காலையில் கைதான இரேஷாவுக்கு பகல் பிணை

பேரின்பராஜா திபான் 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரும் ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் கவர்ஸ் கோர்ப் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான, படபொல ஆராச்சிலாகே ஓனெல்ல இரேஷா சில்வா, நேற்று (10) கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அபுதாபி நகரத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால், நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்டு, நிதி​க்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.   

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தனது சேவை பெறுநர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் பணிபுரிந்து வந்தார் என்றும் விஸா காலாவதியானதால் அவர் நாடுகடத்தப்பட்டார் என்றும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் நீதிமன்றத்தில் அறிவித்தார்.  

மேலும், இந்த வழக்கில் பிரதிவாதியாகப் பெயர்குறிப்பிடப்பட்டிருந்தமையை அறிந்த இரேஷா, நாட்டுக்கு வர முயன்றபோதும், ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு வந்துள்ளமையால் அவருடைய கடவுச்சீட்டை வழங்க முடியாது என, அவர் பணியாற்றிய நிறுவனம் கூறியதாகவும் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருடைய விஸா காலவதியாகியுள்ளதாவும் குறிப்பிட்ட சட்டத்தரணி, அவருக்குப் பிணை வழங்குமாறு கோரினார்.  

அதற்குரிய ஆவணங்கள், நீதிபதி பியசேன ரணசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி பத்மால் வீரசேகர, ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.  

இதனையடுத்து, இரேஷா சில்வாவை, 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையொன்றிலும் செல்ல அனுமதியளித்த நீதிபதி பியசேன ரணசிங்க, மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.  

மேலும், அவருடைய கடவுச்சீட்டை முடக்குமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.  

2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாமல் எம்.பிக்குச் சொந்தமான கவர்ஸ் கோர்ப் நிறுவனத்தின் பங்குகளை விற்று, 30 மில்லியன் ரூபாய் பணச்சலவையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.   

அந்நிறுவனத்தின் உரிமையாளரான நாமல் ராஜபக்‌ஷ, பணிப்பாளர்களான இந்திக பிரபத் கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, சேனானி சமரநாயக்க ஆகிய ஐவருக்கு எதிராகவும் கவர்ஸ் கோர்ப் நிறுவனத்துக்கு எதிராகவுமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

இந்திக பிரபத் கருணாஜீவ, இரேஷா சில்வா ஆகிய இருவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், இன்டர்போலினூடாக, அவர்களுக்கு சர்வதேசப் பிடியாணை பிறப்பித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களை, நேற்றைய தினம் தமக்குத் தருவதாக முறைப்பாட்டாளர் தரப்பு அறிவித்திருந்ததாகவும் அவை வழங்கப்படாவிடின், சாட்சியப்பதிவுகளின் போது, தமக்குப் பாதகமாக அமையக் கூடும் என, நாமல் எம்.பி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்கவும் சட்டத்தரணி சம்பத் மென்டிஸும் கோரி நின்றனர்.  

அந்த ஆவணங்களை, அடுத்த அமர்பில் தாம் வழங்க எதிர்பார்ப்பதாக அறிவித்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி பத்மால் வீரசேகர, அதற்கொரு தினத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  

அதற்கான தினமாக, இம்மாதம் 31ஆம் திகதியை அறிவித்த நீதிபதி, இந்த வழக்கின் சாட்சியப்பதிவுக்கான தினங்களாக அடுத்தவருடம் பெப்ரவரி 16 மற்றும் 20ஆம் திகதிகளைக் குறித்தார். 


காலையில் கைதான இரேஷாவுக்கு பகல் பிணை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.