Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (02) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
இலங்கையுடன் நெருங்கிய நட்புறவை பேணிவரும் தமது நாடு, பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய விடயங்களில் இலங்கையுடனான தொடர்பினை வலுவாக முன்னெடுத்துச் செல்ல ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தமது நாட்டில் உள்ள பௌத்த பாரம்பரியத்துடன் தொடர்புடைய மரபுரிமைகளை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததுடன், வெகுவிரைவில் தமது நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார உதவிகளுக்கு அப்பாற்பட்டு இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டதுடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான வெற்றிலை ஏற்றுமதியினை இதன்போது நினைவுப்படுத்தினார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல் ஆகியன தற்போது நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அதேவேளை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் தமக்கு உதவியளிக்க வேண்டுமென ஜனாதிபதி கூறினார்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மொஹமட் பைசல் மற்றும் இலங்கைக்கான பதில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
51 minute ago
1 hours ago