2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மை: இம்ரான் மஹ்ரூப்

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

'திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் இருக்கின்றன. எனினும் எந்த ஒரு பிரதேச செயலகப் பிரிவிலும் முஸ்லிம் பிரதேச செயலாளரோ அல்லது உதவிப் பிதேச செயலாளரோ இல்லை. மாவட்ட செயலகத்திலும் ஒரு முஸ்லிம் அதிகாரி இல்லை. இதனால் முஸ்லிம்களுக்கு நிறையப் பாதிப்புகள் உள்ளன' என கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

'இந்த அசாங்கத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருவதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்காக முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை சாதித்தவை என்ன?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்கா நகரில் வெள்ளிக்கிழமை(22) மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வேட்பாளர் யூசுப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இந்த அரசாங்கத்திற்கு தேவைப்பட்ட வேளையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் பாய்ந்து சென்று தனது ஆதரவை வழங்கி அதனை நிறைவேற்ற உதவியது. இந்த திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்காமலிருந்தால் இத்திருத்தச்சட்டம் நிறைவேறியிருக்காது. ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் இண்டு முறைதான் வேட்பாளராக இருக்க முடியும் என்ற சட்டம் தளர்த்தப் பட்டிருக்காது.

எங்களுக்கு இந்த அரசாங்கத்திடம் இருந்து எதுவும் பெற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை. எங்களது பள்ளிவாயல்களைப் பாதுகாத்துத் தாருங்கள். எங்களது மத கலாசார சின்னங்களைப் பாதுகாத்துத் தாருங்கள் என்று முஸ்லிம் அமைச்சர்களிடம் கேட்குமளவுக்கு இன்று முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையிலேயே அரசாங்கத்திற்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருந்த வேளையிலேயே அங்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்தது. கரையோர மாவட்டம் பெறல், புதிய முஸ்லிம் பிரதேச செயலகங்கள் பெறல், திருகோணமலை அரசாங்க அதிபர் உள்ளிட்ட ஓய்வுநிலை படை அதிகாரிகளுக்குப் பதிலாக சிவில் நிர்வாக அதிகாரிகளை நியமித்தல் போன்ற பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தாம் ஆதரவு வழங்கியதாக முஸ்லிம் காங்கிரஸ் அப்போது கூறியது.

இவற்றில் ஏதாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? அல்லது முன்னெடுப்புகள் தானும் செய்யப் பட்டுள்ளதா? என்பதை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ்காரர் தான் முதலமைச்சராக வருவார் என்றும் அப்போது கூறப்பட்டது.

இதுவும் முஸ்லிம் காங்கிரஸின் வெறும் பகல் கனவு தான் என்பதில் சந்தேகமில்லை. பொறுத்திருந்து பாருங்கள் இந்த உண்மை இன்னும் சில மாதங்களில் உங்களுக்கும் தெரிய வரும்.

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் இருக்கின்றன. எனினும் எந்த ஒரு பிரதேச செயலகப் பிரிவிலும் முஸ்லிம் பிரதேச செயலாளரோ அல்லது உதவிப் பிதேச செயலாளரோ இல்லை. மாவட்ட செயலகத்திலும் ஒரு முஸ்லிம் அதிகாரி இல்லை. இதனால் முஸ்லிம்களுக்கு நிறையப் பாதிப்புகள் உள்ளன.

இந்த மாவட்டத்திலே ஒரு முஸ்லிம்  முதலமைச்சர், ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர், இரண்டு முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்கள், ஐந்து முஸ்லிம் உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்கள் எனப் பலர் அரசாங்கம் சார்பாக இருக்கின்றனர். எனினும், இவர்கள் எவருக்கும் இந்த அலுவலகங்களில் முஸ்லிம் அதிகாரிகளை நியமிக்க முடியவில்லை. அது பற்றிய எண்ணமும் இல்லை.

கடந்த 1987 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக எனது தந்தையார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூப் அவர்கள் மட்டுமே இந்த மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதியாக இருந்தார்.

முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் முழு ஆதரவு வழங்கியது. அப்போது இலங்கை நிர்வாக சேவையில் முஸ்லிம் அதிகாரிகள் குறைவாக இருந்தனர். எனினும் விசேட அமைச்சரவை அனுமதி மூலம் நிர்வாக சேவையில் இல்லாத மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களை கிண்ணியாவுக்கும், மர்ஹூம் இப்ராஹீம் அவர்களைக் குச்சவெளிக்கும் உதவி அரசாங்க அதிபராக எனது தந்தை நியமித்தார்.

இன்று திருகோணமலை மாவட்டத்தில் பணிபுரியும் உயரதிகாரியே நிர்வாக சேவை சேர்ந்தவர் இல்லை. இப்படியிருக்க எந்த வகையிலாவது முஸ்லிம் அதிகாரிகளை நியமிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. இருந்தும் முதலமைச்சரோ எம்.பியோ இதனைச் செய்யும் ஆற்றலில்லாதவர்களாகவே இருக்கின்றனர். இந்த அரசாங்கமும் அதனை நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையில் இல்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலேயே முஸ்லிம் அதிகாரிகளை நியமிக்க முடியவில்லை என்றால் ஏனைய பகுதிகளை நினைத்துப்பாருங்கள்

முஸ்லிம் காங்கிரஸினால் இந்த அரசாங்கத்தில் இந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதையும் செய்ய முடியாது. அவர்களது சுகபோகத்திற்கு மாத்திரமே அவர்கள் அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். நடைபெறவுள்ள தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெறுபவர் அடுத்த நாள் அரசின் பக்கம் தாவலாம். இது தான் இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் நிலை.

எனவே, சமூகக் குரல், சமூகநலன் எனக்கருதி முஸ்லிம் காங்கிரஸிக்கு வாக்களித்து ஏமாந்து விடாதீர்கள். கட்சி; பற்று, சமூகப் பற்றெல்லாம் இன்று முஸ்லிம் காங்கிரஸில் இல்லை. இப்போது கூட முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானிக்குமாயின் தலைவரும் செயலாளரும், மட்டுமே வெளியேறுவார்கள். ஏனையோர் வெளியே வரப்போவதில்லை.

முஸ்லிம் மக்கள் நல்ல முறையிலே சிந்தித்து தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு அளப்பெரும் சேiவாற்றிய கட்சி ஐக்கிய தேசியக்கட்சி. நமது பாட்டன், தகப்பன் காலத்திலிருந்து நமக்குப் பழக்கப்பட்ட கட்சி . ஆகையால் முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்திலோ சுயநலத்திற்காக இயங்கும் முஸ்லிம் காங்கிரஸிலோ இல்லை என்பதை இந்தத் தேர்தலில் உறுதிப்படுத்த வேண்டும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .