2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

'இலங்கைத் தமிழர் மீது மிகுந்த அபிமானம் உள்ளது'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
 

'இலங்கைத் தமிழர் மீது தனக்கு மிகுந்த அபிமானம் உள்ளதுடன், அவர்களை துன்புற விடமாட்டேன். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளை தனக்குப் பிடிப்பதில்லை. அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் உள்ளது. தன்னால் இலங்கை சென்று எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது என்று தமிழ்நாட்டு முதல்வராக இருந்து மறைந்த  ஜெ.ஜெயலலிதாவை நான் சந்தித்தபோது கூறியிருந்தார்' இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா சட்டத்தரணியாக வரா விட்டாலும், ஏழரைக் கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டை ஐந்து தடவைகள் சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளார் என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
 
அரசியல் செய்பவர்கள் சுயநலத்தைக் கைவிட வேண்டும் என்பதுடன், குடும்பத்தை வளர்ப்பதற்காக அரசியலுக்கு வரக்கூடாது. குடும்பத்தை இணைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்கள் நீதியாக, நியாயமாக அரசியல் செய்ய முடியாது என்ற காரணத்தால் தமது உறவுகளை தன்னுடன் இணைக்காமல் தோழி சசிகலாவை இணைத்து அரசியல் செய்தார் என்றும் அவர் கூறினார்.
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடி துளசி மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
'எமது நாட்டில் நடைபெற்ற துன்பியலை எமது அரசியல்வாதிகள் கூட இனப்படுகொலை என கூறுவதற்கு அஞ்சும்போது தமிழக சட்டசபையில் இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றினார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வரவேண்டுமானால் தனித்தமிழீழதே ஒரே தீர்வு என தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா அம்மையார்.
 
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ் நாட்டு முகாம்களில் தஞ்சமடைந்த உறவுகளுக்கு கல்வி ரீதியில் முன்னேற்றமடைய உதவிகள் வழங்கினார். சட்டத்துக்குப் பொருந்துமோ பொருந்தாதே தெரியாது. ஆனால் அவர்களுக்கு இரட்டைப் பிரஜா உரிமை என மத்திய அரவை வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டங்கள் ஆரம்பிக்கும் போதெல்லாம் இலங்கையில் இடம்பெற்ற இனபடுப்கொலைகள் தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு இந்திய அரசு ஆதரவு வழங்க வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தியவர் ஜெயலலிதா அம்மையார்.
 
எமது மக்கள் அனைத்து உரிமைகளும் பெற்று இந்த மண்ணிலே தேசிய இனம் என்று வாழக்கூடிய நிலை உருவாகுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அது எந்தளவு சாத்தியமாகும் என்று என்னால் கூறமுடியாது.
 
வடக்கு கிழக்கு இணைப்பு கூட சங்கடமான நிலையில் உள்ளது தமிழ் மக்கள் இந்த மண்ணிலே உரிமையுடன் வாழ்வதற்கு அடுத்துவரும் தமிழக தலைவர்கள் கைகொடுக்க வேண்டும்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--