Editorial / 2017 நவம்பர் 27 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஏ. அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் பலியான சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, காணாமல் போயுள்ள, முக்கிய ஆவணத்தைத் தேடுமாறு, தகவல் அறியும் உரிமை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் அதன் ஆரம்பத் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப், விமான விபத்தொன்றில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், கண்டறியவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மாயமாகியுள்ளதாகத் தகவல் அறியும் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே, அந்த ஆணைக்குழு மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
2000ஆம் ஆண்டில், அஷ்ரப் பயணித்த, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் உடைந்து விழுந்ததில், அதில் பயணித்த 14 பேர் பலியாகினர். அந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறான தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து, அந்தச் சம்பவம் தொடர்பில் தேடியறிந்து அறிக்கையிடுவதற்காக, அன்று ஆட்சியிலிருந்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நிறுவினார்.
நீதியரசர் எல்.கே.பி. வீரசேகரவின் தலைமையில் நியமிக்கப்பட்ட அந்த ஆணைக்குழு, தன்னுடைய விசாரணையின் முடிவில் தயாரித்த அறிக்கையை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தது.
இந்த விசாரணை அறிக்கை, 2007 ஜனவரி முதலாம் திகதியன்று, ஜனாதிபதி செயலகத்திலிருந்து, தேசிய ஆவணவாக்கல் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த ஆவணம் மாயமாகியுள்ளதாக, அதன் அதிகாரிகள், தகவலறியும் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
அஷ்ரப் மரணம் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவுத், தகவலறியும் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். எனினும், அந்தக் கோரிக்கையை, ஜனாதிபதி செயலகம் நிராகரித்திருந்தது.
அதன்பின்னர், முன்னாள் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவுத், அது சம்பந்தமாக, தகவலறியும் ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்திருந்தார். அந்த மேன்முறையீட்டை, அவ்வாணைக்குழுவின் தலைவர் மஹிந்த கம்மன்பில, உறுப்பினர்கள் குழு, விரிவாக ஆராய்ந்தது.
இதுதொடர்பில், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் மேலதிக செயலாளர் (சட்டம்), ஆணைக்குழுவின் முன்னிலையில் விளக்கமளித்துள்ளார். அதன்பின்னர், அந்த ஆவணத்தை, தேசிய ஆவணவாக்கல் காப்பகத்திடம் செயலாளர் கோரியுள்ளார். அந்த ஆவணம் மாயமாகியுள்ளதாக, அவருக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, தேசிய ஆவணவாக்கல் காப்பகத்தின் அதிகாரியை, ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு, ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இன்று (26) விசாரணைகள் இடம்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு, 8 மில்லியன் ரூபாய் நிவாரணத் தொகை செலுத்தப்படல் வேண்டும். அறிக்கையின் 69,70 மற்றும் 71 ஆகிய பக்கங்களின் மென் பதிப்பை, ஆணையகம் வெளியிட்டிருந்தது.
2007ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த 3 பக்கங்கள் மாத்திரமே, மிஞ்சியிருந்தன. மேலும், இந்த விபத்து, வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதோ அல்லது வெடிப்புச் சம்பவத்தால் ஏற்படுத்தப்பட்டதோ அல்லது வெடிக்கும் சாதனத்தால் ஏற்படுத்தப்பட்டதோ அல்ல என்றும், வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தவிர்க்கமுடியாத காரணத்தாலும் கவனமின்மை காரணமாகவுமே இடம்பெற்றது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
37 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
3 hours ago