2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சிம்பாப்வேயைத் தோற்கடித்தது இந்தியா

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிம்பாப்வேயிற்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், சிம்பாப்வே அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணி 58 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றது.

2 ஓட்டங்களுக்கே முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களுடன் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் டினேஷ் கார்த்திக், ஷீகர் தவான் இருவரும் 167 ஓட்டங்களை 5ஆவது விக்கெட்டுக்காகப் பகிர்ந்தனர்.

அதன் பின்னரும் சிம்பாப்வே அணி சிறப்பாகப் பந்துவீசிய போதிலும், இறுதி ஓவரில் 23 ஓட்டங்கள் குவிக்கப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ஷீகர் தவான் 127 பந்துகளில் 116 ஓட்டங்களையும், டினேஷ் கார்த்திக் 74 பந்துகளில் 69 ஓட்டங்களையும், வினய் குமார் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக பிரையன் விற்றோரி 2 விக்கெட்டுக்களையும், கைல் ஜார்விஸ், ரென்டாய் சத்தர, புரொஸ்பர் உற்செயா, சியன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

295 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 58 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

முதலாவது விக்கெட்டுக்காக 45 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 109 ஓட்டங்களுடன் மிகப் பலமான நிலையில் காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டு, 6 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்கள் என்ற நிலைக்கு வந்தது.

துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக வியூசி சிபன்டா 65 பந்துகளில் 55 ஓட்டங்களையும், புரொஸ்பர் உற்செயா 62 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், எல்ற்றன் சிக்கும்புரா 58 பந்துகளில் 46 ஓட்டங்களையும், ஹமில்ற்றன் மஸகட்ஸா 47 பந்துகளில் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக ஜெய்தேவ் உனத்கட் 4 விக்கெட்டுக்களையும், அமித் மிஷ்ரா 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஷமி, ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஷீகர் தவான் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--