2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மென்டிஸின் சாதனையை முறியடித்த சஹர்

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்த இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஜந்த மென்டிஸின் சாதனையை இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் முறியடித்திருந்தார்.

நாக்பூரில் நேற்றிரவு நடைபெற்ற பங்களாதேஷுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் ஏழு ஓட்டங்களுக்கு, ஹட்-ட்ரிக் உள்ளடங்கலாக ஆறு விக்கெட்டுகளை  தீபக் சஹர் கைப்பற்றியிருந்தார்.

இதற்கு முன்பதாக, சிம்பாப்வேக்கெதிராக 2012ஆம் ஆண்டு எட்டு ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை அஜந்த மென்டிஸ் கைப்பற்றியதே இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகக் காணப்பட்டிருந்தது.

மேற்குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, தமது பதில் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, ஷீகர் தவானை ஆரம்பத்திலேயே ஷஃபிகுல் இஸ்லாமிடம் இழந்தபோதும், ஷ்ரேயாஸ் ஐயரின் 62 (33), லோகேஷ் ராகுலின் 52 (35) ஓட்டங்களின் துணையோடு 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 175 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஆரம்பத்திலேயே லிட்டன் தாஸ், செளமியா சர்க்காரை தீபக் சஹரிடம் இழந்தது. எனினும், தொடர்ந்து வந்த மொஹமட் மிதுனின் இணைப்பில் மொஹமட் நைம் பெற்ற 81 (48) ஓட்டங்களால் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தபோதும்,12.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள் என்ற பலமான நிலையிலிருந்து 6.3 ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு எஞ்சிய எட்டு விக்கெட்டுகளையும் தீபக் சஹர், ஷிவம் டுபேயிடம் (3) பறிகொடுத்து, 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களையே பெற்று 30 ஓட்டங்களால் தோல்வியடைந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 2-1 என பங்களாதேஷ் இழந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .