2021 மே 06, வியாழக்கிழமை

திஸர பெரேரா சிறப்பாகச் செயற்படுவார்: ஷேன் வொற்சன்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 07 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் டுவென்டி டுவென்டி தொடரான பிக்பாஷ் லீக் தொடரில் இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரர் திஸர பெரேரா சிறப்பாகச் செயற்படுவார் என எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய அணியின் உப தலைவர் ஷேன் வொற்சன் தெரிவித்துள்ளார்.

பிறிஸ்பேண் ஹீற் அணி சார்பாக ஷேன் வொற்சன் போட்டிகளில் பங்குபெறவுள்ள நிலையில் அவ்வணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றவிருந்த டேல் ஸ்ரெய்ன் இறுதி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டிருந்தார். டேல் ஸ்ரெய்னின் உள்ளூர் அணியான கோப்ராஸ் அணியே அவரை வாபஸ் பெற்றிருந்தது.

டேல் ஸ்ரெய்ன் நீங்கியதை அடுத்து இலங்கை அணியின் இளம் வீரரான திஸர பெரேரா பிறிஸ்பேண் ஹீற் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். புதிய ஒப்பந்தம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே ஷேன் வொற்சன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

திஸர பெரேராவை ஒப்பந்தம் செய்தமை மிகச்சிறப்பானது எனத் தெரிவித்த ஷேன் வொற்சன், திஸர பெரேரா மிகவும் திறமை வாய்ந்த ஒரு சகலதுறை வீரர் எனவும் தெரிவித்தார். அண்மையில் இலங்கையில் நடந்து முடிந்த உலக டுவென்டி டுவென்டி தொடரில் அவர் வெளிப்படுத்தியதைப் போன்று திஸர பெரேரா பந்துகளை மிகவும் நீண்ட தூரத்திற்கு அடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் எனவும் ஷேன் வொற்சன் தெரிவித்தார்.

திஸர பெரேராவின் வேகப்பந்து வீச்சும் சிறப்பானது எனத் தெரிவித்த ஷேன் வொற்சன், பிறிஸ்பேண் கிரிக்கெட் மைதானத்தில் அவரது பந்துவீச்சு வகை மிகுந்த உதவியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .