2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

யாசீர் ஷா கலக்கல்; வென்றது பாகிஸ்தான்

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 17 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை, பாகிஸ்தான் அணி இலகுவான வென்றுள்ளது. போட்டியின் நான்காவது நாளிலேயே இந்த வெற்றி பெறப்பட்டது.

இங்கிலாந்தின் இலண்டனிலுள்ள லோர்ட்ஸ் மைதானத்தில், கடந்த 14ஆம் திகதி ஆரம்பித்து இடம்பெற்ற இப்போட்டியில், 8 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களுடன், 4ஆவது நாளான இன்றைய நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி ஆரம்பித்தது.

வெறுமனே 2.1 ஓவர்கள் மாத்திரம் தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 79.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் அசாத் ஷபீக் 49, சப்ராஸ் அஹமட் 45, யாசீர் ஷா 30 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், இந்தப் போட்டியில் தனது 2ஆவது 5 விக்கெட் பெறுதியைப் பூர்த்தி செய்தார். அவரது 5 விக்கெட்டுகள் தவிர, ஸ்டுவேர்ட் ப்ரோட் 3, மொயின் அலி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

283 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதலாவது விக்கெட்டாக அலஸ்டெயர் குக்கை 19 ஓட்டங்களுக்கு இழந்ததோடு, 2ஆவது விக்கெட்டை 32 ஓட்டங்களுக்கே இழந்தது. பின்னர் ஓரளவு நிதானமாக விளையாடிய அவ்வணி, ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 96 ஓட்டங்களுடன் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டு, 207 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 75 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜொனி பெயர்ஸ்டோ 48, கரி பலன்ஸ் 43, ஜேம்ஸ் வின்ஸ் 42 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் மீண்டும் கலக்கிய யாசீர் ஷா 4 விக்கெட்டுகளையும் றஹாத் அலி 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஆமிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்திருந்த பாகிஸ்தான் அணி, மிஸ்பா உல் ஹக்கின் 113, அசாத் ஷபீக்கின் 73, மொஹமட் ஹபீஸின் 40 ஓட்டங்களின் துணையோடு, 339 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 6, ஸ்டுவேர்ட் ப்ரோட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸில், அலஸ்டெயர் குக்கின் 81, ஜோ றூட் 48, கிறிஸ் வோக்ஸின் ஆட்டமிழக்காத 35 ஓட்டங்களின் துணையோடு 272 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் யாசீர் ஷா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக, யாசீர் ஷா தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .