2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

மரண தண்டனை; வெற்றுக் கோசம்

கே. சஞ்சயன்   / 2018 ஜூலை 29 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘42 ஆண்டுகளுக்குப் பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றும் நடைமுறையைக் கடைப்பிடிக்கப் போகிறது’ இது தான், சர்வதேச ஊடகங்களில் அண்மையில் இலங்கை குறித்து அதிகளவில் வெளியாகிய செய்தியாகும்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்தப் போரில் இடம்பெற்ற மீறல்கள், போர்க்குற்றங்கள், குறித்தோ, அதற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நகர்வுகளில் ஏற்பட்டுள்ள தொய்வுகள் குறித்தோ, இப்போது பேசப்படுவதில்லை.

கடைசியாக 1976ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர், இலங்கையில் எவரும் தூக்கிலிடப்படவில்லை. ஆனாலும், சட்டப் புத்தகத்தின்படி, நீதிபதிகள் மரண தண்டனையைத் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். மரண தண்டனை விதிக்கப்பட்ட 1200 வரையான கைதிகள், இப்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், தூக்கிலிடப்படப் போவதில்லை என்பதை, இவர்கள் அறிவார்கள். அந்தத் துணிச்சல், சிறைக்குள் இருந்து கொண்டே குற்றங்களை மீண்டும் செய்யும் துணிச்சலைப் பலருக்குக் கொடுத்திருக்கிறது. இதன் பின்னர் தான், மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவில் கையெழுத்திடப் போவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பும் கடும் விமர்சனங்களும் வந்து கொண்டிருந்தன. எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், யார் எதைக் கூறினாலும் எத்தகைய எச்சரிக்கைகளை விடுத்தாலும், தனது முடிவில் மாற்றமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி. 

இலங்கையில் கடந்த 42 ஆண்டுகளாக, மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், இந்த 42 ஆண்டுகளில் தான், கூடுதலான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பது ஆச்சரியமான விடயமல்ல. இலங்கையில், சட்ட ரீதியாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளை விட, சட்டத்துக்குப் புறம்பாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளே அதிகம். 1971 மற்றும் 1987 - 89 காலப்பகுதிகளில், தென்னிலங்கையில், வீதிகளில் மின் கம்பங்களில் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டும், வீதிகளில் டயர் போட்டு எரிக்கப்பட்டும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவங்கள் ஏராளம். அதைவிட, காதுகளுக்குள் பேனாவை அடித்துக் கொல்லப்பட்ட கொடூரமான மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டட வரலாறுகள் உள்ளன. 

ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சிகளின் போது, அரச ஆதரவாளர்களை ஜே.வி.பியினர் ஏனையோரையும் சட்டத்துக்குப் புறம்பாகக் கொலை செய்வது வழக்கமாகவே மாறியிருந்தது. 

அதுபோலவே,  வடக்கு, கிழக்கிலும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. துரோகிகளுக்கு மரண தண்டனை என்று தமிழ் இயக்கங்கள், பலருக்கு மரண தண்டனையை அளித்தன. மின் கம்பங்களில் கட்டிச் சுடப்பட்டுக் கிடந்த சடலங்களுக்கு அருகே, துரோகிகளுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு என்று எழுதப்பட்ட வாசகங்கள் அல்லது சுவரொட்டிகள் கிடக்கும்.                                            

வடக்கு, கிழக்கில், 1970களின் நடுப்பகுதியில் தொடங்கிய இந்த மரண தண்டனைகள், 2009 வரை தொடர்ந்தன. இலங்கைப் படையினருக்குத் தகவல்களை அளித்தவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், இந்தியப் படையினருடன் சேர்ந்த இயங்கியவர்கள் என்று பெருமளவானோர், மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதுபோல விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதற்காக, மரண தண்டனையைப் பெற்றவர்களும் பலர் உள்ளனர். 

விடுதலைப் புலிகளின் நிழல் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ், நீதிமன்றங்களும் இயங்கின. இவற்றினூடாக, சிலருக்கு  விதிக்கப்பட்ட மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களில் பலர், திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதான குற்றச்சாட்டுகளும் ஏராளம் உள்ளன. ஆக, 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையில் மரண தண்டனை இப்போது தான் முதன் முறையாக நிறைவேற்றப்படவுள்ளது போன்ற தோற்றப்பாடு, சர்வதேச அரங்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோற்றப்பாட்டுக்குள், 1976ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்து பல்லாயிரக்கணக்கான - சட்டத்துக்குப் புறம்பான மரண தண்டனைகளின் வரலாறுகள் மறைக்கப்பட்டுவிட்டன. அல்லது மறக்கப்பட்டு விட்டன.

போரையும், ஆயுதக் கிளர்ச்சிகளையும் காரணம் காட்டி, மரண தண்டனை விதிக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் அப்பாவிகள் தான். எந்த நீதி விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல், எழுந்தமானமானக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இத்தகைய மரண தண்டனைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டன.

மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற சர்வதேசம், போர், ஆயுதக் கிளர்ச்சி, பயங்கரவாதம் என்ற அடைமொழிகளுக்குள் நிகழ்த்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான மரண தண்டனைகளைக் கண்டுகொள்ளவுமில்லை. அவ்வாறு வழங்கப்பட்ட தண்டனைகளுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்கப்படுவதை இன்னமும் உறுதி செய்யவுமில்லை.

நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட மரண தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற சர்வதேசம், சட்டத்துக்குப் புறம்பான வகையில் நிகழ்த்தப்பட்ட மரண தண்டனைகளுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு என்ன செய்திருக்கிறது என்ற கேள்வியும் உள்ளது.

உதாரணத்துக்கு, இலங்கையில் நடந்த போரில் இடம்பெற்ற மீறல்களைக் காரணம் காட்டி, இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இடைநிறுத்தியிருந்தது ஐரோப்பிய ஒன்றியம்.
2015இல், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் அந்தச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டது. அந்தச் சலுகைக்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று, மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதாகும். அதற்கு இலங்கை இணங்கியிருந்தது. 

இதுபற்றிய சர்வதேசப் பிரகடனங்களிலும் கைச்சாத்திட்டது. இப்போது அதையெல்லாம் மறந்து விட்டு, மரண தண்டனையை நிறைவேற்றப் போகிறோம் என்று அரசாங்கம் அறிவித்ததும், அவ்வாறு செய்தால் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடுமென்று எச்சரித்திருக்கிறது, ஐரோப்பிய ஒன்றியம்.

எனினும், இதுபோன்ற சலுகைகள், உதவிகளை வைத்துக்கொண்டு, போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை விட, அத்தகைய குற்றங்களைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதும் முக்கியமானதே. அவர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மரண தண்டனையை நிறைவேற்றினால், இலங்கையுடனான புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் நிறுத்தப்படுமென்றும், ஐ.நா அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் அரசாங்கத்துக்கு முக்கியம்.

அத்தகைய புலனாய்வுத் தகவல் பகிர்வு நிறுத்தப்பட்டால், இலங்கை அரசாங்கத்தின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புகள் திண்டாடுவதற்கு நேரிடும். இதன் மூலம் திட்டமிட்ட குற்றங்கள் தான் அதிகரிக்கும். அதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றும் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அரசாங்கம், அதற்கு மாற்றாக உள்ள வழிகளை தேடவில்லை.

குறிப்பாக, சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தினால், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்து. ஓட்டைகளை அடைத்து விட்டால், மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவது தடுக்கப்படும். அதனைச் செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அரச நிர்வாகக் கட்டமைப்புகளுக்குள் பெருகிவிட்ட ஊழல்களும் முறைகேடுகளும், அவ்வாறான நிலையை ஏற்படுத்துவதற்குத் தடையாக உள்ளன.

சிறைச்சாலைகள், உண்மையில் சீர்திருத்த மையங்கள் தான். ஆனால், அந்த நிலை மாறி, குற்றங்களை ஒருங்கிணைக்கும் இடங்களாக மாறிவிட்டன. இந்த நிலை மாற்றப்படாத வரை, மரண தண்டனையை நிறைவேற்றினாலும்கூட எந்தப் பயனும் இல்லை.

பல நாடுகளில், போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தாலும், அத்தகைய குற்றங்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, மரண தண்டனை தான் தீர்வு என்று ஒற்றைக்காலில் நிற்பதை விட, குற்றங்களைக் குறைப்பதற்கான சாத்தியமான சீர்திருத்தங்கள் தான் இப்போதைக்கு அவசியம். 

இருந்தாலும், இலங்கையைப் பொறுத்தவரையில், மரண தண்டனையும் நிறைவேற்றப்படப் போவதில்லை. சீர்திருத்தங்களும் சாத்தியமாகப் போவதில்லை. ஏனென்றால், இதில் எதைச் செய்தாலும் ஆட்சியாளர்களுக்குச் சிக்கல்களும் ஆபத்தும் இருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .