2024 மே 03, வெள்ளிக்கிழமை

தேர்தல்களின் போது மக்கள் ஏன் ஏமாறுகிறார்கள்?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 ஜூலை 01 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருகிறது, மற்றொரு தேர்தல். ஆனால், எமக்குத் தெரிந்த காலத்தில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள்.   ஒவ்வொரு தேர்தலிலும் சில கட்சிகள், முக்கிய சில வாக்குறுதிகளை முன்வைத்து, தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனவே தவிர, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆக்கபூர்வமான திட்டமொன்றை முன்வைத்து, எந்தவொரு கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றியதில்லை.  

சில சந்தர்ப்பங்களில்,சில கட்சிகள் அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றிய போதிலும், அதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.   

அதாவது, எந்தவொரு கட்சியும் ஆட்சிக்கு வந்து, எதையும் செய்யவில்லை என்பதல்ல. எந்தக் கட்சியும் பதவிக்கு வந்து, எதையாவது செய்துள்ளமை உண்மை தான். ஆனால், இலங்கையைப் பொருளாதார ரீதியில், ஒரு பலம் வாய்ந்த நாடாக மாற்றி அமைக்க, எந்தவோர் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. எந்தவொரு கட்சியிடமும் அதற்கான திட்டமொன்றும் இருக்கவும் இல்லை.  

சுதந்திரத்துக்குப் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்காவது மாற்றி அமைத்தவர் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவே ஆவார். 1860களில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டத் துறையே, நாட்டின் பிரதான வருமான வழியாக, அதுவரை இருந்தது. தாராள பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி, சுதந்திர வர்த்தக வலயங்களை ஆரம்பித்து, ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டங்களை மாற்றியதன் மூலம், பொருளாதாரத்தை அவர் பன்முகப்படுத்தினார்.  

இச்சட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட  தளர்வின் காரணமாக, இலங்கை மக்களுக்கு வெளிநாட்டுத் தொழில்களுக்கான வாயிலும் திறக்கப்பட்டது. அத்தோடு, துரித மகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் சில பகுதிகளில் அவர், விவசாய அபிவிருத்திக்கும் வித்திட்டார்.  

எனினும், ஒரு நாடு சொந்தக் காலில் நிற்பதாக இருந்தால், அந்த நாட்டில் விவசாயம், கைத்தொழில் ஆகிய துறைகளின்  முன்னேற்றம், விரிவடைந்த வண்ணமே இருக்க வேண்டும். அத்துடன், உற்பத்தி முறைகளும் நவீனமயமாகிய வண்ணம் இருக்க வேண்டும். அதற்கான திட்டம் எதுவும் ஜே.ஆர். ஜெயவர்தனவிடமும் இருக்கவில்லை.  

எனவே, நாட்டின் கடன் சுமை, அவரது காலத்துக்குப் பின்னரும் கூட, வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. 1980களில் இருந்தே ஒவ்வோர் அரசாங்கமும், முன்னர் பெற்ற கடனின் வட்டியைச் செலுத்துவதற்காக, வட்டிக்குக் கடன் பெற்று வருகிறது.   

வேலைவாய்ப்பின்மை விரிவடைந்தே வந்துள்ளது. பெருந்தோட்டத்துறையிலும் வரண்ட பிரதேச விவசாயிகள் மத்தியிலுமான வறுமை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. அல்லது, குறையாதிருந்து வந்துள்ளது.  

சுதந்திரத்துக்குப் பின்னரும், ஆங்கிலேயர் காலத்துக் கல்வி முறையில், பாரிய மாற்றம் ஏற்படவில்லை. அதாவது, பொருளாதார விரிவாக்கமோ, முன்னேற்றமோ போதியளவில் இடம்பெறாதது மட்டுமல்லாது, அந்த விவரிவாக்கத்துக்குப் பொருத்தமான வகையில், இலங்கையின் கல்வித் திட்டத்தில், மாற்றம் ஏற்படவில்லை. மற்றுமொரு வகையில் கூறுவதாக இருந்தால், பொருளா தார அபிவிருத்தியைத் துரிதப்படுத்தக் கூடிய கல்வி முறையொன்றை, எந்தவோர் அரசாங்கமும் அறிமுகப்படுத்தவில்லை.  

இந்த நிலைமையை மாற்றி அமைக்கவே, ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கு, மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் மக்களை, அதிலிருந்து திசை திருப்பியே வந்துள்ளன. எனவே, மக்களும் தமது அந்தக் கடமையைச் செய்யவில்லை. இறுதியில், தகுதியற்றோர் நாடாளுமன்றத்துக்குத் தொடர்ந்தும் தெரிவாகியுள்ளனர்.  

இரண்டு வாரங்களுக்கு முன்னர், இந்த விடயத்தைப் பற்றி, இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். எம்.பிக்களான சிலர், அவர்கள் தெரிவு செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளில், ஒரு முறையாவது நாடாளுமன்றத்தில் உரையாற்றியதில்லை என்றும் ஓய்வு பெறும் வரை, நாடாளுமன்றத்தில் ஒரு முறையாவது உரையாற்றாதவர்களும் இருந்தனர் என்றும் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர குறிப்பிட்டிருந்ததை நாம், அப்போது சுட்டிக்காட்டி இருந்தோம்.   

நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களில் 94 உறுப்பினர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையிலாவது சித்தியடையாதவர்கள் எனப் பேராதனைப் பல்கலைகழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் எம்.ஓ.ஏ.டி சொய்சா குறிப்பிட்டதையும் அந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டினோம்.  

புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள், மக்களது பிரச்சினைகளை அறிந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பாடுபடும் செயற்பாட்டாளர்கள் போன்றோருக்குப் பதிலாக, அரசியலை வருமான வழியாக்கிக் கொண்டவர்களே அரசியலில் அதிகம் காணப்படுகின்றனர்.   

இதற்குப் புறம்பாக, மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொணருவதற்குப் பதிலாக, தமது தொழிலை வருமானம் தேடும் வழியாக மட்டும் கருதும் ஊடகங்களும் சில சட்டப் பிரச்சினைகளும் மக்களின் அடிமை மனப்பான்மையும் தேர்தல்களின் போது தவறான தெரிவுகளை மக்கள் மேற்கொள்வதற்குக் காரணமாகின்றன.  

அரசியலை வருமான வழியாக்கிக் கொண்டவர்கள், மக்களின் பிரச்சினைகளைப் பற்றித் தேர்தல்களின் போதோ, நாடாளுமன்றத்திலோ பேசத் தயங்குகிறார்கள். பிரச்சினைகளைப் பற்றிப் பேசினாலும் அவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அவற்றின் மூலம் அரசியல் இலாபம் அடைவதே அவர்களது நோக்கமாகும். எனவே, அவர்கள் இனப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதாக இருந்தால், இனவாதத்தைத் தூண்டி, அரசியல் ஆதாயமடையவே முயல்கிறார்கள்.  

தமது ஆட்சிக் காலத்தின்போது, தாம் நாட்டை அபிவிருத்தி செய்ததாக, சில அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்த போதிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட வரண்ட பிரதேச மக்கள், குடிநீருக்கும் விவசாயத்துக்கான நீர்ப்பாசனத்துக்கும் அல்லற்படுகிறார்கள்.  

 சிறியதோர் ஆற்றில், இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல, சிறியதோர் பாலம் இல்லாமல், மக்கள் 10, 20 கிலோமீற்றர் தூரத்தைச் சுற்றி வந்து, அக்கரையை அடைய வேண்டிய அவலநிலை உள்ள, பல பிரதேசங்கள் நாட்டில் உள்ளன.  

ஆயிரக்கணக்கான பாடசாலைகளுக்கு குடிநீர் வசதியோ, மின்சார வசதியோ இல்லை. வாகனமொன்று செல்லக்கூடிய பாதையில்லாத ஆயிரக்கணக்கான கிராமங்கள் நாட்டில் உள்ளன.   

வசதியில்லாத காரணத்தால் பாடசாலைக் கல்வியை இடைநடுவே கைவிடும் இலட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளைக் கிராம மட்டத்திலோ, தேசிய மட்டத்திலோ தீர்ப்பதற்கு எந்தக் கட்சியிடமாவது, நம்பகமானதொரு திட்டம் (வாக்குறுதிப் பட்டியல்) இருக்கிறதா?  

வடக்கு, கிழக்கிலே ஆயிரக் கணக்கான விதவைகள் இருக்கிறார்கள். முன்னாள் போராளிகள், பல வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள், முறையான மீள்குடியேற்றத் திட்டமின்றி அவதியுறுகிறார்கள்.   

போர்க் காலத்தில், மக்களிடம் இருந்து படையினர் கைப்பற்றிய காணிகளில், ஒரு பகுதி இன்னமும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை. அதேபோல், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடம் இருந்து, புலிகள் கைப்பற்றிக் கொண்ட காணிகள் பற்றிய பிரச்சினையும் இன்னமும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இவற்றைத் தீர்ப்பது ஒரு புறமிருக்க, அவற்றைப் பற்றித் தமது அரசியல் மேடைகளில் பேசும், தேசிய கட்சிகள் எவையாவது உண்டா?  

வருடம் தோறும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேசங்கள் இருக்கின்றன; வரட்சியால் பாதிக்கப்படும் வலயங்கள் இருக்கின்றன. மண்சரிவால் உயிராபத்தை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், நாட்டின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள்.   

இவை, மனிதனால் தீர்க்க முடியாத, ஏதோ இயற்கைப் பிரச்சினைகளாக, அரசியல் கட்சிகளால் கைவிடப்பட்டு இருக்கின்றன. எனவே, எந்த வகையிலும் அரசியல் மேடைகளில் பேசப்படாத பிரச்சினைகளாகவே இவை இருக்கின்றன.  

ஆனால், இவை தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் அல்ல. உதாரணமாக, வெள்ளம், வரட்சி ஆகியவற்றுக்குத் தீர்வாக, வரண்ட பிரதேசங்களில் விவசாயத்துக்குத் தேவையான நீரைப் பெறும் வழிவகையாக, ஈர வலயத்தில் மழைக் காலத்தில் ஆறுகளில் பெருகும் நீரை, சுரங்க வழிகளின் மூலம், வரண்ட பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லும் யோசனையை, கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் டொக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க, 1953 ஆம் ஆண்டில் முன்வைத்தார்.  

இந்த யோசனையை, மக்கள் விடுதலை முன்னணியும் தமது புதிய உறுப்பினர்களுக்குப் போதிக்கும் வகுப்புகளில் குறிப்பிடுகிறது. அந்த யோசனை, நடைமுறைச் சாத்தியமற்றது என, எந்தவொரு நிபுணரும் இதுவரை கூறவில்லை. ஆனால், எந்தவோர் அரசாங்கமும் இந்த யோசனையை அமுலாக்க, இதுவரை முன்வரவில்லை. இவை எந்தவொரு தேர்தல் காலத்திலும், எந்தவொரு பிரதான கட்சியாலும் பேசப்படும் விடயங்கள் அல்ல.  

இன்று அரசியல் மேடைகளில், ஏனைய கட்சிகளையும் அவற்றின் வேட்பாளர்களையும் தாழ்த்தியும் இகழ்ந்தும் பேசுவதை விட, உருப்படியான சமூக, பொருளாதார, அரசியல் விடயங்கள் பேசப்படுவதில்லை. சஜித் பிரேமதாஸ கூட்டமொன்றில் பேசும் போது, தமது சின்னமான தொலைபேசியைத் தூக்கிக் காட்டி, “கடிகாரத்துக்கு வாக்களியுங்கள்” எனத் தவறுதலாகக் கூறிவிட்டு, உடனே தமது பிழையைத் திருத்திக் கொண்டார். இதை, ஏதோ ஒரு பாரிய பிரச்சினையைப் போல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் தமது கூட்டங்களில் சுட்டிக் காட்டுகிறார்கள்.  

தேர்தலுக்குப் பின்னர், தாம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ‘சிறிகொத்தா’வைக் கைப்பற்றுவதாக, ஐக்கிய மக்கள் சக்தியினர் கூறித் திரிகின்றனர். அதனால், மக்கள் என்ன நன்மையை அடையப் போகிறார்கள் என்பதை, அவர்கள் கூறுவதில்லை.  

தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவோம் என, பொதுஜன பெரமுனவினர் கூறித் திரிகின்றனர். அதனால், அரசமைப்பைத் திருத்தப் போவதைத் தவிர, மக்களுக்கு என்ன நன்மையைச் செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் கூறுவதில்லை.  

தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எப்போதும் போல், சுயநிர்ணய உரிமையைப் பற்றியும் அரசியல் கைதிகளைப் பற்றியும் படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகளைப் பற்றியும் பேசுகிறார்கள்; அதில் தவறேதும் இல்லை.   

ஆனால், வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திக்கான எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் ஒரு போதும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. எப்போதோ, சமஷ்டி ஆட்சி முறை உருவானால், அப்போது வடக்கிலும் கிழக்கிலும் பொருளாதார அபிவிருத்தியைப் பற்றிச் சிந்திக்கலாம் என்பதைப் போல் தான், அக்கட்சிகளின் தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள்.  

ஊடகங்களும் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில், அரசியல்வாதிகளின் வீராப்புப் பேச்சுகளையும் ஏனைய கட்சிகளுக்கு எதிரான வசை பாடல்களையும்தான் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.   

எந்தவொரு கட்சியிடமும் நாட்டைக் கட்டியெழுப்ப, எதுவிதமான திட்டங்களும் இல்லை என்பதை, அம்பலப்படுத்துவதிலோ, மக்கள் உண்மையிலேயே அரசியல் மூலம், எதை அடைய வேண்டும் என்பதை, அவர்களுக்கு உணர்த்துவதிலோ அவை கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.  

இதற்குப் பிரதான காரணம், ஒரு சில ஊடகங்களைத் தவிர, நாட்டிலுள்ள சகல ஊடகங்களும் அரசியல் கட்சிகளின் கையாள்களாக மாறியிருப்பதே ஆகும். இன்றைய நிலையை எடுத்துக் கொண்டால், ஒரு சிலவற்றைத் தவிர, சகல சிங்கள, ஆங்கில ஊடகங்களும் பொதுஜன பெரமுனவின் ஊடகங்களாகவே செயற்பட்டு வருகின்றன.  

இந்தத் தேர்தல் காலத்தில், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைப் பற்றி, விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவும் என, ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் இரண்டு, சாட்சி விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன. பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் பெரும்பாலான ஊடகங்கள், இந்தச் சாட்சியங்களில், பொதுஜன பெரமுனவுக்குச் சாதகமானவற்றை மட்டும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.  

இவ்வாறு பல தசாப்தங்களாக, தகுதியற்றவர்கள் அரசியலில் முக்கிய இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு இருப்பதாலும் அரசியல் மேடைகள் பொதுமக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத, வெறும் அவதூறு மண்டபங்களாக மாறியிருப்பதாலும் ஊடகங்களும் மக்களின் பிரச்சினைகளை மறந்து செயற்படுவதாலும் அரசியலானது தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பிரதான பொறிமுறை என்ற எண்ணம், மக்கள் மனதில் தோன்றுவதில்லை.  

மாறாகத் தாம் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட அரசியல்வாதிகள், எந்த ஊழலைச் செய்தாலும் எந்தப் படுகொலையைச் செய்தாலும் அவ்வாறான குற்றச்சாட்டுகளை, கண்மூடித்தனமாக நிராகரித்தும் அவற்றை நியாயப்படுத்தியும் தம்தலைவர்களை, மாவீரர்களாகவும் தேசபக்தர்களாகவும் மதிக்கும் ஒருவித அடிமை மனப்பான்மை, பெரும்பாலான மக்களை ஆட்கொண்டுள்ளது.  

எனவே சட்டவாக்கம், கொள்கை வகுத்தல், நிதிக் கண்காணிப்பு, மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தல் போன்ற சகல பொறுப்புகளிலும் எம்.பிக்கள் அளிக்கும் பங்களிப்பின் படி, Manthri.lk இணையத்தளத்தின் வகைப்படுத்தலின் பிரகாரம், முதலிடத்தை வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கு, பொது மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்று சத வீத வாக்குகளையே வழங்கினர்.   

எனினும், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, மேர்வின் சில்வாவுக்கு 150,000 வாக்குகளை, அம்மக்கள் வழங்கினர். அரசியலே தெரியாத ஒரு நடிகைக்கு, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியதை விடக்கூடுதலாக வாக்குகளை வழங்கினர்.   

கொலைக் குற்றச்சாட்டின் பேரில், சிறையில் இருந்து வேட்பு மனுத் தாக்கல் செய்த பிரேமலால் ஜயசேகரவுக்கு, 2015ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தில், ஏனைய வேட்பாளர்கள் பெற்றதை விட வாக்குகளை வழங்கினர்.  

மக்கள் மாறாவிட்டால் நிலைமை மாறாது. அதற்காக, மக்களை அறிவூட்டும் சூழல் உருவாகும் சாத்தியக்கூறுகளும் தென்படுவதில்லை. மேலும், பல தசாப்தங்களுக்கு நிலைமை இவ்வாறே தான் இருக்கும் போலும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .