Editorial / 2018 மார்ச் 05 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஜனகன் முத்துக்குமார்
சீனாவின் அண்மைய பூகோள அரசியல் நோக்கம், ஐக்கிய அமெரிக்க மூலோபாயவாதிகளிடையே, சீனா உலக அளவில் ஐ.அமெரிக்காவை தனிமைப்படுத்த முனைகிறது என்ற கவலையை எழுப்பியுள்ளது. வட கொரியாவின் சமீபத்திய கண்டம் விட்டுக் கண்டம் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைப் பரிசோதைக்குக் கண்டனம் செய்வதற்காக, G20 உச்சிமாநாட்டின் போது, சீன - ஐ.அமெரிக்கக் கூட்டுப் பிரகடனமொன்றை நிறைவேற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியை சீனா தடைசெய்தபோது, இந்நிலைமை மேலும் வெளிப்பட்டிருந்தது. அண்மையில் ஐ.அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், ஐ.அமெரிக்காவின் மூலோபாயப் பங்காளியான இந்தியாவின் பாதுகாப்பையும் ஐ.அமெரிக்காவின் பாதுகாப்பு முனைவுகளையும் எதிர்கொள்ளும் விதத்தில், பாகிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தில் பல ஆயிரம் துருப்புகளை சீனா நிறுத்தியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாடர் ஆழ்கடல் துறைமுகமானது, பாகிஸ்தானின் மாகாணமான பெலுசிஸ்தானில் உள்ள குவாடர் அரேபிய கடல் எல்லையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பென்டகன் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானுடனான எல்லைகளைப் பாதுகாக்க, ஆப்கானிஸ்தானின் பதான்க்சான் மாகாணத்தின் வக்கான் மாவட்டத்துக்கு சீனா தனது இராணுவத்தை அனுப்பியுள்ளமை, மேலும், இந்திய பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள இலங்கை, பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளில் சில துறைமுகங்களில் சீனா தனது ஆதிக்கத்தை கொண்டுள்ளமை, அதன் இந்திய, ஐ.அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் காட்டுகின்றது. எனினும், இது தொடர்பான விடயங்கள், சீன அதிகாரிகளால் பின்னர் நிராகரிக்கப்பட்டிருந்தன.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சக அறிக்கையின் படி, சீனா தனது வெளிநாட்டுக் கடற்படைத் தளத்துக்கு துருப்புகளை அனுப்பியது மட்டுமே உண்மை என்றாலும், வெளிநாட்டுக் கடற்படைத்தளமான ஜிபோட்டிக்கு அனுப்பப்பட்ட துருப்புகள் தொடர்பான மறைமுகமான கருத்து, சீனா வெளிநாடு மற்றும் அவர்களை அண்டிய கடற்பிராந்தியங்களில், அதன் இராணுவ இருப்பையும் ஆதிக்க விரிவாக்கத்தையும் முன்னோக்கிய செயற்பாடாகவே இது பார்க்கப்பட வேண்டியதாகும். ஆயினும், குறித்த அறிக்கை, சீனா, ஆபிரிக்கா, மேற்கு ஆசியாவில் அமைதி, சமாதானம், மனிதாபிமான உதவிகளைப் போன்ற சீனாவின் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தத் தளம் உறுதி செய்யும் எனவும், இராணுவ ஒத்துழைப்பு, கூட்டுப் பயிற்சிகள், அவசர மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதுகாத்தல், சர்வதேச மூலோபாயக் கடற்படைகளின் பாதுகாப்பை ஒருங்கிணைத்தல் போன்ற வெளிநாட்டுப் பணிகளுக்கு இது உதவும் எனவும் தெரிவித்திருந்தது.
இது இவ்வாறிருக்க, குறித்த வெளிநாட்டுத் தளமானது, ஆபிரிக்காவில் நிரந்தர ஐ.அமெரிக்கத் தளமான கேம்ப் லெமன்னியேரிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவிலேயே உள்ளதுடன், இது ஐ.அமெரிக்கா, ஆபிரிக்கா இணைந்த பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணித்தல் மட்டுமல்லாது, பாதுகாப்புத் தொடர்பான கடல் போக்குவரத்துகள், வெளிநாட்டுக் கப்பல்களின் வருகை என்பவற்றுடன், சீனாவின் வளர்ந்துவரும் செல்வாக்கை அதிகரிக்கும் ஒரு முனைப்பாகவே பார்க்கப்பட வேண்டும் என, பென்டகன் அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும், இந்நிலையானது, ஐ.அமெரிக்காவை, பிராந்தியத்திலிருந்து தனிமைப்படுத்தவும், ஆபிரிக்காவிலுள்ள இயற்கை வளங்களை சீனா அணுகவும், புதிய சந்தைகளை ஏற்படுத்துதல், ஆபிரிக்கக் கண்டம் முழுவதும் விரிவான உட்கட்டமைப்பு முதலீடுகளை மேற்கொள்ளுதல் தொடர்பிலேயே செயற்படும் எனவும், குறித்த பென்டகன் அறிக்கை தெரிவிக்கின்றது.
மறுபுறத்தில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் -- குறிப்பாக சிரியாவில் -- ஐ.அமெரிக்காவின் செல்வாக்குக்குச் சவால் செய்யும் வகையில், அரேபிய பரிமாற்றச் சங்கம், சிரிய தூதரகம் சமீபத்தில் மேற்கொண்டிருந்த ‘சிரியா தின கண்காட்சியில்’ உட்கட்டமைப்பு முதலீடு தொடர்பிலான மாநாட்டில், நூற்றுக்கணக்கான சீன நிபுணர்கள் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரியாவையும் அதனை அண்டிய பிராந்தியத்திலும் இராணுவச் செல்வாக்கைப் பேணுவதற்கு ஐ.அமெரிக்கா செயற்படும் இந்நிலையில், பொருளாதார ரீதியாக சிரியாவுடன் இணங்கிச்செல்லும் சீனாவின் செயற்பாடானது, அண்மைக்கால வரலாறுகளின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படக்கூடியதே. குறித்த உட்கட்டமைப்பு முதலீடானது, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) சிறியதொரு செயற்பாடாகக் கருதப்பட்டாலும், சிரிய மறுசீரமைப்புக்கான முதல் செயற்றிட்டத்தில் 150 சீன நிறுவனங்கள் சிரியாவில் ஒரு தொழிற்றுறைப் பூங்காவை அமைப்பதற்கு 2 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர் நிதியை சீனா முதலீடு செய்ய முன்வந்துள்ளமை, பெய்ஜிங் சிரியாவின் அலெப்போவுக்கு மற்றும் அங்கிருந்து மத்திய தரைக்கடல் மற்றும் ஆபிரிக்காவுக்கான சாலை மற்றும் பட்டுப்பாதை அமைப்பது தொடர்பாக முயற்சி செய்வதும், குறித்த பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும்.
இவ்வாறாக ஐ.அமெரிக்காவைத் தனிமைப்படுத்துதலில் சீனா கொண்டுள்ள முனைப்பானது, அண்மைக்காலத்தில் தீர்க்கவல்ல ஒன்றாகும் எனினும், மத்திய ஆசியாவில் ஐ.அமெரிக்கா தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்தலே, தொடர்ச்சியாக ஐ.அமெரிக்க - சீன செல்வாக்குச் சமநிலையை உலகளாவிய ரீதியில் பேணுவதற்கு உதவும். இதன்படி, ஐ.அமெரிக்கா, மத்திய ஆசியாவில் உள்ள பெலுசிஸ்தான் சுதந்திரத்தை உண்மையாக ஆதரிப்பது, இப்போதைய நிலையைப் பொறுத்தவரை ஐ.அமெரிக்காவால் நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும். பெலுசிஸ்தானின் சுதந்திரம், மத்திய ஆசியாவின் செல்வாக்குச் சமன்பாட்டை நிறுவும் ஒரேயொரு திருப்புமுனையாகும். இதுவே மத்திய ஆசியாவை, தொடர்ந்து அரேபிய கடற்பிராந்தியத்தில் ஐ.அமெரிக்காவின் தொடர்ச்சியான செல்வாக்கை பேண உதவும் என்பதுடன், இதன் காரணமாகவே அண்மையில் ஐ.அமெரிக்கா, தனது நாட்டின் போர்க்கப்பல்களை அப்பிராந்தியத்துக்கு அனுப்பிவைத்திருந்தமை பார்க்கப்பட வேண்டியதாகும்.
4 minute ago
8 minute ago
14 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
14 minute ago
36 minute ago