2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'ஒரே நாட்டுக்குள் தமிழர்கள் வாழ வேண்டுமாயின், அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 28 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்   

தனி நாடு உருவாகாமல், ஒரே நாட்டுக்குள் தமிழர்கள் வாழ வேண்டுமாயின், தமிழர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாதெனின், அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

'இலங்கையில் சமாதான சகவாழ்வுக்கான  அணுகுமுறைகள்' பற்றிய தேசிய கருத்தரங்கு, மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இன நல்லிணக்கம் என்பது வானத்திலிருந்து வரும்; விண்கல் அல்ல. பாதாளத்திலிருந்து வெளிவரும் அற்புதப் பொருளும் அல்ல. மக்கள் மனதில் உருவாக, உருவாக்கப்பட வேண்டிய செயற்பாடாகும்.

இதற்குப் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. இதில் முதலாவது நிபந்தனையாக சமத்துவத்தைக் கொள்ளமுடியும். இனங்களுக்கு, மதங்களுக்கு மத்தியில் சமத்துவம் இருக்கும்போதே சகவாழ்வை ஏற்படுத்த முடியும்' என்றார்.  
'கடந்த காலத்தில் நாம் விட்ட தவறுகளை ஆராய்ந்து அத்தவறுகளை திருத்தும் மனப்பக்குவத்தைப் பெறவேண்டும். இந்த நாட்டிலுள்ள அனைவரும் தவறு விட்டுள்ளோம். வரலாற்றை நாம்; திரும்பிப் பார்ப்பது அந்த நிலைமைக்கு போவதற்கல்ல. அந்த இருண்ட பகுதிக்குள் மீண்டும் செல்லக்கூடாதென்பதற்காக ஆகும். அந்த நிலையை ஏற்படுத்துவதற்கு யாருக்கும் அனுமதியளிக்க முடியாது' என்றார்.

'தற்போது இனவாதம், மதவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் இல்லை. அதிகாரபூர்வமாக பகிரங்கமாக இல்லை. அவற்றை இந்த அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. தற்போது எவராவது இனவாதம், மதவாதம் பேசுவாராயின் அடுத்தவருக்குரிய மதம், மொழி, கலாசாரத்தை அவமானப்படுத்துவாராயின் அடுத்தவருக்குரிய காணிகளை அபகரிப்பாராயின்; அவர்களே இந்த நாட்டின் பிரிவினைவாதிகளாகக் கருதப்படுவர்;.

ஏன் கொடிய யுத்தத்தை சந்தித்தோம் என்பதை நாம் ஆராய வேண்டும். யுத்தம் ஆரம்பித்தமைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். அப்போதே மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடிவதுடன், சிறந்த ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்பமுடியும்.

ஒரே நாட்டுக்குள் நாங்கள் அதிகாரத்தை பகிரவேண்டும். அதிகாரங்கள் பகிரப்படுவது தொடர்பில் நாங்கள் பகிரங்கமாக பேசுவதில்லை. அதிகாரப்பகிர்வு என்பது வெறுமனே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு மட்டுமல்ல. அது ஒரு ஜனநாயக நடவடிக்கையாகும். கொழும்பில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் அனைத்து மாகாணங்களுக்கும் மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் செல்லவேண்டும். யாழ்ப்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் எவ்வாறு அதிகாரங்கள் தேவைப்படுகின்றதோ, அதேபோன்று மொனராகலைக்கும் ஹம்பாந்தோட்டைக்கும் அதிகாரங்கள் தேவைப்படுகின்றன.

தனிநாட்டை நோக்கி தமிழர்கள் செல்வார்களாயின், அது தமிழர்களுக்கு பாரிய அழிவைத் தருமென்ற உண்மையை அனைவரும் ஏற்க வேண்டும். இலக்கை அடைவதற்காக நாங்கள் ஆயுதம் ஏந்தும் கொள்கையை கைவிடவேண்டும்.
இந்த நாடு தனி ஒரு இனத்துக்கோ மதத்துக்கோ சொந்தமான நாடு அல்ல. இதுவொரு பன்மைத்துவம் வாய்ந்த நாடு என்ற உண்மையை  நாங்கள் ஏற்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

'இனப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்வரை காத்திருக்காமல் மொழிக்கொள்கையை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதிகாரத்தைப் பகிரும் பேச்சுவார்த்தைகள் எப்படி முடிவுக்கு வரும் என்பது பற்றி எனக்கு தெரியாது. அதற்கு பல காலம் நீடிக்கலாம். ஆனால், மொழி தொடர்பான சட்டம்; எனது கைகளில் இருக்கின்றன. எனது அமைச்சின் கீழே அரச கரும மொழிகள் திணைக்களம் இருக்கின்றது. அரச கரும மொழிகள் ஆணைக்குழு இருக்கின்றது. தேசிய மொழிகள் பயிலகம் இருக்கின்றது. இந்த நிலையில், தமிழ் மொழியும் சிங்கள மொழியும் ஆட்சி மொழிகள் நிர்வாக மொழிகள் என்ற  சட்ட ரீதியான கொள்கையையும் ஆங்கிலமொழி இணைப்பு மொழி என்பதையும் சட்டரீதியாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளேன். பல குறைபாடுகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

25 மாவட்டங்கள் மற்றும் 332 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்வாங்கி அவற்றுள் தேர்ந்தெடுத்து மொழி பெயர்ப்பாளர்களையும் உரை பெயர்ப்பாளர்களையும் நியமிப்பதற்கு முடிவு செய்துள்ளேன்.

இந்த அமைச்சினை நான் ஏற்கும்போது உடைந்து போன, தொலைந்து போன ஒரு அமைச்சாக இருந்தது.
இந்த அமைச்சுக்கு ஒரு தூரப்பார்வை இருக்கவில்லை. இந்த அமைச்சின் முக்கியத்துவத்தை சரியான முறையில் அதிகாரிகள் உணர்ந்திருக்கவில்லை.

அமைச்சுப் பொறுப்பேற்றதன் பிறகு கடந்த ஆறு மாத காலமாக உள்ளக ரீதியாக சீர்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு இதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்.

நாடு முழுக்க இந்த அமைச்சின் வீச்சை கொண்டு செல்ல தீர்மானித்துள்ளேன். இந்த அமைச்சை விளையாட்டுத்தனமாக முன்கொண்டு செல்லப் போவதில்லை. யாரும் இந்த அமைச்சில் இருந்து கொண்டு விளையாடுதவற்கு அனுமதிக்கப்போவதில்லை' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X