2021 மார்ச் 08, திங்கட்கிழமை

அஷ்ரபுல்லுடன் விளையாடிய தம்பே

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளரும், மும்பை சார்பாக ரஞ்சி கிண்ணத்தில்  பங்கேற்றவருமான பிரவீன் தம்பே, தடை செய்யப்பட்டுள்ள பங்களாதேஷ் வீரரான மொஹமட் அஷ்ரபுல்லுடன் அமெரிக்காவில் தனியார் இருபதுக்கு-20 தொடரொன்றில் பங்கேற்றுள்ளார்.

பங்களாதேஷ் பிறீமியர் லீக்கில் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்டநிர்ணய முறைகேட்டில் ஈடுபட்டமை காரணமாக, அஷ்ரபுல்லுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, ஐந்து வருடத்தடை விதித்துள்ளது.

மேற்படி தொடரில் விளையாடுவதற்கு தமது அனுமதியை தம்பே நாடியிருக்கவில்லை எனவும், இந்தத் தொடரில் அவர் பங்குபற்றியமை பற்றி தமக்குத் தெரியாது என்று அவர் பிரதிநித்துவப்படுத்தும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தத் தொடர் உத்தியோகபூர்வமானது என்றோ அல்லது தான் அந்தப்போட்டியில் பங்கேற்கும் வரை அஷ்ரபுல்லின் பங்குபற்றல் பற்றித் தெரியாதெனவும் தம்பே கூறியுள்ளார்.

தம்பேயைத் தவிர, பங்களாதேஷைச் சேர்ந்த சர்வதேச வீரரான எலைஸ் சனி, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் முதற்தர  போட்டிகளுக்கான ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கும் நடிஃப் சௌத்திரி ஆகியோரும் மொஹமட் அஷ்ரபுல்லுடன் இணைந்து குறித்த இப்போட்டியில் விளையாடியுள்ளனர்.

இவர்களது பங்கேற்பு குறித்து தமக்கு தெரியாதெனவும், எந்தவித அனுமதியை கோரியிருக்கவில்லையெனவும், இது தொடர்பாக விசாரணை நடாத்தப்படும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

தடை செய்யப்பட்ட வீரருடன் இணைந்து விளையாடினால், ஒழுக்காற்று விசாரணை இடம்பெறுமா என்று கேட்கப்பட்டதற்கு, மேலதிக விவரங்கள் கிடைத்ததும் இது தொடர்பாக பதிலளிப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் பேச்சாளரொருவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .