2021 மார்ச் 01, திங்கட்கிழமை

திருமலைக்கு ஜனாதிபதி நாளை விஜயம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், ஒலுமுதீன் கியாஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை சனிக்கிழமை (22) திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

மூதூர் கிழக்கு, சம்பூர் பகுதி மீள்குடியேற்றம் சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகின்றது. 

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இப்பகுதி மக்கள், வெளியிடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். 4 வருடங்களின் பின்னர் இம்மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்துக்கு மீள அழைத்துவரப்பட்டு கிளிவெட்டி, மணல்சேனை, பட்டித்திடல் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் கட்டைபறிச்சான் நலன்புரி நிலையங்களிலும் தற்காலிக குடில்களிலும்; தங்கவைக்கப்பட்டிருந்தனர். 

சம்பூர் பிரதேசத்திலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, அப்பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு பாரிய கடற்படை முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இம்மக்கள் வாழ்ந்த குடியிருப்பில் 818 ஏக்கர் காணிகள் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு முன்னைய ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தது. ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி இக்காணிகளை மக்கள் மீள்குடியிருப்புக்காக விடுவித்திருந்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த நிறுவனத்தால் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு உயர் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டு காணிகள் உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என குறித்த தீர்ப்பும் வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தற்காலிக மனைகளில் தங்கியிருந்தவர்கள் அவற்றினைப் பிரித்துக் கொண்டு தங்களது சொந்த காணிகளில் மீள்குடியேறியுள்ளனர். தமக்கான நிரந்தர வீடுகள், மின்சாரம், பாதை அமைப்பு. குடிநீர்விநியோகம் என்பன வழங்கப்பட வேண்டும் என மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் புதிய ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன  முதல் தடவையாக இப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண மீள்குடியேற்ற அமைச்சு என்பனவற்றுடன் இணைந்து இவ்விஜய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. 

நாளை மறுதினம் சனிக்கிழமை 22.08.2015 சம்பூருக்கு மதியம் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மக்களது காணி உரிமத்துக்கான ஆவணங்களை உரிய வகையில் கையளிக்கவுள்ளார். இவ்விஜயத்தில் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .