2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

இந்தியன் வீட்டுத்திட்டத்தை சம்பூர் மக்கள் புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 24 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, சம்பூர் கிராமத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டப்படவுள்ள  வீட்டுத்திட்டத்தை அக்கிராம மக்கள் புறக்கணித்து வருவதாக சம்;பூர் அகதி முகாம்களின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான குமாரசாமி நாகேஸ்வரன், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

சம்பூர் கிராமத்தில் ஒவ்வொரு வீடும் 550,000  ரூபாய் பெறுமதிப்படி 204 வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்த வீடுகளையே அம்மக்கள் புறக்கணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'மேற்படி கிராமத்தில் ஒவ்வொரு வீடும் 550,000 ரூபாய் பெறுமதியில் கட்டுவதற்கு 2009ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், ஏழு  வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே இந்த வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், தற்போது தலா வீட்டைக் கட்டுவதற்கு சுமார் 850,000 ரூபாய் வரை செலவாகும்.

ஒரு லோட் மணல் முன்னர் 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு லோட் மணலின் விலை சுமார் 18,000 ரூபாயாகும்.   அவ்வாறே, கூரை ஓடுகளின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே, மேலதிக பணம் செலவழித்து வீட்டைக் கட்டுவதற்கு தங்களிடம் பணம் இல்லையென இந்த வீட்டுத்திட்டத்துக்குரிய மக்கள் தெரிவிக்கின்றனர்' என்றார்.  

'ஏழு வருடங்கள் அகதி முகாமில் வாழ்ந்து எவ்வித பொருளாதார வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும் தங்களுக்கு, மேலதிகமாக 300,000 ரூபாவை செலவழித்து வீட்டைக் கட்டுவதற்கு  எவ்வாறு முடியுமென்றும் அம்மக்கள் கிராம அபிவிருத்திச் சங்கக் கூட்டங்களிலும் அரசசார்பற்ற நிறுவனக் கூட்டங்களிலும் கேள்வியெழுப்புகின்றனர்.

ஏற்கெனவே இந்திய வீட்டத்திட்டம் வழங்கப்பட்டுள்ள ஏனைய கிராமங்களான கூனித்தீவு, கடற்கரைச்சேனை, நவரெட்ணபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கஷ்டப்படுவதை அவதானித்து அம்மக்களின்  நிலை தமக்கு வேண்டாமென்று சம்பூர் வீட்டுத்திட்ட மக்கள் பின்வாங்குகின்றனர்.

இந்த வீட்டுத்திட்டத்துக்குரிய தொகையை அதிகரித்து வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சம்பூர் வீட்டுத்திட்டத்துக்குரிய மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .