2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கையெழுத்துவேட்டை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 12 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கையெழுத்துவேட்டை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 'இன்னும் ஏன் பார்த்திருக்க வேண்டும்' எனும் தலைப்பு இடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு சம உரிமை இயக்க உறுப்பினர்களால்; விநியோகிக்கப்பட்டன.

சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், இராணுவத்தினரை முகாம்களுக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என்பதுடன், குடியிருப்புகளிலிருந்து முகாம்களையும் அகற்ற வேண்டும், காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் துரித விசாரணை மேற்கொண்டு அவர்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும், அவர்களுக்கான உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைளை முன்வைத்து கையெழுத்துவேட்டை முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களின் கையொப்பங்களை பெற்று சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளதுடன், காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் தொடர்பிலும்; சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கச் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரி.கிருபாகரன் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரி.கிருபாகரன், 'வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் மௌனம் காக்காமல் காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் விவரங்களை வெளியிட வேண்டும்' என்றார்.  

'நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்களுடன் இருந்த இயக்கங்களும் கட்சிகளும்தான் ஆட்களை கடத்துவதிலும் காணாமல் செய்வதிலும் ஈடுபட்டார்கள். இந்த நாட்டில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் என பலர் காணாமல் போயுள்ளதுடன் கடத்தப்பட்டுமுள்ளார்கள். இவர்களின் விவரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்.
அபிவிருத்தி எனும் பெயரால் பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இப்போதாவாது யுத்தப்பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இராணுவத்தினரை முகாம்களுக்குள் மட்டுப்படுத்த வேண்டும். காணாமல் போன கடத்தப்பட்டவர்களின் விவரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

உரிமைகளை வென்றெடுப்பதாயின் போராட்டமின்றி வழி கிடையாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து புதிய ஜனாதிபதியை  நியமிப்பதற்கு வடக்கு கிழக்கு மக்களின் 85 வீதத்திற்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்தனர்.

தற்போதைய ஜனாதிபதி, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் சிறைக்கைதிகளை விடுதலை செய்வதாகவும் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கோர் குறித்து முறையான விசாரணை நடாத்தி அந்தக் குடும்பங்களைச்; சேர்ந்தவர்களுக்கு நீதி கிடைக்க செய்வதாகவும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

இராணுவ முகாம்களுக்கான அபகரித்த மக்களின் காணிகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதாகவும் யுத்தத்தினால் அழிந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் யுத்தத்தினால் அழிந்த பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்.

இப்போது புதிய ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்கள் கடந்து விட்டது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் சென்று விட்டது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் காணாமல் போன கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விவரங்களை வெளியிடுமாறும் சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் அரசாங்கத்தை வலயுறுத்துகின்றோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .