2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

'மூதூர் கிழக்கில் அபரிகரிக்கப்பட்டுள்ள காணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மே 30 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, மூதூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பழங்குடியின மக்களின் காணிகள், அவர்கள் சாராத ஏனைய மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இது தொடர்பில் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை பழங்குடியின மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் வேண்டுகோள் விடுத்தார்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது, மேற்படி விடயம் தொடர்பில் எழுத்து மூலம் சமர்ப்பித்து உரையாற்றியபோதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், '1934ஆம் ஆண்டு முதல் மூதூர் கிழக்குப் பகுதியில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்த மக்களின் காணிகளை அயல் கிராமத்தைச் சேர்ந்த இக்பால் நகர் விவசாயிகள் அபகரித்துள்ளனர்' என்றார்.

'மேலும், பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான நல்லூர் கிராம அலுவலர் பிரிவில் இருந்த விவசாய சம்மேளனம் இரண்டாக்கப் பிரிக்கப்பட்டு, ஏற்கெனவே இருந்த பத்தினி அம்பாள் விவசாயச் சம்மேளனம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இப்பழங்குடியின மக்களின்; விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், இந்த விடயம் தொடர்பில்  குழு ஒன்றை  அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பான அறிக்கையை அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக்  கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவுக்கு பணித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .