2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

'எனது மிகச்சிறந்த இனிங்ஸ்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 28 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நேற்று பெற்றுக் கொண்ட 82 ஓட்டங்களே, தனது வாழ்வின் மிகச்சிறந்த இனிங்ஸாக இருக்குமென, இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான விராத் கோலி தெரிவித்துள்ளார்.

உலக இருபதுக்கு-20 தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெறும் போட்டியாக அமைந்த இப்போட்டியில், வெற்றிபெறக் கடினமாக நிலையில் இருந்து, வெற்றியைப் பெற்றுக் கொடுத்த பின்னரே, விராத் கோலி இவ்வாறு தெரிவித்தார்.

மொஹாலியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய இந்திய அணி, 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களுடன் தடுமாறிக் கொண்டிருந்த போது, அதிரடியாக விளையாடிய விராத் கோலி, 19.1 ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெறுவதை உறுதி செய்தார். இதன்போது அவர், 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

'இந்த இனிங்ஸ், எனது இனிங்ஸ்களில் நிச்சயமாக முதல் 3 இனிங்ஸ்களுள் ஒன்றாக இருக்கும். அனேகமாக, முதலிடத்தில் தற்போது இருக்கிறது, ஏனெனில், நான் சிறிது உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். எனவே, இதை முதலிடத்தில் வைக்க விரும்புகிறேன். உலகத்தரமிக்க அணியான அவுஸ்திரேலியாவுக்கெதிராக, காலிறுதிப் போட்டியாக அமைந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டியிருந்தது. சொந்த நாட்டில் விளையாடும் போது, எங்கள் மீது அதிக எதிர்பார்ப்புக் காணப்பட்டது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

'இப்போது என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஏனெனில், நாங்கள் இருந்த நிலையிலிருந்து, வெற்றிபெற்றதைப் பற்றி நான், உணர்வுகளில் மூழ்கியுள்ளேன். இதற்காகத் தான் நீங்கள் கிரிக்கெட் விளையாடுவது. ஒவ்வொரு போட்டியிலும் புதிய சவால்கள் வேண்டும். ஆனால் என்னை நம்புங்கள், இவ்வாறான நிலைமைகளை நீங்கள் அதிகம் விரும்பமாட்டீர்கள்" என்றார்.

இதில், இந்திய அணி 3ஆவது விக்கெட்டை இழந்தபோது களமிறங்கிய யுவ்ராஜ் சிங், கால் உபாதைக்குள்ளானதோடு, விரைவாக ஓடுவதற்குத் தடுமாறியிருந்தார். இதனால் விராத் கோலி, ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தவர் போல் காணப்பட்டார். எனினும், யுவ்ராஜ் சிங் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து மகேந்திரசிங் டோணி களமிறங்கியடுத்து, சிறப்பாக ஓடி ஓட்டங்களைப் பெற்ற விராத் கோலி, இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இனிங்ஸ் குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் டோணி, 'அதுவோர் அற்புதமான இனிங்ஸ் என நான் நினைக்கிறேன். துடுப்பெடுத்தாடுவதற்கு இலகுவான ஆடுகளம் அன்று என்பது முக்கியமானது" எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .