தேசமும் தேசியமும்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 176)

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை, இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்த திம்புக் கோட்பாடுகளின் முதலாவது கோட்பாடானது, ‘இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்’ என்பதாகும்.   

நாடு (Country), தேசம் (Nation), அரசு (State) ஆகிய சொற்கள் அன்றாட வாழ்வில், ஒத்த பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் தத்துவவியல், அரசறிவியல், சட்ட ரீதியாக அவை, வெவ்வேறு பொருளை உணர்த்தும் தொழில்நுட்பச் சொற்களாகும்.  

ஆகவே, அந்தவகையில் நாடு, தேசம், அரசு என்பவை, ஒத்தபொருள் கொண்ட சொற்கள் அல்ல. அண்மைக்காலங்களில் இலங்கையில் ‘ஒரு நாடு, ஒரு தேசம்’ (one country, one nation) என்ற சொற்றொடர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டமையையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையையும் நாம் அதிகமாகக் காணலாம். இது இலங்கை என்பது, ஒரே நாடு மட்டுமல்ல; ஒரே தேசமும் என்ற சிந்தனைப் பரப்புரையாகும்.   

இதைப் பற்றி நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள, தேசம், தேசியம், தேசிய -அரசு ஆகிய விடயங்களைப் பற்றி, மேலோட்டமாகவேனும் அறிந்துகொள்ளுதல் அவசியமாகும்.   

தேசம், தேசியம்   

தேசம், தேசியம் என்ற கருப்பொருட்களானவை, கடந்த இரண்டு நூற்றாண்டுகளிலேயே முக்கியத்துவம் பெற்ற அரசியல் கருப்பொருட்களாகின. தேசம், தேசியம் என்பதற்கு, குறித்ததொரு வரைவிலக்கணத்தை வழங்குவதென்பது, மிகக் கடினமானதொரு காரியமாகவே தொடர்ந்து இருந்துவருகிறது.   

இதற்கு முக்கிய காரணம் புலமைத்தளத்தில், குறித்த கருத்தியல் தொடர்பில் பல்வேறுபட்ட பார்வைகளும் வரைவிலக்கணங்களும் பதிவுசெய்யப்பட்டு வருவதாகும். இவ்வாறு, பல்வகைப்பட்டமையும் வரைவிலக்கணங்களை, புரிதலின் இலகுக்காகச் சுருக்கமாக வகைப்படுத்த வேண்டுமானால், நாம், தேசியம் என்ற கருப்பொருளை, புறநிலையில் அணுகும் வரைவிலக்கணங்கள், மற்றும் தேசம், தேசியம் என்ற கருப்பொருள்களை, அகநிலையில் அணுகும் வரைவிலக்கணங்கள் என்று வகைப்படுத்த முடியும்.   

அது என்ன புறநிலையில் அணுகும் வரைவிலக்கணம்? தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் கொம்யூனிஸ சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்” என்று வரையறுக்கிறார்.   

அதாவது, புறநிலையில் வைத்து ஆராயக்கூடிய விடயங்களான பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அம்சங்களை, ஒரு மக்கள் சமூகமானது, ஒரு தனித்த தேசமாக வரையறுக்க முடியும் என்கிறார்.   

மறுபுறத்தில், ஏனஸ்ட் றெனன் போன்ற அறிஞர்கள், தேசம் என்ற கருத்தியலை, அகநிலையில் அணுகும் வரைவிலக்கணங்களை முன்வைக்கிறார்கள். தேசம் என்ற கருத்தியலை வரையறுக்கும் ஏனஸ்ட் றெனன், “ஒரு தேசம் என்பது, ஒருவர் செய்த தியாகம், ஒருவர் மீண்டும் செய்வதற்குத் தயாராக இருக்கும் தியாகம் என்ற உணர்வின் பாலாக, கட்டமைந்த மாபெரும் ஒற்றுமையாகும். அது கடந்த காலத்தை எண்ணத்தில் கொள்கிறது; அது நிகழ்காலத்தில் தொடர்ந்து, பொது வாழ்க்கையைக் கொண்டமைவதற்கான தௌிவான வகையில் வௌிப்படுத்தப்படும் அங்கிகாரம், விருப்பு ஆகிய உறுதியான செயற்பாடுகளினூடாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. ஒரு தேசத்தின் இருப்பு என்பது, நித்திய பொதுவாக்கெடுப்பாகும்” என்கிறார்.   

இந்தப் புறநிலை, அகநிலை வரைவிலக்கணங்கள் பற்றி, மிக எளிமையாக எடுத்துரைப்பதானால், புறநிலை வரைவிலக்கணங்களானவை, குறித்த அம்சங்களை ஒரு மக்கள் கூட்டம் கொண்டிருக்கும் போது, அது ஒரு தனித்த தேசமாகும் என்கிறது.   

இங்கு அந்த மக்கள் கூட்டத்தின் மனநிலை, அதாவது அகநிலை விடயங்கள் கருத்திலெடுத்துக் கொள்ளப்படவில்லை. அதாவது அந்த மக்கள், அகநிலையில் தம்மை ஒரு தேசமாகக் கருதிக்கொள்கிறார்களா இல்லையா என்பதைப் புறநிலை அணுகுமுறை கருத்திலெடுப்பதில்லை.  

மாறாக, அகநிலை வரைவிலக்கணங்கள், புறநிலை விடயங்களான பொது மொழி, பொதுப் பிரதேசம் உள்ளிட்டவற்றைக் கருத்திற்கொள்ளாது, ஒரு மக்கள் கூட்டத்தின் மனநிலையையே கருத்திலெடுக்கின்றன. அதாவது, ஒரு குறித்த மக்கள் கூட்டமானது, தம்மை ஒரு தனித்த தேசமாக உணர்கிறார்களா? அந்த உணர்வை அவர்கள் தொடர்ந்தும் கொண்டிருக்கிறார்களா? என்பதை மட்டுமே அகநிலை அணுகுமுறையாளர்கள் கருத்திற்கொள்கிறார்கள்.   

நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக, ஒரே தேசமாக வாழ்ந்தீர்களா என்பது பற்றி அகநிலை அணுகுமுறையாளர்கள் அக்கறை கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், நிகழ்காலத்தில் ஒரு மக்கள் கூட்டம், தம்மை ஒரு தனித்த தேசமாக உணர்கிறதா என்பதுதான் முக்கியம்.   

இந்தப் புறநிலை, அகநிலை அணுகுமுறைகளில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இது பற்றித் தேசம், தேசியம் ஆகியவை பற்றி, முக்கிய ஆய்வு நூலொன்றை எழுதியவரான அந்தனி டி ஸ்மித் கருத்துரைக்கையில், “முற்றிலும் புறநிலை அம்சங்களான மொழி, மதம், பிரதேசம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, தேசத்தை வரைவிலக்கணம் செய்வதானது, எப்போதுமே சில தேசங்களை உள்ளடக்க முடியாத நிலையை உருவாக்கும். அதேவேளை, அகநிலை வரைவிலக்கணங்கள் பொதுவாக, மிகமிக அதிகளவிலானவற்றை உள்ளடக்குவதாக அமையும்” என்கிறார்.   

அதாவது, குறித்த புறநிலை அம்சங்கள் இருந்தால்தான் அது ஒரு தேசமாகக் கருதப்பட முடியும் என்று சொல்வதானது, அந்த அம்சங்களில் சில இல்லாத, ஆனால், தம்மை அகநிலையில் மிக உறுதியாக ஒரு தனித்த தேசமாகக் கருதிக் கொள்ளும் ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாகக் கருதுவதற்கு இடமளியாது போகலாம்.   

அதேவேளை, மறுபுறத்தில் அகநிலையை மட்டும் கருத்தில் கொண்டு, புறநிலை அம்சங்களைத் தவிர்த்தால், அது தேசம் என்ற கருத்தியலை அபத்தமானளவுக்கு மாற்றிவிடக்கூடும். ஏனெனில் எந்த அடிப்படைகளுமின்றி, தம்மைத் தேசம் என்று உணர்ந்துகொள்ளும் எல்லா மக்கள் சமூகத்தையும் தேசமாகக் கருதவேண்டிய அபத்த சூழல் உருவாகும்.   

ஆகவே இந்தப் புறநிலை, அகநிலை அணுகுமுறைகளுக்கு இடையேயான ஒரு சமநிலை அடையப்பெறவேண்டும்; அதுவே தேசம், தேசியம் ஆகிய கருப்பொருட்களுக்கான நடைமுறையில் பொருத்தமான வரைவிலக்கணத்தை வழங்குவதாக அமையும்.  

தேசம், அரசு, தேசிய - அரசு  

தேசம் என்பது அடிப்படையில் ஒரு மக்கள் சமூகமாகும். அரசு என்பது ஐந்து அடிப்படைக் கூறுகள் இணைந்து உருவாக்கியதொரு கருத்தியலாகும். குறித்ததோர் ஆட்புல எல்லை, குறித்த மக்கள் தொகை, இறைமை, அரசாங்கம், சர்வதேச அங்கிகாரம் ஆகிய ஐந்து அடிப்படைக் கூறுகளைக் கொண்டமைந்ததே ஓர் அரசாகும். 

ஆட்புல பிரதேசம் இல்லாத ஒரு மக்கள் கூட்டம், தமக்கான அரசாங்கத்தை உருவாக்கினாலும், ஆட்புல பிரதேசமொன்று இல்லாது, ஒருபோதும் அரசை ஸ்தாபிக்க முடியாது.   

அதேவேளை, தற்காலத்தில் சர்வதேச அங்கிகாரம் என்பதும் மிக முக்கியமானதாக அமைகிறது. இஸ்‌ரேலைச் சில நாடுகள், இன்று வரை ஒரு தனித்த அரசாக அங்கிகரிக்கவில்லை; அதேபோல, பலஸ்தீனத்தையும் சில நாடுகள், இன்றுவரை தனித்த அரசாக அங்கிகரிக்கவில்லை.   

நிற்க. ஓரரசுக்குள் ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம். உதாரணமாக, ஐக்கிய இராச்சியத்தை எடுத்துக்கொண்டால், ஐக்கிய இராச்சியம் என்பது, ஆங்கிலேய தேசம், வெல்ஷ் தேசம், வட அயர்லாந்து தேசம், ஸ்கொட்லாந்து தேசம் என்ற நான்கு தேசங்களைக் கொண்ட அரசாகும்.   

இதேவேளை, ஒரு தேசமானது பல்வேறு அரசுகளிலும் இடம்பெற முடியும். கொரிய தேசமானது வடகொரியா, தென்கொரியா ஆகிய தேசங்களில் வாழ்வதும், ரஷ்ய தேசம், ரஷ்யாவைத் தாண்டி முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த பல்வேறு அரசுகளிலும் வாழ்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

இதைவிட ஓர் அரசு, அந்த அரசுக்கேயுரிய ஒரு தனித்த தேசத்தை மட்டுமே கொண்டிருக்கவும் முடியும். இதைத்தான், ‘ஒரு நாடு, ஒரு தேசம்’ என்ற பரப்புரைச் சொற்றொடர், உணர்த்தி நிற்கிறது. இத்தகைய அரசுகள்தான் ‘தேசிய-அரசுகள்’ என்று விளிக்கப்படுகின்றன.   

தேசிய-அரசின் ஆரம்பமாக பிரெஞ்சுப் புரட்சி கருதப்படுகிறது. பிரெஞ்சுப் புரட்சி, மக்களாட்சி, குடியரசு, மதச்சார்பற்ற அரசு ஆகியவற்றை ஸ்தாபித்தனூடாக, ஐரோப்பிய அரசியல் மறுமலர்ச்சிக்கு மட்டுமல்லாது, நவீன தேசிய அரசுகளின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது.   

பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, பிராந்திய ரீதியில் வேறுபட்டிருந்த பிரான்ஸ் மக்களை ஒன்றுதிரட்டி, ஒரு தேசமாகக் கட்டமைக்கும் செயற்பாடுகள் பிரான்ஸ் அரசால் இரும்புக் கரம் கொண்டு முன்னெடுக்கப்பட்டன. 

மதச்சார்பற்ற அரசாக உருவான பிரான்ஸ் அரசு விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற மகுட வாக்கியங்களைக் கொண்டு, பிரான்ஸ் அரசில் வாழும் அனைத்து மக்களும் ‘பிரெஞ்ச்’ என்ற தேச அடையாளத்தைச் சுவீகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.   

இதில், முழு அரசுக்கும் ஒரே கல்விமுறை; ஒரே மொழி என்பவற்றினூடாக, ஒரே தேசமாக பிரான்ஸ் கட்டியெழுப்பப்பட்டது. பிரெஞ்ச் புரட்சியின் சமகாலத்தில்தான் ஐக்கிய அமெரிக்காவின் உருவாக்கத்தையும் காணலாம். அமெரிக்காவும் பிரெஞ்ச் புரட்சியின் தாக்கத்தின் விளைவாக, அதனூடாகப் பிறந்த அம்சங்கள் பலவற்றைத் தன்னகத்தே சுவீகரித்துக்கொண்டது. அதில் அமெரிக்கா என்ற அரசுக்குள் அமெரிக்கா என்ற ஒரே தேசத்தைக் கட்டமைத்துக் கொண்டதும் முக்கியமானது. 

அது என்ன ஓர் அரசுக்குள், ஒரே தேசத்தைக் கட்டியெழுப்புவது? மிக எளிமையான உதாரணமொன்றைப் பார்ப்போமானால், பிரான்ஸ் தேசத்தில் வாழ்கின்ற ஒருவரிடம், அவரது அடையாளத்தை வினவினால், அவர் தன்னைப் “பிரெஞ்ச்” என்று அடையாளப்படுத்திக் கொள்வார். அதேபோலவே அமெரிக்கரும் தன்னை “அமெரிக்கன்” என்று அடையாளப்படுத்திக்கொள்வார். ஆனால், ஐக்கிய இராச்சியத்தில் வாழ்கிற ஒருவரிடம், நீங்கள், அவரது அடையாளத்தை வினவினால், அவர் ஸ்கொட்லாந்து தேசத்தை சார்ந்தவராக இருந்தால், தன்னை “ஸ்கொட்டிஷ்” என்று அடையாளப்படுத்திக் கொள்வார்; அவர் வேல்ஸ் தேசத்தைச் சார்ந்தவராக இருந்தால், தன்னை “வெல்ஷ்” என்று அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடும்.   

ஆகவே பிரான்ஸ், அமெரிக்காவில் அரசும் தேசமும் ஒன்றாக இருப்பதையும் ஐக்கிய இராச்சியத்தில் அதுவேறு பட்டிருப்பதையும் காணலாம். அரசும் தேசமும் ஒன்றாக அமைவதையே நாம் ‘தேசியஅரசு’ என்கிறோம். அப்படியானால் இலங்கை, எத்தகைய அரசு, அது ஒரு ‘தேசிய அரசா? என்ற கேள்வி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


தேசமும் தேசியமும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.