தகையதொரு நிலை கேள்விக்குறி தான்.   

கூட்டமைப்புக்கு மாற்றான ஓர் அரசியல் அணி உருவானாலும், இந்தியச் சார்பு நிலைக்கு வெளியே, மாற்று அரசியல் அணி ஒன்று உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .