2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கருண் நாயர் முச்சதம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5ஆவது போட்டியின் 4ஆம் நாள் முடிவில், முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, வெற்றி பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 விக்கெட்டுகளை இழந்து 391 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 759 ஓட்டங்களைக் குவித்தது. இது, டெஸ்ட் போட்டிகளில் அவ்வணி பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாகும்.
இதில், தனது 3ஆவது டெஸ்ட் போட்டியிடும் விளையாடும் கருண் நாயர், ஆட்டமிழக்காமல் 303 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் பெற்ற 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னர், விரேந்தர் செவாக் மாத்திரமே, முச்சதம் பெற்ற இந்திய வீரராக இருந்தார். தவிர, தான் துடுப்பெடுத்தாடிய 3ஆவது இனிங்ஸில் முச்சதம் பெற்ற கருண் நாயர், டெஸ்ட் போட்டிகளில் விரைவாகச் சதம் பெற்ற வீரர் என்ற சாதனையையும் படைத்தார். தவிர, தனது முதலாவது சதத்தையே முச்சதமாகப் பெற்ற மூன்றாவது வீரர் கருண் நாயர் ஆவார்.

துடுப்பாட்டத்தில் ஏனையோரில், லோகேஷ் ராகுல் 199, பார்த்திவ் பட்டேல் 71, இரவிச்சந்திரன் அஷ்வின் 67, இரவீந்திர ஜடேஜா 51 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்டுவேர்ட் ப்ரோட், அறிமுக வீரர் லியம் டோசன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

282 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, இன்றைய நாள் முடிவுக்கு வந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--