2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கோலி, காம்பீர் அபார துடுப்பாட்டம்: இரண்டாவது போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி

Super User   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

டில்லி ஷா கோட்லா அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இந்திய அணி பந்துவீச்சாளர் பிரவீன் குமார் போட்டியின் நான்காவது ஓவரில் இங்கிலாந்து அணித்தலைவர் அலிஸ்டயர் குக்கை ஆட்டமிழக்கச் செய்தார். வினய் குமார் வீசிய அடுத்த ஓவரில் கீஸ்வெட்டர் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி ஓட்டமெதுவும் பெற்றிருக்கவில்லை.

இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 237 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் சார்பில் சமிட் பட்டேல் ஆகக்கூடுதலாக 42 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் வினய்குமார் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஸ் யாதவ் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்  பிரவீன் குமார், ஆர்.அஸ்வின், ஆர்.ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் பார்த்தீவ் பட்டேல் 12 ஓட்டங்களுடனும் அஜின்க்யா ரஹானே 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ரஹானே ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 29 ஆக இருந்தது.
அதன்பின் ஜோடி சேர்ந்த கௌதம் காம்பீரும் வீரட் கோலியும் 3 ஆவது விக்கெட்டுக்காக 174 பந்துகளில் 200 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

இந்திய அணி 36.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

கௌதம் காம்பீர் 90 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களைப் பெற்றார். வீரட் கோலி 98 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களைக் குவித்தார். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கோலி பெற்ற 7 ஆவது சதமாகும். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் அவர்  தெரிவானார்.

இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 126 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் 3 ஆவது போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை மும்பையில் நடைபெறவுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--