2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

முரளி இல்லாதது மகிழ்ச்சி: ரொஸ் ரெய்லர்

A.P.Mathan   / 2012 நவம்பர் 16 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியை டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொள்ளும்போது இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் இல்லாதது மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து அணியின் தலைவர் ரொஸ் ரெய்லர் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை அணி வெற்றிகொள்வதற்கு சிறப்பாக ஆட வேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்குபெறவுள்ளது. அதில் முதலாவது போட்டி நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் முத்தையா முரளிதரன் இலங்கை அணியில் இல்லாதது குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் தங்களின் சிறப்பான திறமை வெளிப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், இலங்கை அணியின் பந்துவீச்சை அடித்தாட முயற்சிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியின் ஆரம்ப ஓவர்கள் முக்கியமானவை எனத் தெரிவித்த ரொஸ் ரெய்லர், புதிய பந்துடன் வீசும் போது சரியான இடங்களில் பந்துகளை வீசி விக்கெட்டுக்களைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக இங்கிலாந்து அணி அண்மையில் இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி அதிக விக்கெட்டுக்ககைக் கைப்பற்றியிருந்தார்கள் என ரொஸ் ரேய்லர் தெரிவித்தார்.

இலங்கை ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சுக்கு மாத்திரம் அதிக உதவிகள் கிடைக்காதெனத் தெரிவித்த அவர், மழை வானிலை காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவாறு காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலியில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .