2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

கூட்டமைப்பின் முடிவு ஏப்ரல் 2இல்

Editorial   / 2018 மார்ச் 27 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்றக் குழு, அடுத்த மாதம் 2ஆம் திகதி, கொழும்பில் சந்தித்து, தீர்மானத்தை எடுக்குமெனவும் அதுவரைக்கும், தங்களுடைய நிலைப்பாடு என்னவென்று தெளிவாகக் கூற முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர முதல்வர் தெரிவின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஒன்றிணைந்த எதிரணி, அதாவது ராஜபக்ஷ தரப்பினரால் கொண்டுவரப்படுகின்ற இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, முதல்கட்டமாக நகர்த்தப்படுகின்ற ஒரு காய் என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்தவொரு விடயம். ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக வைத்திருப்பது, எங்களுடைய நோக்கமல்ல.

ஆனால், ஒரு கூட்டரசாங்கத்தை உருவாக்கி, அதன் மூலமாக, பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து, எங்களுடைய சம்மதத்தோடும் முஸ்லிம் மக்களுடைய பங்களிப்போடும், நாட்டுக்குப் புதியதோர் அரசமைப்பை உருவாக்குகின்ற பணி, அரைவாசியிலே, தற்போது நின்றுகொண்டிருக்கின்றது.

“இந்நிலையில், இந்தக் கூட்டரசாங்கம் விழுமாக இருந்தால், அந்த முயற்சி முற்று முழுதாகத் தடைப்படும். ஆனால், கூட்டரசாங்கம் தொடர்ந்தும் இருக்கின்றபோதும், அந்தப் பணி தொடர்ந்தும் நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், 2015இலேயே, அனைத்து மக்களும் கொடுத்த ஆணையை நிறைவேற்றும் வண்ணமாக, இந்தக் கூட்டரசாங்கம் முன்னேறுமாக இருந்தால், இந்தக் கூட்டரசாங்கத்தைத் தொடர்ந்து வைத்திருக்கவேண்டிய தேவை, எங்களது மக்களின் சார்பில் இருக்கின்றது" என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

“முதல் காய்நகர்த்தல் பிரதமராக இருந்தாலும், இறுதி நகர்வு, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து இறக்குகின்றதென்ற ஒன்று காணப்படுகின்றது. ஆகையினால், இவை எல்லாவற்றையும் நாம் ஆராய்ந்து, இந்தக் கூட்டரசாங்கம், இனியாவது, காலத்தை இழுக்காமல், பொறுப்புக்கூறல் சம்பந்தமாகவும், அரசமைப்பு மாற்றம் சம்பந்தமாகவும் தங்களது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்து முன்னேறுவார்களாக இருந்தால், நாங்கள், இந்தக் கூட்டரசாங்கத்தை தொடர்ந்து ஆட்சியிலே வைத்திருப்பதற்காக, எங்களால் இயன்றதை நாம் செய்வோம்” எ ன்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .