2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் விடயத்தில் குற்றம் காணல்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 ஜூலை 17 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரியளவில் வன்செயல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அந்த நிலைமையைத் தனிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி, கூட்டாகப் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் மீண்டும் தத்தமது பதவிகளை ஏற்பது பற்றிய சர்ச்சையொன்று தற்போது கிளப்பப்பட்டுள்ளது. 

பதவிகளை இராஜினாமாச் செய்தவர்கள், மீண்டும் பதவியேற்க முடிவு செய்ததாக, அவர்களின் கூட்டமொன்றை அடுத்து, முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்ததன் பின்னரே, இந்தச் சர்ச்சை உருவாகியிருக்கிறது.

அவ்வாறு அவர்கள், மீண்டும் பதவிகளை ஏற்றால், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரரும் டிலான் பெரேராவும் கடந்த வாரமே கூறியிருந்தனர். 

இவ்வாறு ரத்தன தேரர் மிரட்டுவதை விளங்கிக் கொள்ளலாம். பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று குற்றஞ்சாட்டி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர், கடந்த மே மாதம், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்திருந்தனர். 

இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநராகவிருந்த எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநராகவிருந்த அஸாத் சாலி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் ஆகியோர், பயங்கரவாதத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி, அவர்களை அப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி கண்டி, தலதா மாளிகை வளவில் ரத்தன தேரர் உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்திருந்தார். 

இந்த உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே, இரண்டு ஆளுநர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் ஜூன் மூன்றாம் திகதி, பதவிகளை இராஜினாமாச் செய்தனர். முஸ்லிம் சமூகம் மீதான ஒரு மோசமான அழுத்தம், அதன் மூலம் தளர்த்தப்பட்டது.

எந்தவித ஆதாரத்தையும் முன்வைக்காமலேயே ரத்தன தேரர், இந்த மூவரும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். 

எனவே தான் அவர், ரிஷாட் பதியுதீன் மீண்டும் பதவியேற்றால், மீண்டும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாக, இப்போதும் கூறுகிறார். 

ஆனால், விந்தை என்னவென்றால், இரண்டு ஆளுநர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட, மிக மோசமான குற்றச்சாட்டுகள் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு இருந்தும் இரண்டு ஆளுநர்கள் பதவி துறந்த உடனேயே, (ரிஷாட் இராஜினாமாச் செய்வதற்கு முன்னரே) ரத்தன தேரர் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருந்தார்.  

ரிஷாட்டுக்கும் இரண்டு ஆளுநர்களுக்கும் எதிராகக் குற்றஞ்சுமத்தியவர்கள், ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் கூச்சலிட்டார்களேயல்லாது, பொலிஸிலோ, இரகசியப் பொலிஸிலோ, பயங்கரவாத் தடுப்புப் பிரிவிலோ அவற்றைப் பற்றி முறைப்பாடு செய்யவில்லை. ஏனெனில், அக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, அவர்களிடம் ஆதாரம் எதுவும் இருக்கவில்லை.

அதேவேளை, ஒரு குறிப்பிட்ட கட்சியை (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச்) சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களுமே உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம் விரோத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஓரங்கமாகவே, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, இவை வெறும் இனவாதப் பிரசாரம் என்பது, தெளிவாக இருந்தது. 

ரிஷாட் குற்றமற்றவர் என, இப்போது பொலிஸ் தெளிவாகக் கூறியிருக்கிறது. இந்தநிலையில், நீண்ட காலமாக இனவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த டிலான் பெரேராவும் ரிஷாட்டுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாகக் கூறுவதானது, அவர் எந்தளவுக்குத் தரங்குறைந்து போயுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. 

பதவிகளை இராஜினாமாச் செய்தவர்கள், மீண்டும் பதவியேற்க முடிவு செய்துள்ளதாக அமீர் அலி கூறியபோதிலும், இராஜினாமாச் செய்த அனைவரும், அதனை உறுதிப்படுத்தவில்லை. முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எச்.எம். ஹரீஸ், தாம் மீண்டும் பதவியேற்கப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார். கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை, முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகள் தீராத நிலையில், தாம் மீண்டும் பதவியேற்கப் போவதில்லை என அவர் கூறியிருக்கிறார். 

அதேவேளை, பதவி துறந்தவர்கள் மீண்டும் பதவி ஏற்பதற்கான இறுதி முடிவை எடுக்கவில்லை என, முன்னாள் பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் தெரிவித்ததாக மற்றொரு செய்தி கூறியிருந்தது. 

இது, முஸ்லிம்களைக் குழப்பியடிக்கும் செயலாகவே தெரிகிறது. ஒருவர், முடிவு செய்ததாகக் கூறுகிறார்; மற்றவர், இறுதி முடிவு எடுக்கவில்லை என்கிறார். 

தாம் எதை செய்ய விரும்புகிறாரோ, அதைப் பொதுவாக எல்லோரினதும் முடிவாகக் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. 

மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக, இராஜினாமாச் செய்யவேண்டும் என நெருக்குவாரம் ஏற்பட்ட போது, சகல முஸ்லிம் அமைச்சர்களும் ஏன் இராஜினாமாச் செய்ய வேண்டும் என, ஆரம்பத்தில் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்  கேள்வி எழுப்பினர். பௌத்த மக்களின் ஆன்மிகத் தலைவர்களாகக் கருதப்படும் நான்கு பௌத்த நிக்காயாக்களின் மகா நாயக்க தேரர்கள் குற்றம் சுமத்தப்படாதவர்கள், மீண்டும் பதவியேற்க வேண்டும் எனக் கூட்டறிக்கையொன்றின் மூலம் கேட்டுக் கொண்டனர். 

குற்றஞ்சாட்டப்பட்டவரைப் (ரிஷாட்டை) பாதுகாக்கவே சகல முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமாச் செய்தனர் எனப் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் சிலர் கூறினர். 

எல்லோரும் இராஜினாமாச் செய்தமை, ஒரு நாடகம் எனவும் சிலர் கூறினர். இன்னமும் கூறி வருகின்றனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் முடிவுறாத நிலையில், பதவி துறந்தவர்கள் மீண்டும் பதவியேற்கப் போகிறார்கள் என, இப்போது கூறுகின்றனர். எனவே, முஸ்லிம்கள் எதைச் செய்தாலும், அதில் குற்றம் காண்பதே, அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது.

இதன் மூலம், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி, எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் இலாபம் அடைவதையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மஹிந்த அணியினருக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. குறிப்பாக, முஸ்லிம்கள் தமக்கு வாக்களிக்காதமையினாலேயே தாம் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததாக மஹிந்த ராஜபக்‌ஷ பலமுறை கூறியிருக்கிறார். 

மூன்றாண்டுகளுக்குப் பின்னர், கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, சிங்கள மக்கள் பெருமளவாக ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகியிருந்த நிலையிலும், சிறுபான்மை மக்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்குக் கிடைக்கவில்லை. எனினும், அவர்கள் அத்தேர்தல்களில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். 

எனவே, தொடர்ந்தும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை நம்பியிராது, சிங்கள - பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டும், எதிர்வரும் தேர்தல்களை வெற்றிபெறலாம் என, பொதுஜன பெரமுனவினர் நினைக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை, அது அவ்வளவு இலேசான விடயமும் அல்ல. 

எனினும், இந்த நிலையில் இனவாதத்தைத் தூண்டி, ஐ.தே.கவை ஆதரிக்கும் சிங்கள வாக்காளர்களைக் கவர்ந்திழுப்தே அவர்களது நோக்கமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, அவர்கள் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பதவி துறந்ததையும் எதிர்த்தார்கள். தற்போது அவர்கள், மீண்டும் பதவி ஏற்றாலும் அதையும் எதிர்க்கும் நிலையில் இருக்கிறார்கள்.

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் இருந்தால் கிராக்கி அதிகரிக்கும்

ரத்தன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதத்தை அடுத்து, நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இதோ வெடித்துவிட்டன; அதோ வெடித்துவிட்டன என்றதொரு நிலையிலேயே ஜூன் மூன்றாம் திகதி, முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்தனர்.   

“முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராகச் சுமத்தப்பட்டு இருந்த, பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் விடயத்திலான விசாரணைகள், எவ்விதத் தலையீடும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே, நாம் எல்லோருமாகப் பதவி துறக்கிறோம்” என அப்போது அவர்கள் கூறினர். ஒரு மாத காலத்துக்குள், விசாரணைகளை முடித்துவிடுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதன் பின்னர், அரசாங்கத்தின் ஆலோசனையின்படி, பதில் பொலிஸ்மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

குற்றம் சுமத்துவோர், அந்தக் குழுவினரிடம் முறைப்பாடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர், அக்குழுவிடம் முறைப்பாடுகளையும் முன்வைத்தனர். ஆனால், அவற்றில் மிகச் சில முறைப்பாடுகளே பயங்கரவாதம் சம்பந்தமானவையாக இருந்தன. ஏனையவை, ஊழல், மோசடிகள் தொடர்பானவையாகவே இருந்தன.

அதேவேளை, 4/21 தாக்குதல்களைப் பற்றி, விசாரணை செய்வதற்காகவென நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அதிலும் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைக்கப்பட்டு இருந்தார். 

ரிஷாட் தொடர்பாக விசாரணை செய்தததாகவும் அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கையொன்றை அனுப்பியிருந்ததாகவும் தெரிவுக்குழுவின் தலைவர் சாட்சியமளிக்கச் சென்ற போது தெரிவித்திருந்தார். 

இது முறையான செயலா, என்ற கேள்வி எழுகின்ற போதிலும், ரிஷாட் அந்த விடயத்தில் குற்றமற்றவர் என்று, பொலிஸார் முடிவு செய்திருப்பதாக அதன் மூலம் தெரிய வந்தது. 

இரகசியப் பொலிஸாரும் இதேபோல் ரிஷாட் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கின்னியா மத்திய கல்லூரியல் புதிய கட்டடம் ஒன்றைத் திறந்து வைக்கும் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார். 

அதேபோல், இப்போது முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோருக்கு எதிராகவும் எவரும் கூச்சலிடுவதாகத் தெரியவில்லை. 

இந்த நிலையில், முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவி ஏற்கலாம் எனச் சிலர் கூறலாம். 

ஆனால், பேரினவாத சக்திகள் அதனை ஏற்கப் போவதில்லை. சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிவுறாத நிலையில், எவ்வாறு அவர்கள் மீண்டும் பதவி ஏற்க முடியும் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஷெஹான் சேமசிங்க, கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போது, கேள்வி எழுப்பியிருந்தார். 

சில வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவுக்குழு விசாரணை இன்னமும் முடியவில்லை என்றும் அவர் வாதிட்டு இருந்தார். இவை முடிவுற்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் இவர்கள் விடப்போவதில்லை. 

சிங்களப் பெண்களுக்கு கருத்தடை ஏற்படும் வகையில் சிசேரியன் சத்திர சிகிச்சைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், பயங்கரவாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டதாக ஆதாரம் இல்லை என, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்த போது, ரத்தன தேரர் இரகசியப் பொலிஸார் மீது சீறிப் பாய்ந்தார். 

அதற்கு முன்னர், ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய, சுகாதார அமைச்சு மருத்துவர் குழுவொன்றை நியமித்த போது, அதையும் பேரினவாதிகள் எதிர்த்தனர். பின்னர், நீதிமன்றம் அதைக் கலைத்துவிட்டது. டொக்டர் ஷாபிக்கு எதிரான கருத்தடை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, ஆதாரங்கள் இல்லை என இரகசியப் பொலிஸார் கூறிய போது, அதையும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

ரிஷாட் பயங்கரவாதச் செயல்களோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு, ஆதாரம் இல்லை எனப் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவுக்குழுவுக்கு தெரிவித்த போது, அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறினர். 

2003ஆம் ஆண்டு சோம தேரர் ரஷ்யாவில் உயிரிழந்த போது, அது சதி என்றார்கள். ரஷ்ய மருத்துவர்களின் அறிக்கையை ஏற்க முடியாது என்றனர். இலங்கை மருத்துவர்கள் விசாரணை செய்து, இது இயற்கை மரணம் என்று கூறியபோது, அந்த அறிக்கையையும் ஏற்க முடியாது என்றனர். இலங்கை நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கிய போது, அதனையும் ஏற்க முடியாது என்றனர். 

முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை  அறிக்கைகளையும் அவர்கள் தொடர்ந்து நிராகரிப்பார்கள். எனவே, அவர்களைச் சமாதானப்படுத்தி, முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவி ஏற்க முடியாது. 

முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவி ஏற்றால், அவர்களைத் தம் பக்கம் ஈர்த்துக் கொள்வது கஷ்டம் எனப் பொதுஜன பெரமுனவினர் நினைக்கலாம். அவர்கள் பதவி ஏற்காமலிருந்தால் அவர்களுக்கு ஓரளவு கிராக்கி ஏற்படலாம். அது சிலவேளை முஸ்லிம் விரோத பிரசாரத்தையும் தளர்த்தலாம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X