2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

'29,000 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுகின்றது'

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  29,000 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்னம் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இனம் காணும் ஆய்வு தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29000 குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணத்தினை மாதார்ந்தம் பெறுகின்றனர்.அதற்கென மாதமொன்றுக்கு 185 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு வருகின்றது.

வறுமை இல்லாத சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக 1994ஆம் ஆண்டு சமுர்த்தி வறுமை ஒழிப்புத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 1997ஆம் ஆண்டுக்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தது.

சமுர்த்தி நிவாரணம் பங்கீட்டு அட்டையாக வழங்கப்பட்டு அதற்கு பயனுகரிகள் உணவுப் பொருட்களை பெற்று வந்தனர். பின்னர் 2014ஆம் ஆண்டிலிருந்து வாழ்வின் எழுச்சித் திணைக்களமாக இது மாற்றப்பட்டதையடுத்துஆ சமுர்த்தி நிவாரணம் பணமாக சமுர்த்தி வங்கிச் சங்கங்களில் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.இந்த நிவாரணத்தின் தொகை இவ்வருடம் ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் அதிகரித்தது.

ஆனால், இது தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகின்றதா என்பதுதான் இன்றுள்ள கேள்வியாகும்.நாளார்ந்தம் இது தொடர்பான முறைப்பாடுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதனைக் கருத்திற்கொண்டு சமுர்த்தி நிவாரணத்தை தகுதியானவர்களுக்கு வழங்குவதற்காக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இனம் காணும் ஆய்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை கிராமத்திலுள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து மேற் கொள்ளவுள்ளனர். இந்த ஆய்வின் பின்னர் தகுதியானவர்களை இனம் கண்டு அவர்களுக்கான சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இந்த ஆய்வின் போது சரியான தகவல்களை பெறுவதுடன் குடும்பம் உறவு தெரிந்தவர்கள் என பாகுபாடு பார்த்து மேற்கொள்ளக் கூடாது. சரியான முறையில் இந்த தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

இதில் காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா, காத்தான்குடி பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமையக முகாமையாளர் பாத்தும்மா பரீட், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .