2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக துண்டுப்பிரசுரம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 25 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

சம்பூர் பகுதியில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிராக 'அனல் மின்சார நிலையம் ஓர் அபாயம்' எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளன. மூதூரில் முக்கிய இடங்களில் இந்த துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளன.

மூதூர் பிரதேசத்திலுள்ள சமூக மற்றும் சன்மார்க்க அமைப்புகள் இணைந்தமைத்த மூதூர் பசுமைக்குழு அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள இத்துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மூதூர், சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையமொன்று அமைக்கப்படவுள்ள செய்தி நாம் அறிந்ததேயாகும். இம்மின்நிலையம் நிறுவப்படும்போது, தேவைப்படும் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதும் குறிப்பிட்ட தொகையினருக்கு தொழில் வாய்ப்பு  கிடைக்கப் பெறுவதும் இதன் மூலம் ஏற்படும் நன்மைகளாகும். ஆனால், இத்தகைய நன்மைகளை விட  சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் இதனால் ஏற்படும் தீமைகளே அதிகமென ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டதனால், அனல் மின்சார நிலையத்தை நிறுவியுள்ள பல நாடுகள் அவற்றை மூடிவிடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

அனல் மின்சார நிலையமானது நிலக்கரியை எரிப்பதனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதனாலேயே இம்முறையானது பெரும் அபாயகரமான முறையாக காணப்படுகின்றது. அனல் மின்சார உற்பத்தியின்போது, கடலிலிருந்து பாரியளவில் நீரைப் பெற்றுக்கொள்வதற்கும் பின்பு கழிவுநீரைக் கடலுக்குள் செலுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதனால்  கடல் வாழ் உயிரினங்கள் அழிவடைவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது. இது மீன்பிடித்தொழிலை பாதிப்படையச் செய்யும். அதேபோல, அனல் மின்சார நிலையத்திலிருந்து வெளியாகும் தூசும் நச்சு வாயுக்களும் வெப்பமும்  நேரடியாக விவசாயத்தில் தாக்கத்தைச் செலுத்துவதன் மூலம் விவசாயத் தொழிலும் வெகுவாகப் பாதிப்படையும்.

பொதுவாக 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையமானது ஒரு வருடத்திற்கு 3.7 மில்லியன்தொன் காபனீரொட்சைட்டையும் 10,200 தொன் நைதரசன் ஒக்சைட்டையும் 10,000 தொன் கந்தகவீரொட்சைட்டையும் 720 தொன் காபனோரொட்சைட்டையும் 500 தொன் தூசியையும் வெளியிடுகின்றது.  இதற்கு மேலாக ஆசனிக், பாதரசம், குரோமியம், ஈயம், நிக்கல் உள்ளிட்ட இன்னும் பல மூலகங்களை அல்லது நஞ்சுகளை அனல் மின்சார நிலையமானது  வெளியிடுகின்றது. இத்தகைய நஞ்சுகள் மூலம் அனல் மின்சார நிலையம் செயற்படும் இடங்களில் வாழும் மக்கள் சுவாசநோய், இதயநோய், நரம்புநோய் உள்ளிட்ட பல நோய்களினால் பீடிக்கப்பட்டு வருடத்திற்கு இலட்சக்கணக்கில் பரிதாபமாக பலியாகிவருகின்றனர். இப்போது இத்தகைய நிலையை நாமும் எதிர்நோக்கி விட்டோம்! இந்த அபாயத்தை தடுப்பது யார்? சிந்திப்போமா?!' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X