2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

சிப்தொற புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Suganthini Ratnam   / 2016 ஜூலை 19 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக சமூர்த்திப் பயனாளிக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கான தெரிவு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளது என  அத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்ணம் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை  பாடசாலைகளிலும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களிடமும் பெறமுடியும் என்பதுடன், இம்மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் கல்வியாண்டுவரையான 540 மாணவர்களுக்கும் 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் கல்வியாண்டு வரையான 540 மாணவர்களுமாக மொத்தம் 1,080 பேருக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 1,500 ரூபாய் படி 02 வருடங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையக முகாமையாளர்கள் மற்றும் அதன் அபிருத்தி உத்தியோகத்தர்களால் பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலுடன் தெரிவு மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்புலமைப்பரிசிலுக்கு தெரிவாகும்  மாணவர்கள், திவிநெகும சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் குடும்ப அங்கத்தவராக இருக்கவேண்டும். அத்துடன் 2014ஆம், 2015ஆம் ஆண்டுகளில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதியவர்களாக இருக்க வேண்டும். இதேவேளை 2017ஆம், 2018ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களாக இருக்கவேண்டும்.

ஏனைய புலமைப்பரிசில் கொடுப்பனவு பெறாதவர்களாகவும்; உரிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். குறித்த மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்று அதில் தெரிவாகும்; மாணவர்களின் பெயர் விவரங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதிக்கு முன்னர் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் கொழும்பில் உள்ள சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X