2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

தென்னாபிரிக்காவிடம் தோல்வியடைந்தது இலங்கை

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
 
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.
 
ஆரம்பம் முதலே சுழற்பந்துவீச்சுக்குத் தடுமாறிய அவ்வணி, விக்கெட்டுக்களை இழந்ததோடு, ஓட்டங்களைப் பெறவும் தடுமாறியது. 5ஆவது விக்கெட்டுக்காக 56 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அதற்கு 8.3 ஓவர்கள் தேவைப்பட்டிருந்தன.
 
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஜே.பி.டுமினி 52 பந்துகளில் 51 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 24 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சச்சித்திர சேனநாயக்க 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், லசித் மலிங்க, அஞ்சலோ மத்தியூஸ், அஜந்த மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
116 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
 
தடுமாற்றமான ஆரம்பத்தை எதிர்கொண்ட இலங்கை அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 25 ஓட்டங்களுறுடன் காணப்பட்டது. அதன் பின்னர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3 விக்கெட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுக்கள் இழக்கப்பட, இலங்கை அணி தடுமாறியது. இறுதி 2 ஓவர்களில் 21 ஓட்டங்கள் தேவைப்பட, 19ஆவது ஓவரில் ஓட்டமெதுவும் பெறப்படாததோடு, 2 விக்கெட்டுக்களும் இழக்கப்பட்டிருந்தன.
 
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தனித்துப் போராடிய குமார் சங்கக்கார 53 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களைப் பெற்றார். குஷால் ஜனித் பெரேராவின் 11 ஓட்டங்களைத் தவிர, வேறு எந்த வீரரும் இரட்டைப்படை ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.
 
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஜே.பி.டுமினி 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், வெய்ன் பார்னெல் 3 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மோர்னி மோர்க்கல் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், லொன்வபோ சொற்சொபி, இம்ரான் தாஹிர் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
இப்போட்டியின் நாயகனாக ஜே.பி.டுமினி தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--